Ad

சனி, 12 செப்டம்பர், 2020

டெல்டாவில் 24 ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கிணறுகள்... அனுமதி நீட்டிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக 24 ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அமைப்பதற்கான அனுமதி, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசு கொண்டு வந்துள்ள பாதுகாப்பட்ட வேளாண் மண்டல சட்டத்திற்கு முரணானது எனவும், புதிய கிணறுகள் அமைக்கும் பணியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் டெல்டா மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

டெல்டா

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, நச்சுத்தன்மை வாய்ந்த ரசயான கழிவுகளால், கொடிய நோய்களும் உருவாகும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் இத்திட்டத்திற்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த ஆபத்திலிருந்து காவிரி டெல்டாவை நிரந்தரமாக பாதுகாப்பதற்காகதான், இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இக்கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, இதற்கான சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்திற்கான விதிமுறை அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில்தான் தற்போது காவிரி டெல்டா மக்களை அதிர்ச்சி அடைய செய்யக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பெரும் ஆதங்கத்தோடு பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஆலோசகர் மருத்துவர் பாரதிச்செல்வன், ``தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில், 1,545 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 504 கோடி செலவில், 24 கூடுதல் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க ஒ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நிட்டித்துள்ளதாக, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவர் பாரதிச்செல்வன்

ஒவ்வொரு கிணறும் 5,100 அடி முதல் 19,500 அடி ஆழத்திற்கு தோண்டப்படும் எனவும், இதற்கு சேறும் தண்ணீரும் மட்டும் பயன்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பானது. வெறும் சேறையும் தண்ணீரையும் மட்டும் கொண்டு, இவ்வளவு ஆழத்திற்கு எல்லாம் கிணறு அமைக்க முடியாது. இது வழக்கமான எரிவாயு கிணறு அல்ல. ஷேல் கேஸ் எடுக்கதான் இவ்வளவு ஆழம் தேவைப்படும். மக்களிடம் இதற்கு கடுமையான எதிர்பார்ப்புகள் உருவாகும் என்பதால்தான், உண்மை மறைக்கப்படுகிறது. காவிரி டெல்டா, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, சட்டம் இயற்றிய பிறகும் கூட, ஆய்வு கிணறுகளுக்கான அனுமதியை மத்திய அரசு நீட்டித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழக அரசு இச்சட்டத்தை கொண்டு வந்தபோது, டெல்டாவில் புதிய ஆய்வுக் கிணறுகள் தோண்டப்படுவது இச்சட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார். இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த, மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆய்வு கிணறுகளுக்கான அனுமதி நீட்டிப்பை ரத்து செய்ய கோரி, மக்கள் அறவழியில் போராட வேண்டும்.” என தெரிவித்தார்.

மணல் கொள்ளையை தடுக்க ஏராளமான நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தாலும் கூட, மணல் கொள்ளைக்கு தமிழக ஆட்சியாளர்கள் மறைமுகமாக துணைப் போவது போல, ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கும் துணைப் போக போகிறார்களா? எனவும் டெல்டா மக்களை அமைதிப்படுத்த, வேளாண் மண்டல சட்டம் இயற்றுவது போல் இயற்றிவிட்டு, ஹைட்ரோ கார்பன் அனுமதி விஷயத்தில் தமிழக அரசு, மத்திய அரசுடன் சேர்ந்து நாடகமாடப் போகிறதா? என டெல்டா மக்கலும் சமூக ஆர்வலர்களும் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/agriculture/central-government-gave-permission-for-hydro-carbon-research-shocks-delta-peoples

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக