Ad

வெள்ளி, 1 ஜூலை, 2022

``பாஜக, சிபிஎம் வன்முறையின் பக்கம் செல்கின்றன" - வயநாட்டில் கொதித்த ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி-யாக உள்ளார். வனத்தை ஒட்டியுள்ள ஒரு கிலோமீட்டர் தூரத்தை பஃபர் சோனாக அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து ராகுல் காந்தி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை எனக்கூறி சி.பி.எம் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ, வயநாட்டில் கடந்த 24-ம் தேதி பேரணி நடத்தியது. பேரணியாக சென்றவர்கள் கல்பற்றாவில் உள்ள ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகத்தை அடித்து உடைத்தனர்.

தனது எம்.பி அலுவலகம் உடைக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி எந்த கருத்தும் கூறாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று தனது தொகுதியான வயநாட்டுக்கு வந்திருந்தார் ராகுல் காந்தி. கண்ணூர் விமான நிலையத்துக்கு வந்த ராகுல் காந்தியை கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிடோர் வரவேற்றனர். பின்னர் ராகுல் காந்தி கல்பற்றாவில் உள்ள தனது எம்.பி அலுவலகத்தை பார்வையிட்டார்.

உடைக்கப்பட்ட தனது எம்.பி அலுவலகத்தை பார்வையிடும் ராகுல் காந்தி

எம்.பி அலுவலகத்தில் உடைக்கப்பட்ட ராகுல் காந்தியின் போட்டோ, அவரின் இருக்கையில் நடப்பட்ட வாழை மரம் உள்ளிட்டவைகளை நிர்வாகிகள் காண்பித்தனர். தனது இருக்கையில் வைக்கப்பட்ட வாழை மரத்தை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு, அதே இருக்கையில் அமர்ந்தார் ராகுல் காந்தி. பின்னர் அலுவலகத்தில் தாக்குதலுக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டார்.

தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, "எனது அலுவலகம் தாக்கப்பட்டது துரதிஷ்டவசமானது. இது வயநாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அல்ல, வயநாட்டு மக்களின் அலுவலகம். அப்படிப்பட்ட அலுவலகத்தை தாக்கியுள்ளார்கள்.

அலுவலகத்தை தாக்கும் செயலை செய்தது குழந்தைகள்தான். அது ஒன்றும் பிரச்னை இல்லை. இது பழமைவாத முறை என்றாலும், குழந்தைகளால் செய்யப்பட்ட செயலாகும். அதில் எனக்கு கவலையோ, கோபமோ இல்லை. குழந்தைகளின் இந்த செயல் மறக்கக்கூடியதுதான். ஆனால் வன்முறை எதற்கும் தீர்வு இல்லை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்" எனக் கூறினார்.

பொதுக்கூட்டத்தில் பேசும் ராகுல் காந்தி

பின்னர் ராகுல் காந்தி தலைமையில் பத்தேரி பகுதியில் விவசாயிகளுக்கு எதிரான மத்திய மற்றும் கேரள மாநில அரசுகளை கண்டித்து நடைபயணம் நடைபெற்றது. பேரணிக்கு பின்னர் பத்தேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "பா.ஜ.க, சி.பி.எம் கட்சிகளின் சித்தாந்தங்கள் வன்முறையானவை. வன்முறையின் மீது நம்பிக்கை கொண்டு, அதன் மூலம் மக்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார்கள். அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடத்தி பா.ஜ.க என்னை பயப்படுத்த பார்க்கிறது. அதற்காக 5 நாள்கள் அமலாக்கத்துறையைக் கொண்டு விசாரணை நடத்தினார்கள். இதனால் நான் பயந்துவிடுவேன் என பிரதமர் நினைக்கிறார்.

ராகுல் காந்தி - மோடி

அதுபோல எனது அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி என்னை மிரட்டலாம் என சி.பி.எம் பார்க்கிறது. பா.ஜ.க-வும், சி.பி.எம் கட்சியும் வன்முறையை நம்புகின்றன. ஆனால், வன்முறை மூலம் மக்கள் மனதை மாற்ற முடியாது. ஆத்ம தைரியம் இல்லாததால் பா.ஜ.க, சி.பி.எம் ஆகியவை வன்முறையின் பக்கம் செல்கின்றன" என்றார். வரும் 3-ம் தேதி வரை வயநாட்டில் பல நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி கலந்துகொள்கிறார். பின்னர் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வரும் 4-ம் தேதி டெல்லி புறப்பட்டு செல்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rahul-gandhi-slams-bjp-cpm-in-kerala-wayanad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக