Ad

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

ராமேஸ்வரம்: `தமிழக அரசியல் வெற்றிடத்தை விஜயகாந்த் மட்டுமே நிரப்புவார்!'- பிரேமலதா

``இரு பெரும் தலைவர்களான கருணாநிதி - ஜெயலலிதா இல்லாத சூழலில் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை கேப்டன் விஜயகாந்த் மட்டுமே நிரப்புவார்'' என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

விஜயகாந்த்

நிழல் கிரகங்களான ராகு - கேது நேர் எதிர் ராசியில் இருப்பவை. வலமிருந்து இடமாக சுற்றும் இந்த கிரகங்கள் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரே நாளில் இடப்பெயர்ச்சி நிகழும் தினத்தில், அவற்றை சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை. இந்நிலையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் வந்திருந்தார். இங்குள்ள புரோகிதர் சாமிநாத சர்மா என்பவரது வீட்டில் நடைபெற்ற திலகோமம் மற்றும் ராகு - கேது இடப்பெயர்ச்சிக்கான சிறப்பு யாகத்தில் பங்கேற்று வழிபாடு செய்தார். 30 புரோகிதர்களுடன் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக நடந்த சிறப்பு யாகத்திற்கு பின் கார் மூலம் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முக பாண்டியன், விஜய் பிரபாகரன் ஆகியோர் அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்றனர். அங்கு புரோகிதர்கள் எடுத்து வந்த தீர்த்தத்தினை காரில் இருந்தபடியே விஜயகாந்தும் அவரது குடும்பத்தினரும் தெளித்துக்கொண்டனர்.

ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம்

மாலையில் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் ராமநாதசுவாமி கோயிலுக்கு வருகை தந்தார். ராமநாதசுவாமி, பருவதவர்த்தினி, விநாயகர், முருகன் சன்னிதிகளில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா,``எங்கள் மேலாளரின் திருமணத்துக்காக ராமநாதபுரம் வந்தோம். அப்படியே ராகு - கேது பெயர்ச்சி நாளான இன்று ராமேஸ்வரம் கோயில் திறக்கப்பட்டதால் குடும்பத்தோட சாமி தரிசனம் செய்துவிட்டு செல்லலாம் என வந்தோம். சாமி தரிசனம் செய்த மன நிறைவோடு சென்னைக்குச் செல்கிறோம். தொண்டர்களின் விருப்பம் வரும் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே. ஆனால், தை மாதத்தில் செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி கேப்டன் அவர்கள் நல்ல முடிவை அறிவிப்பார். எப்பவுமே தனித்து போட்டியிட்டு களம் கண்ட இயக்கம் தே.மு.தி.க. அதன் பின்னர் கூட்டணிக்குச் சென்றிருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு. அதுவரை பொறுத்திருந்து பாருங்கள். அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அரசியலை பொறுத்தமட்டில் நாளை என்பது கூட ரொம்ப தூரம் எனச் சொல்லப்படுகிறது.

Also Read: `எஸ்.வி.சேகருக்கு ஒரு நியாயம்; ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா?' - பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

கருணாநிதி – ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை. 2021 மாபெறும் மாற்றத்தை ஏற்படுத்த போகும் ஆண்டாகும். இரு பெரும் தலைவர்கள் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை கேப்டன் விஜயகாந்த் ஒருவரால் மட்டுமே நிரப்ப முடியும். அ.தி.மு.க உள்ளிட்ட பல கட்சிகளிலும் உட்கட்சிப் பூசல் இருக்கு. இந்நிலையில், மக்கள் எடுக்கும் முடிவே ஆட்சியைத் தீர்மானிக்கும். நிறையும் குறையும் கலந்த ஆட்சியாக அ.தி.மு.க ஆட்சி உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால் ஸ்டாலின் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார். ரஜினி, கட்சி ஆரம்பித்தபின்புதான் அவருடன் கூட்டணியா என்பது குறித்து கருத்து சொல்ல முடியும்’’ என செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பிரேமலதா விஜயகாந்த்

பேட்டியின் போது தே.மு.தி.க மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, ஒன்றியச் செயலாளர் திலீப்காந்த், ராமேஸ்வரம் நகரச் செயலாளர் முத்துக்காமாட்சி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.



source https://www.vikatan.com/news/policies/2021-give-surprises-to-various-parties-says-premalatha-vjayakanth

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக