Ad

சனி, 23 ஜூலை, 2022

''என்னைப் பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியும்'' - ஸ்ரீவித்யா #AppExclusive

'அபூர்வ ராகங்கள்' படத்திற்குப் பிறகு, தமிழ்ப்படவுலகில் ஶ்ரீவித்யாவிற்கு அதிர்ஷ்டம் பிறந்தது. சுமார் எட்டு வருடங்களாக படவுலகின் கதவுகளைத் தட்டித் தட்டி அலுத்துப் போயிருந்தவருக்கு, அப்படத்தில் நடித்ததனால் பெயரும், புகழும், படங்களும் கிடைத்தன. இருந்தும், அப்படத்திற்குப் பிறகு அவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றிகரமாக ஓடவில்லை. ஓரளவிற்கு அவர் அதற்குக் காரணமில்லை என்றாலும் கூட, படவுலகில் ஶ்ரீவித்யாவை 'அதிர்ஷ்டம் இல்லாத நடிகை' என்று கூற ஆரம்பித்து விட்டார்கள். இது பற்றி என்ன சொல்கிறார் ஶ்ரீவித்யா? "முதல் தடவையாக இந்த வார்த்தையைக் கேட்கிறேன்.

Actress Srividya's Exclusive Interview

இப்போது பத்து தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறேன். என்னை ஒப்பந்தம் செய்வதற்குத் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் விருப்பத்தோடு வருகிறார்கள். 'அதிர்ஷ்டம் இல்லாத நடிகை’ என்றால் வருவார்களா?கிட்டத்தட்ட கடந்த எட்டு வருடங்களாக எனக்குப் படங்களே இல்லை. உண்மையைக் கூறப்போனால், 'அபூர்வ ராகங்களை' விட 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில் நன்றாக நடித்திருந்தேன். அப்படத்தில் நடித்த பிறகும், அது வெற்றிகரமாக ஓடிய பிறகும் கூட, நான் வீட்டில்தான் உட்கார்ந்திருந்தேன். என் வரையில் நான் தோல்விகளைத்தான் அதிகமாக சந்திக்கிறேன்.

Actress Srividya's Exclusive Interview

படம் எடுப்பது என்பது ஒரு கூட்டு முயற்சி. அதன் தலைவர், டைரக்டர். டைரக்டர் என்னை எப்படியெப்படி வேலை வாங்குகிறாரோ, என்னென்ன எண்ணத்தில் என்னை அவர் உபயோகப்படுத்துகிறாரோ அதன்படிதான் நான் நடந்து வருகிறேன். என்னனால் முடிந்த வரையில் என் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்து வருகிறேன்.

ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு நடிக, நடிகையர் என்றுமே பொறுப்பாக மாட்டார்கள். ஆனால் அதே நடிக, நடிகையரின் நேரம் சரியாக இல்லாமல் போனால், அதற்கு அவர்கள் என்ன செய்ய முடியும்? பல காலமாக ஜெய்சங்கரை 'வெள்ளிக்கிழமை நடிகர்’ என்று சொல்லிக் கேலி செய்வார்கள். இதுவரையில் அவர் நூற்றைம்பது படங்களில் நடித்து முடித்து விட்டார். இன்னும் அவருக்கு நிறையப் படங்கள் இருக்கின்றன, இல்லையா? எப்படி அவர் ஒரு தோல்வி நடிகராக முடியும்?

படவுலகில் நான் ஒரு பெரிய நடிகையாக ஆகவில்லை என்றாலும், கிட்டத்தட்ட எட்டு வருடங்களில் பல அனுபவங்களைக் கற்றுக்கொண்டுவிட்டேன்.

சமீபத்தில், ஒரு புது தயாரிப்பாளர் வீட்டிற்கு வந்து, அவர் தயாரிக்கும் படத்தில் என்னை நடிக்கும்படி கூறினார். ஆனால், பண விஷயங்களில் இருவருக்கும் விவாதம் எழுந்தது. என் நடிப்பிற்கு, உழைப்பிற்கு ஓர் ஊதியம் நிர்ணயித்திருக்கிறேன். படவுலகமும் அதை ஓரளவிற்கு அறியும். அப்படியிருக்கும் போது எந்தக் காரணமும் இல்லாமல் எதற்கு என் ஊதியத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்?

படவுலகில் நடிகையாகவோ, நடிகராகவோ வந்து விட்டால் கார், பங்களா, மற்றும் பல வசதிகளை வாங்கி விடலாம் என்று பலர் மனப்பால் குடிக்கிறார்கள். அப்படி நினைப்பவர்கள் ஏமாறுவார்கள். ஒரு சில புதுமுகங்களுக்குப் படப்பிடிப்பில், டைரக்டர்களிடத்தில், பெரியவர்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரியவில்லை.

Actress Srividya's Exclusive Interview

சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் ஒரு டைரக்டர் ஒரு புதுமுக நடிகையைப் பார்த்து சரியாக நடிக்காவிடில் 'செருப்பு அடி வாங்குவாய்' என்று கூறிவிட்டார். அந்த நடிகை தன் எதிர்ப்பைக் கூறாமல் அப்படியே தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டார். நானாக இருந்தால் என் கோபத்தை ஏதாவது ஒருமுறையில் காட்டியிருப்பேன். இத்தனைக்கும் அந்த நடிகை இன்னமும் கல்லூரியில் படித்து வருபவர்."

"உங்களுக்குத் திருமணமாகி விட்டதாகக் கேள்விப்பட்டேன். ஒரு மலையாள தயாரிப்பாளரை மணந்து கொண்டு விட்டீர்களாமே?"

ஶ்ரீவித்யா மென்மையாகப் புன்னகை பூத்தார். அந்த உதட்டசைவில் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு பொருள் பொலிவது போலத் தோன்றிற்று. "எனக்கு இன்னமும் திருமணமாகவில்லை. திருமணம் செய்து கொள்ள ஆசைதான். ஆனால், நேரம்தான் அமைய வேண்டும். எங்கள் வீட்டிலும் நான் திருமணம் செய்து கொண்டு 'செட்டில்’ ஆவதைத்தான் விரும்புகிறார்கள். ஆனால் . . . . திருமணம் ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறவரின் பெயர் ஜார்ஜ், 'தீக்கனல்' (மலையாள ‘தீபம்’) படத் தயாரிப்பாளர். அப்படத் தயாரிப்பின்போது இவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருவரும் நண்பர்களானோம். பல விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள்."

"நட்பு காதலாக மாறலாமே?"

"நட்பு காதலாக மாறலாம். மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதைக் காலம்தான் சொல்ல வேண்டும். இப்போது ஒன்றும் சரியாகக் கூற முடியாது. ஆனால், ஜார்ஜுடன் நான் 'ஃபிரண்டாக' இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். இதைக் கூறிக்கொள்வதில் எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. காதல் திருமணமாக இருந்தாலும் கூட, என் பெற்றோரின் அனுமதியின் பேரில்தான் திருமணம் நடக்கும்."

"நீங்கள் காதலிப்பவர் ஜார்ஜாக இருக்கலாமா?"

"இருக்கலாம். அதைப் பற்றி இப்போது ஒன்றும் கூற முடியாது.ஒரு நடிகை எந்த விஷயத்திலும் உண்மையாக நடந்து கொள்ள மாட்டாள் என்று நினைக்கிறார்கள். ஏன்? ஒரு நடிகை ஒருவனைக் காதலிக்கிறாள் என்றோ, திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்றோ கூறினால், நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள். ஏன் அந்தச் சிரிப்பு? நடிகைகளும் மனிதப் பிறவிகள்தானே?

இப்போது நான் நிறையப் படங்களில் ஓய்வு ஒழிவின்றி நடித்து வருகிறேன். தமிழ்ப் படங்களில் அதிகமாக நடிக்க ஆரம்பித்ததிலிருந்து மலையாளப் படங்களில் நடிப்பதையும் குறைத்துக்கொண்டு விட்டேன். நான் என்றைக்குமே பேராசை பிடித்தவளல்ல. சொந்த வீடும், காரும் இல்லாத ஒரே ஒரு 'பாப்புலர்' கதாநாயகியாக நான்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.

எனக்கு என்றைக்குமே அமைதியாக வாழ வேண்டும் என்ற விருப்பம் உண்டு. அதன்படியேதான் வாழ்ந்து வருகிறேன்.மேலும் நான் அதிகமாக 'பார்ட்டிகள்' போன்ற பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. படப்பிடிப்புகளுக்குக்கூட, மற்ற நடிகைகளின் தாயார்கள் வருவது போல என் தாயார் வருவதில்லை. ஏனென்றால், என்னைப் பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியும். அதனால்தான் தைரியமாக என் விவகாரங்கள் எதை வேண்டுமானாலும் கூறுகிறேன்."

"என்னை நான் நன்கு அறிவேன்". - ஶ்ரீவித்யா இதை அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

பேட்டி : சியாமளன்

ரு நடிகை, தனக்காக ஓர் 'இமேஜை' உருவாக்கிக் கொண்டு விட்டால் தன்னைத் தானே ஒரு வட்டத்திற்குள் புகுத்திக் கொண்டது போல ஆகிவிடும். நடிகைகளைப் பொறுத்த வரையில், 'இமேஜி'னால் நன்மைகளும் உண்டு; தீமைகளும் உண்டு. என்னைப் பொறுத்த வரையில் நான் ஓர் 'இமேஜை' உருவாக்கிக் கொள்ளவில்லை. அதைப் பற்றி நினைக்கக்கூட இல்லை. நான் படவுலகில் 'ஸ்டெடி' யாயிருந்ததில்லை. இப்பவும் எனக்குப் பெரிய 'மார்க்கெட்' இருப்பதாக நினைக்கவில்லை. அதனால் திட்டவட்டமாக இப்படித் தான் இப்படத் தொழிலில் ஈடுபட முடியும் என்பதையோ, ஈடுபட்டு வந்திருக்கிறேன் என்றே கூற முடியாது நான் 'இமேஜை' என்றும் விரும்பியதில்லை.

ஒரு கலைஞன், 'இமேஜ்' என்ற வார்த்தைக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். படவுலகில் இருக்கும் வரை, தன் திறமையை வெளிப்படுத்தக்கூடிய எந்த வேடத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டு அதைத் திறம்படச் செய்தால் புகழ் பெற முடியும்.

'இமேஜை'ப் பற்றி அதிகமாக நினைத்து செயல்படுவது தமிழ்ப்பட நாயகர்கள்தான். ஒரு சில படங்களில் 'தேவி கருமாரி'யாகவும், 'அன்னை அபிராமி'யாகவும் நடித்த விஜயா 'திருடி' , 'வாயாடி' போன்ற படங்களிலும் நடிக்கலையா? நடிக்க மறுக்கவில்லையே. எனக்கு இன்று நகைச்சுவை வேடம் கிடைத்தால் ஏற்று நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்.

நடிகைகள் அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது என்று கூறினார்கள். அது தவறாகாது. ஆனால் மேடைகளில் நடிகைகள் ஒழுங்காக, இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டும்.

ஒரு நிகழ்ச்சியில் ஒய்.விஜயாவும், ஶ்ரீகாந்தும் ஒருவருக்கொருவர் திருமணத் தம்பதி போல மாலையை மாற்றிக் கொண்டனராம், பொது இடங்களில் நல்ல விதமாக நடந்து கொள்வதுதான் அழகு!திறமைதான் கலைஞனுக்கு அளவுகோல்: 'இமேஜ்' அல்ல. 'இமேஜை’ மட்டும் வளர்த்துக் கொண்டால் 'ஆர்ட்டிஸ்ட்'டாக வளர முடியாது.

- கன்னி

(05.06.1977 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)


source https://www.vikatan.com/government-and-politics/cinema/actress-srividyas-exclusive-interview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக