Ad

சனி, 16 ஜூலை, 2022

`தாலி ஆண்களுக்குத்தான் புனிதம், பெண்களுக்கல்ல!’ - ஒரு தீர்ப்பில் பற்றிக்கொண்ட நெருப்பு

''சென்னை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய விவாகரத்து தீர்ப்பொன்றில் தாலியை மேற்கோள் காட்டிய சில வரிகளும் இருந்தன. அதுதான் தற்போது இந்தியா முழுக்க சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியிருக்கிறது.

ஈரோட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், குடும்பநல நீதிமன்றம் தனக்கு விவாகரத்து கொடுக்க மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், 'மனைவி தன் ஒழுக்கத்தை சந்தேகித்து, தன்னுடைய பணியிடத்துக்கு வந்து செய்த பிரச்னைகளில் ஆரம்பித்து தாலியைக் கழற்றி வைத்தது வரை' கணவர் தன் தரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்க, இந்து திருமணச் சட்டம் பிரிவு 7-ன் படி தாலி அவசியமில்லை என்று மனைவி தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

விவாகரத்து

வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'கணவரைப் பிரிந்த நேரத்தில், மனைவி தன் தாலியைக் கழற்றியதை நீதிமன்றம் கவனிக்கிறது. தாலி கட்டுவது திருமணத்தில் இன்றியமையாத சடங்கு; அதை அகற்றுவது சம்பிரதாயமற்ற செயல்' என்று கருத்து தெரிவித்து, விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது. இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியாக ஆரம்பித்ததும், 'தாலிதான் வேலி, தாலிக்கயிறு புனிதம், தாலி வரம் கேட்பது, ’அந்த ஏழு நாள்கள்’ முதல் ’சின்னத்தம்பி’ வரை தாலி சென்டிமென்ட் படங்களாகப் பார்த்து வளர்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாக நீதித்துறையும் இருக்கிறது' என்ற கருத்தில் ஆரம்பித்து, 'மெட்டியை கழட்டினா கணவருக்கு என்ன மாதிரி வலி வரும்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்' என்கிற மீம்ஸ் வரை சோஷியல் மீடியாவில் போஸ்ட்கள் பறந்துகொண்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம், இந்தத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள கணவரை மனரீதியாக கொடுமைப்படுத்துகிற மனைவியின் நடவடிக்கைகள்பற்றிய வரிகளையும், தாலி பற்றிய சில வரிகளையும் இணைத்து தலைப்புகள் வைக்கப்பட்டதாகச் செய்திகளும், அது தொடர்பான விளக்கங்களும் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஒரு விவாகரத்து வழக்கில் தாலி சென்டிமென்ட் குறித்து இடம்பெற்றிருக்கிற சில வரிகள் குறித்து முன்னாள் அமைச்சர் பா. வளர்மதியிடமும், சில பெண்ணிய செயற்பாட்டாளர்களிடம் கருத்துக் கேட்டோம்.

முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி

''ஆணும் பெண்ணும் திருமண வாழ்க்கையில் இணைகிறபோது தாலிகட்டிக் கொள்ளுதல் தலைமுறை தலைமுறையாக நம் சமூகத்தில் இருந்து வருகிறது. கலாசாரமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பகுத்தறிவுவாதிகள், கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர்கள் தாலி கட்டிக் கொள்ளாமல் திருமண வாழ்க்கையில் இணைந்திருக்கிறார்கள். அது அவர்களுடைய கொள்கைரீதியான முடிவு. இரண்டிலுமே தனி நபர்கள் கருத்து சொல்ல முடியாது; சொல்லவும் கூடாது. மற்றபடி, தாலியை புனிதமாக நினைப்பவர்களும் கணவனை கடவுளாக வணங்குபவர்களும் இந்தக் காலத்திலும் இருக்கவே செய்கிறார்கள்'' என்றார் பா. வளர்மதி.

''தாலிகட்டுதல் என்பது பெண்ணை அடிமை செய்தல் என்பதை சமுதாயம் இப்போதுதான் மெள்ள மெள்ள உணர ஆரம்பித்திருக்கிறது. தற்போதைய சமுதாயத்தில் இந்த முற்போக்கு எண்ணங்கள் வந்துகொண்டிருக்கும்போது ஒரு தீர்ப்பில் தாலியை முக்கிய அம்சமாக வைத்து வரிகள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. தாலி குறித்த மூட நம்பிக்கைகளைக் கண்டிக்க வேண்டிய நீதித்துறை, விவாதத்துக்குரிய வரிகளை தன்னுடைய தீர்ப்பில் இடம்பெறச் செய்தது தொடர்ந்து பல வருடங்களாகப் பெண் விடுதலைக்காக இயங்கிக் கொண்டிருக்கிற என்னைப் போன்றவர்களுக்கு பெரும் சோர்வை அளித்துவிட்டது'' என்கிறார் பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியா.

பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியா.

பெண்ணிய செயற்பாட்டாளர் ஷாலின் மரிய லாரன்ஸ் தாலி கட்டும் வழக்கம்பற்றி பேசுகையில், ''உலகின் பல நாடுகளில் தாலியே கிடையாது. இவ்வளவு ஏன், நம் சங்க இலக்கிய காலத்தில்கூட தாலி கிடையாது. பூவில் மாலை கோத்து அணிந்துகொள்வதுதான் நம் பண்பாடு. வேறொரு பண்பாட்டிலிருந்து நம் பண்பாட்டுக்குள் வந்ததுதான் தாலி. தாலி கட்டிக்கொண்டால்தான் அந்தப் பெண் திருமணமானவள் என்பது பார்ப்பவர்களுக்குத் தெரியும் என்கிறார்கள். அப்படியென்றால், ஆணுக்குத் திருமணமானது வெளியே தெரியக்கூடாதா? பாலியல் ஒழுக்கக்கேடுகளில் அதிகமாக ஈடுபடும் ஆண்களுக்குத்தானே தாலி, மெட்டி, மஞ்சள், குங்குமம் போன்ற அடையாளங்கள் அணிவிக்கப்பட வேண்டும்?

மேலோட்டமாக பார்த்தால் பெண்கள்தான் தாலியைப் புனிதமாகப் பார்ப்பதுபோல தெரியும். ஆனால், 'மனைவி தாலியைக் கழட்டினால் தன் உயிர் போய்விடுமோ' என்று பயப்படுகிற அளவுக்கு ஆண்கள்தான் தாலியை புனிதமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

திருமணமான பெண்ணுக்குத் தாலிதான் அடையாளம் என்பார்கள். ஆனால், அந்தத் தாலி வெளியே தெரியக்கூடாது என்பார்கள். கழட்டி வைத்தால் பெரிய குற்றமாக்கி விடுகிறார்கள். தாலிதான் கணவரின் ஆயுளை நீட்டிக்கும் என்கிறார்கள். ஆனால், தாலிக் கட்டிக்கொண்டிருக்கும் பெண்களின் கணவர்களும் வயது வித்தியாசமில்லாமல் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். வெளிநாட்டுப் பெண்கள் தாலி கட்டிக்கொள்வதே இல்லை. ஆனால், அவர்களுடைய கணவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழத்தானே செய்கிறார்கள். ஒரு கயிற்றில் கொண்டுபோய் கணவரின் உயிரை வைத்துவிட்டு, கயிறு தங்கச் சங்கிலியாகி, தங்கச் சங்கிலி ஸ்டேட்டஸுக்காக தடிமனான தங்கச் சங்கிலியாகி, அதை சங்கிலித்திருடர்கள் அறுத்து... தேவையா இதெல்லாம்..?

பெண்ணிய செயற்பாட்டாளர் ஷாலின் மரிய லாரன்ஸ்

நீதிமன்ற தீர்ப்பில் தாலிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு வரி வந்தாலும், அதைக் காரணம் காட்டியே பிற்போக்கு ஆண்களும் பெண்களும் சமுதாயத்தை மறுபடியும் பின்னுக்கு இழுக்க ஆரம்பிப்பார்கள் என்பதுதான் என் வருத்தம்'' என்கிறார்.

வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் செயல்கள், நீதிமன்றத்தின் தாலி பற்றிய கருத்து இவையிரண்டையும் தாண்டி தாலிக்கயிறு, தாலிச்சங்கலி இவற்றைவிட பெண் முன்னேற்றம் மிக மிக முக்கியமானது. உங்களுடைய கருத்தை கமென்ட்டில் தெரிவியுங்கள்..!



source https://www.vikatan.com/social-affairs/judiciary/activists-share-thoughts-on-chennai-hc-s-mangal-sutra-and-divorce-judgement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக