நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பொருளாதாரரீதியாகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து0வருகிறது. குறிப்பிட்ட சில உத்தரவுகளைத் தவிர மாநில அரசுகளும் கொரோனா தீவிரத்தைப் பொறுத்து தளர்வுகளை அறிவித்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
தமிழகத்திலும் ஐந்து மாதங்களுக்கு மேலாக முடங்கியிருந்த பொதுப்போக்குவரத்து தொடங்கியிருக்கிறது. மேலும், ஒரு சில வழித்தடங்களில் ரயில் போக்குவரத்துக்கும் மாநில அரசு அனுமதியளித்திருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும், நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகிவருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை என்பது ஒரு லட்சத்தை நெருங்கியிருக்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்திய அளவில் 83,809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 49,30,237-ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,054 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்துள்ளன. இதனால், இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்புகள், 80,776-ஆக அதிகரித்துள்ளன.
Also Read: தமிழகம், புதுவையில் 120 நாள்களைக் கடந்த ஊரடங்கு! எப்படி இருந்தது? #VikatanClicks
இந்தசூழலில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக செப்டம்பர் 25-ம் தேதி முதல் கடுமையான விதிமுறைகளுடன் கூடிய 46 நாள்கள் ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவந்தது. `இந்தத் தகவல் உண்மையில்லை; வெறும் வதந்தியே...’ என மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது. மத்திய அரசின் மக்கள் தொடர்புத்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், மேற்கூறிய தகவல் வதந்தியே என்று விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
பிஐபி-யின் ட்விட்டர் பக்கத்தில், ``நாடு முழுவதும் செப்டம்பர் 25-ம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்த தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவலில் உண்மையில்லை; அது வதந்தியே. அப்படி ஒரு பரிந்துரையை தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மத்திய அரசுக்கு அளிக்கவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/news/india/no-plan-to-re-impose-nationwide-lock-down-clarifies-government
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக