Ad

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

‘ராம ஜென்மபூமி’க்கு அடுத்து ‘கிருஷ்ண ஜென்ம பூமி’யா?'

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி ஆகஸ்ட் 5-ம் தேதி அடிக்கல் நாட்டினார். அங்கு பிரமாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், காசி மற்றும் மதுராவில் கோயில்களை மீட்க வேண்டும் என்ற பிரசாரத்தைத் தொடங்க, அகில் பாரதிய அஹாரா பரிஷத் (Akhil Bharatiya Akhara Parishad -அகில இந்திய சாதுக்கள் சபை) தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சாதுக்கள் சபை கேட்டுக்கொண்டிருக்கிறது.

ராமல் கோயில் மாதிரிப்படம்

காசியில் அமைந்துள்ள விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டு, அதன் ஒரு பாதியில் கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாகவும், கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் மதுராவில் ஷாயி ஈத்கா மசூதி எழுப்பப்பட்டதாகவும் இந்துத்துவ அமைப்புகளால் கூறப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் நிலையில், காசியையும் மதுராவையும் மீட்பதற்கான பிரசாரத்தைத் தொடங்குவதென்று அகில இந்திய சாதுக்கள் சபை முடிவுசெய்திருக்கிறது.

இதேபோல, `காசியில் காசி விஸ்வநாதர் கோயில், மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி ஆகிய இடங்களில் மசூதிகள் கட்டப்பட்டிருக்கின்றன' என்றும், `அவற்றை முழுமையாக உரிமை கோருவது தங்களின் அடுத்து பணி' என்றும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா மற்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி நியாஸ் ஆகியவற்றின் தலைவரான மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் கூறினார்.

மதுரா

அவரது இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கியது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றான `பிராஜ்’ என்ற இடத்தில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாட்டத்தின்போது, பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அந்தப் பகுதிகளில் இந்துக்களும் முஸ்லிம்களும் பெருமளவில் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், மதரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக, சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி நிர்மான் நியாஸ் அமைப்பின் தேசியத் தலைவரான ஆச்சார்யா தேவ் முராரி பாபு மீது மதுரா போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கிறார்கள். `கிருஷ்ண ஜென்மபூமிக்கு அருகிலுள்ள மசூதி இடித்துத்தள்ளப்படும்’ என்றும், `அந்த இடத்தில் ஜென்மபூமி விரிவாக்கம் செய்யப்படும்’ என்றும் தேவ் முராரி பேசியதாகக் காவல்துறை அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

அயோத்தி

காசி மற்றும் மதுராவை `மீட்டெடுக்க’ ஆதரவு தர வேண்டும் என்று சாதுக்கள் சபையால் வைக்கப்பட்ட கோரிக்கையை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நிராகரித்துவிட்டது. பிரிவு 370-ஐ நீக்கம் மற்றும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் தங்கள் அஜெண்டாவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மூத்த உறுப்பினரான நம்பி நாராயணனிடம் பேசினோம். ``காசியும் மதுராவும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அஜெண்டாவில் இல்லை. அயோத்தியுடன் எங்கள் அஜெண்டா முடிந்துவிட்டது. அதிகாரபூர்வமாக பா.ஜ.க-வுக்கோ, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கோ அந்த அஜெண்டா கிடையாது. அதை எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும். அதே நேரத்தில், வேறு சில இந்து இயக்கங்களுக்கு அந்தப் பிரச்னைகளில் ஆர்வம் இருக்கலாம். எனவே, அவர்கள் அது குறித்துப் பேசுவார்கள். இங்கு அர்ஜூன் சம்பத் உட்பட பலர் பல இயக்கங்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அது பற்றிப் பேசலாம்.

ராமர் கோயிலுக்கான தூண்கள்

ஆரம்ப காலத்தில் காசி, மதுரா பற்றிப் பேசியிருக்கிறோம். அதை இல்லையென்று யாரும் மறுக்க முடியாது. காசியிலும் மதுராவிலும், கோயிலும் மசூதியும் அடுத்தடுத்து இருக்கும். குறுக்கே ஒரே ஒரு சுவர்தான் இருக்கும். அப்படியென்றால், ஏதோ ஒரு காலகட்டத்தில் கோயிலின் ஒரு பகுதி அவர்களிடம் போயிருக்கிறது. அதை யாரும் மறுக்க முடியாது. காசியிலும் மதுராவிலும் அப்படியான நிலை இருக்கிறது என்ற போதிலும், இந்த இரண்டு இடங்களிலும் இந்துக்களுக்கு வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. ஆனால், அயோத்தியில் இந்துக்களுக்கு எதுவுமே இல்லை என்ற நிலை இருந்தது. முழுக்க மசூதியாக இருந்தது. ஆகவே, அயோத்திக்கு முன்னுரிமை வந்தது” என்றார்.

இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் கேட்டோம். ``காசி மற்றும் மதுராவை மீட்க வேண்டும் என்று அகில இந்திய சாதுக்கள் சபை தீர்மானம் போட்டிருப்பது விஷமத்தனமானது. காசியிலும் மதுராவிலும் உள்ள மசூதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று சாதுக்கள் சபை கூறுகிறது. இப்படித்தான் அயோத்தியிலும் ஆரம்பித்தார்கள். கடைசியில் அதைத் தகர்த்துத் தரைமட்டமாக்கிவிட்டார்கள். இப்போது, அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுகிறார்கள். அதற்கு நாட்டின் பிரதமர் அடிக்கல் நாட்டியிருக்கிறார்.

ராமர் கோயில் மாதிரிப்படம்

இவர்கள் அயோத்தியுடன் நிற்க மாட்டார்கள், காசிக்கும் மதுராவுக்கும் வருவார்கள் என்று அப்போதே நாங்கள் சொன்னோம். ஆயிரம் மசூதிகள் அடங்கிய பட்டியலை அவர்கள் வைத்திருக்கிறார்கள். ஆனாலும், காசியையும் மதுராவையும் பிரதானமாகக் கிளப்புவார்கள் என்று சொன்னோம். அது இப்போது உண்மையாகிவருகிறது.

Also Read: `அயோத்தி, அத்வானி, அழைப்பிதழ்' - ராமர் கோயிலை ரவுண்டு கட்டும் சர்ச்சைகள்!

இப்போது தங்கள் அஜெண்டாவில் காசியும் மதுராவும் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பாபர் மசூதி இடிப்பு நிகழ்ந்த காலகட்டத்தில், ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அயோத்தி விவகாரத்தைத் தவிர்த்துவிட்டு, `1947-ல் இருந்த வழிபாட்டுத்தலங்களில் எந்த மாறுதலையும் செய்யக் கூடாது’ என்பது அந்தச் சட்டம்.

அயோத்தியில் மோடி

அந்தச் சட்டத்தின்படி, இப்போது இருக்கும் வழிபாட்டுத்தலங்களின் கட்டமைப்பு எதையும் மாற்ற வேண்டும் என்று போக முடியாது. இந்தச் சட்டம் இருக்கும் வரை, இவர்களால் காசி மற்றும் மதுரா மீது கைவைக்க முடியாது. ராமர் கோயில் கட்டுமான வேலைகளை முழுவதுமாக முடித்துவிட்டு, அதன் பிறகு இந்தச் சட்டத்தைக் காலிசெய்துவிடும் வேலை நடக்கும்” என்றார் அருணன்.



source https://www.vikatan.com/social-affairs/controversy/krishna-janmabhoomi-nirman-nyas-targeting-kasi-madhura

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக