சென்னையை அடுத்த புழல் அருகே உள்ள கன்னடபாளையம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (25). இவர் புழல் பகுதியில் உள்ள லாரி புக்கிங் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். செங்குன்றத்தை அடுத்த சாமியார் மடத்தைச் சேர்ந்தவர் பாக்யலட்சுமி (22). இவர், அட்டை கம்பெனியில் வேலைப்பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரஞ்சித்குமாருக்கும் பாக்யலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதியினருக்கு மித்ரன் என்ற ஒன்றரை வயதில் மகன் உள்ளான்.
கடந்த 2 தினங்களுக்கு முன் மித்ரன் சேட்டை பண்ணியுள்ளான். அதனால் அவனைப் பாக்யலட்சுமி அடித்துள்ளார். அதைப் பார்த்த ரஞ்சித்குமார், குழந்தையை ஏன் இப்படி அடிக்கிறாய் என மனைவியைக் கண்டித்துள்ளார். அதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் ஒரு நாள் முழுவதும் பேசாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று வழக்கம் போல ரஞ்சித்குமார் வேலைக்குச் சென்றுவிட்டார். பாக்யலட்சுமியும் மித்ரனும் வீட்டில் இருந்துள்ளனர். நேற்று மாலை 7 மணியளவில் பாக்யலட்சுமி, கணவருக்கு போன் செய்து எப்போது வீட்டுக்கு வருவீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ரஞ்சித்குமார், போபமாக பதிலளித்ததாக சொல்லப்படுகிறது.
அதனால் மனவேதனையடைந்த பாக்யலட்சுமி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அப்போது தான் இறந்தபிறகு மகன் அநாதையாகிவிடுவேன் எனக்கருதிய பாக்யலட்சுமி, மகனை முதலில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துள்ளார். பிறகு அதே கயிற்றில் தானும் தற்கொலை செய்துள்ளார். இரவு 8 மணியளவில் பாக்யலட்சுமியின் அம்மா சாந்தி, வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. மேலும் உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து சாந்தி உள்ளே சென்றார். அப்போது, பேரனும் மகளும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து சாந்தி மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Also Read: சென்னை: ஆயிரம் ரூபாய்க்காக நடந்த கொலை! - துப்பு துலங்கிய பின்னணி
பின்னர் இதுகுறித்து புழல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த், புழல் இன்ஸ்பெக்டர் வசந்தன் மற்றும் போலீஸார் சென்றனர். அங்கு பாக்யலட்சுமி, மித்ரன் ஆகியோரின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மித்ரன், பாக்யலட்சுமி ஆகியோரின் கழுத்தில் காயங்கள் இருப்பதைக் கண்டறிந்த போலீஸார் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில்தான் இருவரின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், ரஞ்சித்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், மனைவி இறப்பதற்கு முன் போன் செய்த தகவலைத் தெரிவித்தார். திருமணமாகி2 ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்டிஓ விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் புழல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/in-chennai-mother-commits-suicide-after-killing-her-son
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக