Ad

செவ்வாய், 26 ஜூலை, 2022

``அதிமுக-வை எதுவுமே செய்ய முடியாது" - ஐ.டி ரெய்டு குறித்து ஆர்.பி.உதயகுமார் அட்டாக்

``ஒற்றைத் தலைமைக்கு வந்த பின்னர் எடப்பாடி பழனிசாமி சர்வதிகாரியாகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறதே?"

``பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் என 99 சதவிகிதம் பேர் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, கட்சியை வலிமையோடு கட்டுக்கோப்பாக எம்.ஜி.ஆர்., அம்மா வழியில் கொண்டு வரவேண்டும் என்று தீர்மானித்து, அதற்கான பணியைத்தான் எடப்பாடியார் செய்கிறார். தி.மு.க அரசுக்கு எதிராக சில உறுதியான நடவடிக்கைகளை செய்துதான் ஆகவேண்டும்"

ஆர்.பி.உதயகுமார்

``கட்சிக்காக எடப்பாடி தியாகம் செய்வதாகத் தொடர்ந்து கூறுகிறீர்கள். அப்படி என்ன தியாகம் செய்தார்?"

``தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இரு தரப்புக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், எதிர்த்தரப்பு நபர்களுக்கு பெயில் எடுக்கவே ஆள் இல்லை. ஆனால், எடப்பாடியாரின் ஆதரவாளர்கள் பெயிலில் வெளியே எடுக்கப்பட்டுள்ளனர். இதைத்தான் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது ஒரு சின்ன எடுத்துக்காட்டுதான். பொதுச் செயலாளராகிய பின்னர், பல பிரச்னைகளை அவர் சந்தித்து வருகிறார். அதைதான் தொடர்ந்து கூறிவருகிறேன்."

``ஓ.பி.எஸ்-ஸை கடுமையாக விமர்சித்த உங்களுக்கு அவரின் பதவியே பரிசாக வழங்கப்பட்டுள்ளதா?"

``தனக்கு ஒன்று இல்லையென்றால், அது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று நினைக்கிறார். தனக்கு ரெண்டு கண் போனால், எதிரிக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என்று நினைப்பவர். அதுகுறித்துதான் பேசினேன். அதேநேரத்தில், உழைக்கிற தொண்டனுக்குப் பதவி கொடுப்பதில், அம்மாவின் மறு உருவமாக எடப்பாடி இருக்கிறார். அதன்படிதான், எனக்கு துணைத் தலைவர் பதவி கிடைத்துள்ளது. இதை கனவிலும்கூட நான் நினைத்துப் பார்க்கவில்லை. இது என் பிறவிப் பயனை அடையக்கூட வாய்ப்பு. யாரின் பதவியும் நிரந்தரமில்லை. அதன்படி, எனக்குக் கிடைத்த பதவி அவருக்கானது இல்லை."

ஆர்.பி.உதயகுமார்

"எடப்பாடி பழனிசாமி மீது தனிநபர் புகழ்ச்சி அதிகமாக இருக்கிறதே?"

"அவர்தான் எங்களுக்குத் தலைவர், பொதுச் செயலாளர், வழிகாட்டி, எதிர்காலம், நம்பிக்கை, நாளை முதல்வர். அவரின் புகழையும், செயலையும், சாதனைகளையும் எடுத்துச் சொல்லவேண்டியது எங்கள் கடமை. எங்களின் லட்சியமே அவர் முதல்வராக இருந்து ஆற்றிய பணியை மக்களிடம் எடுத்துச் செல்லி, மீண்டும் முதல்வராக்குவதுதான். அதற்காக அவரின் புகழை பேசித்தான் ஆகவேண்டும்"

"சமூகம் ரீதியாக அ.தி.மு.க பிளவுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே?"

``அப்படியெல்லாம் இல்லை. அப்படி ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. கையாளாகாத நபர்கள் பொய்யான தகவலை பரப்புகிறார்கள். கடந்த சட்டமன்றத்தில் கொங்குப் பகுதியில் அதிக சீட் வென்றோம். அதேபோல, சோழ மண்டலத்திலும், தென் மாவட்டங்களிலும் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் தலைமைக்கு இருக்கதானே செய்யும்.

ஆர்.பி.உதயகுமார்

அதற்காக தலைமை வியூகம் வகுத்துக் கொண்டே இருக்கும். எந்தெந்த பகுதியில் யாருக்கு பிரதிநித்துவம் உள்ளதோ, அதற்கு அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது. அதில் தவறில்லை. அம்மா இருந்ததுபோலவே, சாதி, மத வேறுபாடு இல்லாமல், எடப்பாடியார் தலைமையில் கட்சி செயல்படுகிறது"

"ஓ.பி.எஸ்-ஸுக்கு பதிலாக அதே சமூகத்தின் முகமாக ஆர்.பி.உதயகுமார் முன் நிறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறதே?"

``ஓ.பி.எஸ் அ.தி.மு.க தொண்டனாகதான் அடையாளப்படுத்தப்பட்டார். அவரின் உழைப்பால் உயர்ந்து இருக்கிறார். மாற்றுக் கருத்தில்லை. அ.தி.மு.க மிட்டா மிராசு, அம்பானி, அதானி போன்றவர்களை நம்மி இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை. ஏழை எளிய சாமானிய மக்களை நம்பிதான் ஆரம்பிக்கப்பட்டது. யாரும் யாருடைய முகமில்லை."

ஆர்.பி.உதயகுமார்

``அ.தி.மு.க மூத்த தலைவர்களின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெறுகிறதே?"

``பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால், எல்லா சத்திய சோதனைகளையும் கடந்துதான் ஆகவேண்டும். மக்களின் நலனுக்காகச் சிறைச்சாலை செல்லவும் தயாராக இருக்கவேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியினால், எல்லா பிரச்னையும் வரத்தான் செய்யும். அ.தி.மு.க-வை அழிக்க நினைப்பவர்களால் எதுவுமே செய்ய முடியாது. விருட்சமாக நாங்கள் வளர்ந்து கொண்டே இருப்போம்."



source https://www.vikatan.com/government-and-politics/politics/interview-with-udayakumar-regarding-new-post-in-place-of-opanneerselvam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக