Ad

செவ்வாய், 19 ஜூலை, 2022

ஒன் பை டூ

சினேகன், மாநில இளைஞரணிச் செயலாளர், மக்கள் நீதி மய்யம்

``உண்மையை உடைத்துப் பேசியிருக்கிறார். ஜனநாயகம் என்பதே பேச்சுரிமைதானே. உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டில், மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஒரு பிரதிநிதி என்ன பேச வேண்டும்... என்ன பேசக் கூடாது என்று தீர்மானிக்க இவர்கள் யார்... இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பேசக் கூடாது என்று சொல்பவர்கள், நாளை இந்த நாட்டு மக்களைப் பேசக் கூடாது என்று தடை போடமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்... தவறு செய்தவர்களின் முகமூடியைக் கிழித்தெறியப் பயன்படும் வார்த்தைகள் அவை. அதை நீங்கள் உச்சரிக்கவே கூடாது என்று சொல்வது, ஹிட்லரின் சர்வாதிகாரத்தைவிட மோசமாக இருக்கிறது. இவர்கள் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் சரி என்று சொல்லிவிட்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்களா... இந்தியாவின் ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமாகச் சிதைத்து மன்னராட்சி முறையைக் கொண்டுவரத் துடிக்கிறார்கள். நாட்டு இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடிவருகிறார்கள். விலைவாசி உயர்வால் அடித்தட்டு மக்கள் ஆட்டம் கண்டிருக்கிறார்கள். இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்துகொண்டே செல்கிறது. இது குறித்தெல்லாம் கவலைப்படாமல் தங்கள் சர்வாதிகாரத்தை நிலை நாட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். மக்களுக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கு எதிராகவும் யார் குரல் கொடுத்தாலும், அவர்களுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கேள்வி கேட்கும், களத்தில் போராடிக்கொண்டே இருக்கும்.’’

சினேகன்
கார்த்தியாயினி

கார்த்தியாயினி, மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க

``உளறிக்கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். இங்கு யாரையும் பேச வேண்டாம் என்று சொல்லவில்லை. முறையற்ற வார்த்தைகளை மட்டும் தவிர்க்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் கண்ணியமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பது காலம் காலமாக இருக்கும் நடைமுறை. சட்டமன்றங்களில்கூட இதே நடைமுறை இருக்கிறது. மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஒரு பிரதிநிதி, அவர்களின் குரலாக மரியாதையற்ற வார்த்தைகளைப் பேசக் கூடாது என்று சொல்வது சரிதானே... பாரத பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் இந்தியாவில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் வாய்ப்பளிக்கப்படுகிறது. நாடு வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. உலக அரங்கில் இந்தியா பெரும் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது. மக்களுக்கான ஓர் ஊழலற்ற ஆட்சி நடைபெறுவதால்தான், இந்தியாவிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பா.ஜ.க ஆட்சியைக் கொண்டாடிவருகிறார்கள். அரசுக்கு எதிராகப் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று அனைத்தையும் அரசியலாக்கிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி மக்கள் மத்தியில் மாயமாகிவிட்டது. அவர்களின் கட்சி குறித்து மக்கள் பேச வேண்டும் என்பதற்காக பா.ஜ.க பற்றியும், பிரதமர் குறித்தும் கமலும், அவர் கட்சியினரும் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.’’



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-kamal-haasan-statement-on-modi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக