Ad

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

பா.ம.க - தி.மு.க - வி.சி.க: கூட்டணிக் குழப்பங்கள்... பின்னணியில் யார்? #TNElection2021

தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல்களில் கூட்டணி என்பது மிகவும் முக்கியப் பங்கு வகிக்கக்கூடியது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைந்த கூட்டணியில் இதுவரை எந்த மாறுபாடும் இல்லாமல் இருந்துவந்து நிலையில், சமீபகாலமாக சிறு சிறு சலசலப்புகள் உண்டாகத் தொடங்கியிருக்கின்றன. ஒருபுறம், தனித்து நின்றால் ஆட்சியைப் பிடிப்போம் என்பதில் தொடங்கி, இவ்வளவு இடங்களைப் பிடிப்போம் என்பதுவரை அரசியல் கட்சிகள் தங்களின் பலத்தைப் பறைசாற்றிவருகின்றன. ஆனால், அது மிகப்பெரிய தாக்கங்கள் எதையும் உருவாக்கவில்லை. இந்தநிலையில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி பா.ம.க, தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பதற்கான வேலைகள் நடந்துவருகின்றன என வெளியான செய்திகள்தான், தற்போது அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

ராமதாஸ்

தனியார் ஊடகமொன்றில், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனும், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணியும் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பா.ம.க-வின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு, உடனடியாக அதை மறுத்தார். இந்தநிலையில், பா.ம.கவின் இளைஞரணித் தலைமையும் தி.மு.கவின் இளைஞரணித் தலைமையும் கூட்டணி குறித்துப் பேசிவருவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மேலும், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸிடம், ``கடந்த 2016 தேர்தலில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை என சில கட்சிகளைப் பட்டியலிட்டிருந்தீர்கள், இப்போதும் அந்தக் கொள்கையைக் கடைபிடிக்கிறீர்களா?" எனக் கேட்க, ''எந்தக் கட்சியும் ஒதுக்கப்பட வேண்டிய கட்சியல்ல'' எனப் பதிலளித்தார்.

விடுதலைச் சிறுத்தைகளுடன் உறவு மலர வாய்ப்பிருக்கிறதா எனக் கேட்க,''விடுதலைச் சிறுத்தைகளோடு எனக்கு எப்போதும் எந்தப் பகையும் இருந்தது இல்லை'' எனப் பதிலளித்திருந்தார் மருத்துவர் ராமதாஸ். உடனே, பா.ம.க தி.மு.கவுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாலேயே ராமதாஸ் இப்படியொரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. மறுபுறம், ''பா.ம.க - பா.ஜ.க அங்கம் வகிக்கும் கூட்டணியில், அது தி.மு.க கூட்டணியாக இருந்தாலும் நாங்கள் ஒருபோதும் இருக்கமாட்டோம்'' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நம் ஜூனியர் விகடன் பேட்டியொன்றில் மூன்று மாதங்களுக்கு முன்பாகத் தெரிவித்திருந்தார்.

வன்னி அரசு

இந்தநிலையில், ஒருவேளை தி.மு.க - பா.ம.க கூட்டணி அமைந்தால் விடுதலைச் சிறுத்தைகளின் தற்போதைய நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசுவிடம் பேசினோம்,

''வி.சி.கவுடன் எந்தப் பகையும் இல்லை என்று மருத்துவர் ராமதாஸ் சொல்வதை நாங்கள் நம்பத் தயாராக இல்லை. அவர் அதை மட்டும் சொல்லவில்லை. அ.தி.மு.க கூட்டணியில் இருந்துகொண்டே, பா.ம.க ஆட்சி அமைக்கவேண்டும். அன்புமணி முதல்வர் ஆவார். சிங்கப்பூரின் லி குவான் யூ போல செயல்படுவார் என்றெல்லாம் பேசிவருகிறார். அவரின் இந்தப் பேச்சுக்கள் அனைத்துமே அ.தி.மு.க கூட்டணியில் தங்களது பேரத்தை அதிகப்படுத்துவதற்கான திட்டம்தவிர வேற ஒன்றும் இல்லை'' என்றார் அவர்.

Also Read: ``தோற்றாலும் ஜெயித்தாலும் செழிக்கிறீர்களே...'' - பாட்டாளி கடிதம்!

இந்தநிலையில், தி.மு.க - பா.ம.க கூட்டணி சர்ச்சைகள் தொடர்பாக, தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர், கான்ஸ்டைன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்,

''தற்போது இருக்கும் எங்கள் கூட்டணியில் எந்தச் சலசலப்பும் இல்லை. எங்கள் தலைவரை, தி.மு.கழகம் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பாகவே எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்மொழிந்துவிட்டனர். பா.ம.கவுடன் தி.,மு.க கூட்டணி என்ற கருத்தை தமிழக அரசுதான் உளவுத்துறையின் மூலம் திட்டமிட்டு பரப்பிவருகிறது.

எங்கள் கூட்டணியில் பா.ஜ.க வரும் என்று சொல்லி காங்கிரஸ் கட்சியிலோ, கம்யூனிஸ்ட் கட்சியிலோ எந்த சலசலப்பையும் உண்டாக்க முடியாது. காரணம், எங்கள் கட்சி, பா.ஜ.கவை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது. 200 சதவிகிதம் நாங்கள் அவர்களுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். ஆனால், பா.ம.க-வுடன் நாங்கள் கூட்டணி என்று திட்டமிட்டு செய்தியைப் பரப்புவதன் மூலம், எங்கள் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஏதாவது சலசலப்புகளை உண்டாக்கலாம் என நினைக்கிறார்கள்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இப்படியொரு செய்தியைப் பரப்புவதன் மூலம், வி.சி.க தலைவர் திருமாவளவன் இல்லாவிட்டாலும் அவர் கட்சியில் யாராவது உணர்ச்சிவசப்பட்டு எங்களக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவிப்பார்கள். அதன்மூலம் கூட்டணியை உடைத்துவிடலாம் என திட்டமிடுகிறது தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு.

`பா.ஜ.க-பா.ம.க அங்கம் வகிக்கும் கூட்டணியில் நாங்கள் பங்குபெற மாட்டோம்’ என திருமாவளவன் தற்போது சொல்லவில்லை. 2016-ம் ஆண்டில், மக்கள் நலக் கூட்டணி அமைக்கும் போதில் இருந்தே அப்படித்தான் பேசிவருகிறார். அந்த நிலைப்பாட்டில் அப்போதிருந்து உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறார். அதனால், அவரின் அந்தக் கருத்தை தி.மு.க-வுக்கான சமிக்ஞ்யாக அல்லது தி.மு.க கூட்டணியில் பா.ம.க வரும் செய்திகளுக்கான பதிலாகவோ பார்க்கத் தேவையில்லை.

உளவுத்துறையின் மூலம் நடத்தப்படும் இந்த சித்து விளையாட்டுக்களால், இந்த நிமிடம் வரைக்கும் எங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே, தலைவர்களுக்கிடையே எந்தச் சலனமும் இல்லை. நாங்கள் இணைந்தே தேர்தலைச் சந்திப்போம்'' என்கிறார் அவர்.

Also Read: அமைச்சர்களை சந்தித்தார்களா அஜித்தின் `முன்னாள்' நண்பர்கள்... நடந்தது என்ன?!

கான்ஸ்டண்டைன் ரவீந்திரனின் குற்றச்சாட்டுகள் குறித்து அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தியிடம் பேசினோம்.

``பா.ம.க - தி.மு.க கூட்டணி குறித்து வெளியே செய்திகளைக் கசியவிடுவதே தி.மு.கதான். உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் தி.மு.க - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பிரச்னை உண்டானது. கே.எஸ்.அழகிரி கடுமையான கருத்துகளைத் தெரிவிக்க, அதற்கு தி.மு.கவின் தற்போதைய பொதுச்செயலாளரான துரைமுருகன் எதிர்வினையாற்றினார். ஆனால், `எங்கள் கூட்டணி அப்போதிருந்து இப்போதுவரை எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் சுமுகமாகத்தான் போய்க்கொண்டிருகிறது. ஆனால், எந்தக் கட்சி எங்களுடன் கூட்டணிக்கு வந்தாலும், நாங்கள் ஏற்றுக்கொள்வோம்’ என அமைச்சர் ஜெயக்குமார் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அதுதான் அ.தி.மு.கவின் நிலைப்பாடு.

புகழேந்தி

சரி...எங்கள் கூட்டணியில் இருந்து பா.ம.க விலகுவதாக நாங்கள் செய்திகளைப் பரப்பினால், அவர்கள் எங்கள் கூட்டணியை விட்டுப் போனால் எங்களுக்குத்தானே நஷ்டம். பிறகு எப்படி நாங்களே எங்களுக்கு எதிரான செய்திகளைப் பரப்புவோம்? விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றியை இந்தக் கூட்டணியின் மூலம்தான் சாதிக்க முடிந்தது. அதனால் எங்கள் மீது சுமத்துவது தவறான குற்றச்சாட்டு. தி.மு.கதான் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கிறார்கள். அவர்கள் இப்படி நடந்துகொள்வதைப் பார்த்தால், திருமாவளவன் அவர்களுடன் தி.மு.க-வுக்கு ஏதேனும் கருத்து வேறுபாடு இருக்குமோ என்கிற எனக்குச் சந்தேகம் எழுகிறது'' என்றார் அவர்.

இறுதியாக, இந்த சர்ச்சைகள் குறித்து, பா.ம.க-வின் செய்தித் தொடர்பாளர் வினோபா பூபதியிடம் பேசினோம்.

``கூட்டணி நிலவரங்கள் குறித்து எங்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ஐயா ராமதாஸ், தனியார் தொலைக்காட்சி நேர்காணல்களில் மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார். அதைத் தவிர அதுகுறித்து விவாதிக்க வேறு ஒன்றும் இல்லை'' என்பதோடு முடித்துக்கொண்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/is-aiadmk-in-the-background-of-the-pmk-dmk-vc-alliance-turmoil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக