Ad

வெள்ளி, 15 ஜூலை, 2022

டாக்ஸ் ஃபைலிங்... யார், எந்தத் தேதிக்குள் செய்ய வேண்டும்?

வருமான வரி விதிகள் ஆண்டுக்கு ஆண்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போதைய நிலையில், வருமான வரி செலுத்தியவர்கள், வருமான வரி செலுத்தா விட்டாலும் வரி வரம்பைத் தாண்டிய வருமானம் உள்ளவர்கள், வரி வரம்புக்கு உட்பட்ட வருமானம் உடையவராக இருந்த போதிலும், அறிவிக்கப்பட்டுள்ள சில பணப் பரிவர்த்தனை செய்தவர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் கட்டாயம் வரித்தாக்கல் செய்ய வேண்டும்.

ப.முகைதீன் சேக்தாவூது

வரித்தாக்கல் செய்ய வேண்டிய 5 வகையினர்...

வரித்தாக்கல் செய்ய வேண்டியவர்கள் ஐந்து வகையினர். இந்த ஐந்து வகையினருக்கும் வரித் தாக்கல் கடைசித் தேதி வேறு வேறாகும்.

1. வருமான வரிப்பிரிவு 92E-யின்படி, படிவம் 3CEB சமர்ப்பிக்க கடமைப்பட்ட நிறுவனங்களுக்கான கடைசி தேதி 31.10.2022. 2. கார்ப்பரேட் அல்லது கார்ப்பரேட் அல்லாத எந்தவொரு நபருக்குமான (படிவம் 3 CEB சமர்ப்பிக்க கடமைப்பட்டவர்கள்) கடைசி தேதி 30.11.2022. 3. (நிறுவனம் அல்லாத) வருமான வரி விதி அல்லது வேறெந்த விதியின் கீழும் கணக்குத் தணிக்கைக்கு உட்பட்ட நபர்களுக்கு மான கடைசி தேதி 31.10.2022. 4. கூட்டு வியாபார நிறுவனத்தின் செயல்முறை பங்குதாரர்களுக்குமான கடைசி தேதி பங்குதாரர் (இதன் கணக்குகள் தணிக்கைக்கு உட்பட்டவை) 31.10.2022. 5. இதர வரிதாரர்களுக்கான வரித்தாக்கல் கடைசி தேதி 31.07.2022. எனவே, அவரவருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தேதிக்குள் வரித்தாக்கல் செய்துவிடுவது அவசியம்.

இதர வரிதாரர்கள் என்பவர்கள் யார்?

இதர வரிதாரர்கள் யார் எனில் தனிநபர், சம்பளதாரர்கள், மருத்துவர், பொறியாளர், தணிக்கையாளர் போன்ற சுயதொழில் செய்வோர் ஆவார். ரூ.2 கோடிக்கு உட்பட்ட டேர்ன் ஓவர் கொண்ட சிறுதொழில் நிறுவனத்தை நடத்துபவர் (பிரிவு 44 AD-யின்படி, உத்தேச வரித்திட்டத்தைத் தேர்வு செய்தோர்) 31.07.2022-க்குள் வரித் தாக்கல் செய்ய வேண்டியவர்கள் ஆவர். சில உதாரணங்கள் மூலம் இதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வோம்.

* வனஜா என்பவரின் வயது 55. 2021-22-க்கு வருமானம் ரூ.3 லட்சம். இவர் வருமான வரி கட்டத் தேவையில்லை. என்றாலும், வரிவரம்பு 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ.2.5 லட்சம். இவரது வருமானம் ரூ.3 லட்சம். எனவே, இவர் வரித் தாக்கல் செய்ய வேண்டும்.

* தாமஸ் என்கிற சம்பளதாரருக்கு வயது 59. இவரது மொத்த வருமானம் 2021-22-ல் ரூ.6 லட்சம். 80C முதல் 80U வரையான வரிச்சலுகை ரூ.3 லட்சம். இவரது வரிக்குரிய வருமானம் ரூ.3 லட்சம். இவரும் வரி கட்டத் தேவையில்லை. என்றாலும் வரித்தாக்கல் செய்ய வேண்டும்.

* 65 வயது கமலின் 2021-22 பென்ஷன் வருமானம் ரூ.3,25,000. பிற வருமானம் இல்லை. ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு பிடித்தம் ரூ.20,000. நிகர வருமானம் வருமானம் ரூ.3,05,000. 65 வயதான மூத்த குடியினருக்கு வரி இல்லா வருமான வரம்பு ரூ.3 லட்சம் மட்டுமே. இவரது வரிக்குரிய வருமானம் ரூ.3,05,000 என்பதால், இவர் வரித்தாக்கல் செய்வது அவசியம்.

* மருத்துவர் மாதவனின் 2021-22-க்கான வருமானம் ரூ.18.5 லட்சம். இவர் வருமான வரிப்பிரிவு 44 AD-யின்படி, உத்தேச வரித் திட்டத்தைத் தேர்வு செய்துள்ளார். இவரது வருமானம் ரூ.50 லட்சத்துக்கு உட்பட்டு இருப்பதால், இவர் வரி செலுத்து வார். 31.7.2022-க் குள் இவர் வரித்தாக்கல் செய்தாக வேண்டும்.

* ராகுல் ஆடைத் தொழிலகம் நடத்தி வருகிறார். 2021-22-க்கு இவரது நிறுவனத்தின் டேர்ன்ஓவர், ரூ.1,85,00,000. இவரும் வரிப் பிரிவு 44 AD-யின்படி, உத்தேச வரித் திட்டத்தைத் தேர்வு செய்துள்ளார். தொழிலக வருமானம் ரூ.2 கோடிக்கு உட்பட்டிருப்பதால், கணக்குத் தணிக்கை அவசியமில்லை. எனவே, இவரது வரித்தாக்கல் தேதி 31.7.2022.

* ஜான் என்பவர் கே.கே என்டர்பிரைசஸில் ஒரு பங்குதாரர். கே.கே என்டர்பிரைசஸின் 2021-22 வணிக வரவு ரூ.1.80 கோடி. உத்தேச வருமானம், விற்பனைத் தொகையில் 8% என அறிவித்திருப்பதால், இந்த நிறுவனத்தின் வரவு ரூ.2 கோடிக்குள் இருப்ப தால், கணக்குத் தணிக்கை கிடையாது. இவர் 31.7.2022-க்குள் வரித்தாக்கல் செய்தாக வேண்டும்.

* லலிதா என்பவர் இல்லத் தலைவி. இவருக்கு வருமான ஆதாரம் இல்லை. என்றாலும் 2021-22 நிதியாண்டில் மின் கட்டணமாக ரூ.1.40 லட்சம் செலுத்தியுள்ளார். வருமான எதுவும் இல்லை என்றாலும், ஒரு நிதியாண்டில் செலுத்தப் பட்ட மின் கட்டணம் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பின் வரித்தாக்கல் கட்டாயம். எனவே, இவரும் 31.7.2022-க்குள் வரித்தாக்கல் செய்யக் கடமைப்பட்டவர்.

* ரகுராமன் என்ற சம்பள தாரரின் 2021-22 நிதியாண்டு வருமானம் ரூ.2.4 லட்சம். இவர் தன் அண்ணனை விடுமுறை பயணமாக சிங்கப் பூருக்கு அனுப்பி வைத்தார். இதற்காக, 2021-22 நிதி ஆண்டில் இவர் செய்த செலவு ரூ.2.2 லட்சம். இவரும் 31.7.2022-ல் வரித் தாக்கல் செய்ய வேண்டும். ஏனெனில், இவரது வருமானம் ரூ.2.4 லட்சம் மட்டுமே. அதாவது, வரி வரம்புக்கு உட்பட்டு இருக்கிறது. ஆனால், தன் உறவினருக்கான வெளி நாட்டுப் பயணத்துக்கு ரூ.2 லட்சத்துக்குமேல் செலவு செய்துள்ளதால், இவர் வரித் தாக்கல் செய்வது கட்டாயம்.இது 2020-21 மதிப்பீட்டு ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த விதி ஆகும்.

* மாடசாமி என்பவர் சிறு வணிகர். 2021-22-ன் வருமானம் ரூ.2 லட்சம். இவர் 2022-22-ல் ரூ.1.1 கோடியை இரண்டு நடப்புக் கணக்கு களில் டெபாசிட் செய்துள் ளார். அந்த வகையில் இவரும் 31.7.2022-க்குள் வரித்தாக்கல் செய்ய வேண்டும். அதாவது, வருமானம் வரி வரம்புக்குக்கு கீழே இருந்தாலும் ஒரு நிதி ஆண்டில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நடப்புக் கணக்கில் ரூ.1 கோடிக்கு மேல் டெபாசிட் செய்திருந்தால் வரித் தாக்கல் செய்வது கட்டாயம் ஆகும்.

30.11.2022-க்குள்...

* கேயார் மினரல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தாதுப்பொருள் வர்த்தகம் செய்கிறது. இந்த நிறுவனம் வருமான வரிப் பிரிவு 92-E-யின்படி படிவம் 3 CEB-யில் அறிக்கை சமர்ப் பிக்கக் கடமைப்பட்டது. இதற்கான வரித்தாக்கல் தேதி 30.11.2022 ஆக இருக்கும்.

31.10.2022-க்குள்...

* விஸ்வா எம்.எம் டிரேடிங் கம்பெனியின் பங்குதாரர். 2021-22-க்கான வணிக வருமானம் ரூ.2.84 கோடி. நிறுவனம் மூலமான ஊதியம், வட்டி மற்றும் லாபப் பங்கு தவிர, விஸ்வாவுக்கு இதர வருமானம் கிடையாது. நிறுவனத்தின் வணிக வரவு ரூ.2 கோடியைத் தாண்டி உள்ளதால், பிரிவு 44 AD-யின் படி, உத்தேச வரிக்கு உட் படாது. மேலும், நிறுவனத்தின் கணக்குகள் பிரிவு 44AB-யின் படி, தணிக்கைக்கு உட்பட்டவை. எனவே, விஸ்வாவும், அவர் பங்குதாரராக உள்ள எம்.எம் டிரேடிங் கம்பெனியும் 31.10.2022-க்குள் வரித்தாக்கல் செய்ய வேண்டும்.

* பாவா விவசாய விளைபொருள் விற்பனை செய்யும் வியாபாரி. 2021-22-ல் இவரது வணிக வரவு ரூ.84 லட்சம். இவர் பிரிவு44AD-யின்படி, உத்தேச வரித் திட்டதைத் தேர்வு செய்யாதவர். மேலும், வணிகம் மூலமான வருமானம் விற்பனையில் 8 சத விகிதத்துக்கும் குறைவு என்று தெரிவித்துள்ளார். எனவே, இவரது வணிகக் கணக்குகள் தணிக்கைக்கு உட்படும். எனவே, இவர் 31.10.2022-க்குள் வரித் தாக்கல் செய்ய வேண்டும்.

புதிய விதிகள் சொல்வதென்ன..?

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கடந்த 21.04.2022 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி, கீழ்க்கண்டவர்களும் வரித்தாக்கல் செய்ய வேண்டும்.

1. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளில் ரூ.50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் வரித்தாக்கல் செய்ய வேண்டும். (முன்பு இது ரூ.1 கோடிக்கு மேல் என இருந்தது, தற்போது ரூ.50 லட்சமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.)

2. வணிக மொத்த வரவு முந்தைய ஆண்டில் ரூ.60 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால், வரித்தாக்கல் அவசியம்.

3. தொழில் மூலம் மொத்த வரவு ரூ.10 லட்சத்துக்கும் அதிகம் என்றாலும் வரித் தாக்கல் செய்வது அவசியம்.

4. வரி வசூல் அல்லது வரிப்பிடித்தம் ரூ.25,000-க்கும் அதிகம் எனில் வரித்தாக்கல் அவசியம். (மூத்த குடியினருக்கு ரூ.50,000).

தாமதமான தாக்கல்...

வரித்தாக்கலுக்கான கடைசித் தேதி வேறாக இருந்தாலும் அனைத்துப் பிரிவினரும், தனக்குரிய தேதியில் வரித்தாக்கல் செய்யத் தவறி இருந்தால் அபராதத்துடன் வரித் தாக்கல் செய்ய கடைசி தேதி 31.12.2022.

மூத்த குடிமக்களின் கவனத்துக்கு!

60 வயதுக்கு உட்பட்டவரின் மொத்த வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேற்பட்டாலும், 60 வயதுக்கு மேற்பட்டவரின் மொத்த வருமானம் ரூ.3 லட்சத்துக்கு அதிகமானாலும், 80 வயது கடந்தவர்களின் மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமானாலும் வரித்தாக்கல் செய்ய வேண்டும். மேற்கண்ட வருமான வரம்பு பிரிவு 80C முதல் 80U வரையான சலுகைகளைக் கழிப்பதற்கு முந்தைய தொகை என்பது கவனிக்கத்தக்கது.



source https://www.vikatan.com/business/tax/guidance-for-tax-filing-3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக