Ad

ஞாயிறு, 17 ஜூலை, 2022

கோத்தபய அவுட்... மகிந்தவுக்கு ‘செக்’... இலங்கையின் புதிய அரசியல் பாதை எப்படி அமையும்?

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டங்கள், அரசியல் குழப்பங்கள் என தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவிவருகிறது. அதிபருக்கு எதிராக மூன்று மாதங்களைக் கடந்து நடைபெற்றுவந்த மக்கள் போராட்டம் கடந்த ஜூலை 9-ம் தேதி மாபெரும் புரட்சியாக வெடித்தது. கொழும்பு அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள் கூட்டம், பாதுகாப்பு படையினரின் கண்ணீர்ப் புகைக்குண்டுகள், தடியடி, துப்பாக்கிச் சூடு என அனைத்தையும் மீறி அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். அதிபர் மாளிகை முழுவதும் போராட்டக்காரர்கள் வசம் வந்தது.

இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை

அச்சத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டே தப்பியோடினார். முதலில் மாலத்தீவில் தஞ்சமடைந்திருந்த கோத்தபய, அங்கும் மக்களின் தீவிர எதிர்ப்பு, போராட்டத்தின் காரணமாக சிங்கப்பூருக்கு தப்பியோடினார். தற்போது அங்கிருந்து சவுதி அரேபியாவுக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

இந்த நிலையில், கடந்த வாரம் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்த்தன தலைமையில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில் `அதிபர் கோத்தபய, பிரதமர் ரணில் ஆகிய இருவரும் பதவிவிலகவேண்டும், அனைத்துக்கட்சிளும் சேர்ந்த அரசு பதவி ஏற்கவேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய, பிரதமர் ரணில் இருவரும் பதவி விலகுவதாக அறிவித்தனர்.

மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே

அதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 14-ம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்தபடியே தனது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலம் சபாநாயகருக்கு அனுப்பிவைத்தார். கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமாவை தங்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக மக்கள் கொண்டாடினர். அதையடுத்து, கடந்த ஜூலை 15-ம் தேதி இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

ரணில் விக்ரமசிங்க

பதவிப்பிரமாணம் முடிந்ததும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் விக்ரமசிங்க, சட்ட ஒழுங்கை கடுமையாகப் பேணுவதாகவும் அதிபரின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 19-வது திருத்த சட்டத்தை புத்துயிர் அளிப்பதாகவும் உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களின் கோபத்தை தணிக்கும் வகையில் அதிபருக்கு வழங்கப்பட்டுவந்த மாண்புமிகு பட்டம், தனிக்கொடி அந்தஸ்து உள்ளிட்டவற்றை ரத்து செய்வதாகவும், இனி இலங்கையின் தேசியக்கொடியே அதிபருக்கான கொடியாகப் பயன்படுத்தப்படும் எனவும் அறிவித்திருக்கிறார்.

இருப்பினும் போராட்டக்காரர்களின் குரல் ஓய்ந்ததாகத் தெரியவில்லை. இதற்கு முன்னார் `கோத்தா கோ ஹோம்' என போராடிவந்த மக்கள் இப்போது புதிய அதிபரான `ரணில் கோ ஹோம்' என்று கோஷமிட்டு போராடிவருகின்றனர்.

இலங்கை

இந்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே உள்ளிட்டோர் இலங்கையிலிருந்து வெளியேற உச்ச நீதிமன்றமும் தடைவிதித்திருக்கிறது. அதாவது, முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில் முன்னாள் மகிந்த ராஜபக்சேவும், பசில் ராஜபக்சேவும் நாட்டைவிட்டு வெளியேற வாய்ப்பிருப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூலை 28-ம் தேதி வரை மகிந்த ராஜபக்சேவும், பசில் ராஜபக்சேவும் நாட்டைவிட்டு வெளியேற தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறது.

இலங்கை உச்ச நீதிமன்றம்

இந்த அசாதாரணமான சூழ்நிலையில், இலங்கையில் உள்ள ஐ.நா. தூதரகத்தின் இல்ல ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், ``அரசியல் சாசனத்திற்கு முழு மரியாதை அளிக்கும் வகையில், அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடைபெற வேண்டும். இதனை அனைத்து அரசியல் உறுப்பினர்களும் உறுதி செய்ய வேண்டும். இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு, அனைத்து அரசியல் உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தையே சிறந்த வழி!" என ஐ.நா. சார்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

பொதுவாக இலங்கை அதிபர் பதவி காலியானால் அடுத்த மூன்று நாள்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு, `அதிபர் பதவி காலியாகிவிட்டது' என அறிவிப்பு வெளியிடப்படும். அதன்பிறகு, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் தொடங்கும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் பதவிக்கு யாரை முன்மொழிகிறோம் என தெரிவிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் முன்மொழியப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை முடிவில் யார் அதிக உறுப்பினர்களின் ஆதரவை பெற்றிருக்கிறாரோ அவர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

இலங்கை

அந்த வகையில், இலங்கையின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் ஜூலை 19-ம் தேதி வேட்புமனுக்கள் பெறப்படவுள்ளன. அதைத் தொடர்ந்து, ஜூலை 20-ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. அதிபருக்கான தேர்தலில் தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரம சிங்கவுக்கும், எதிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுபவரே புதிய அதிபராக பொறுப்பேற்க முடியும். புதிய அதிபர் தேர்வு, அவரின் நடவடிக்கைகள் இலங்கைக்கு புதிய எழுச்சியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!



source https://www.vikatan.com/government-and-politics/international/article-explaining-the-current-political-scenario-of-island-nation-sri-lanka

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக