Ad

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

கோவிட்-19 மையத்தை காலி செய்யும் சித்த மருத்துவர் வீரபாபு... பின்னணியில் நடந்தது என்ன?

தமிழகத்தில் முதல் சித்த மருத்துவ கோவிட்-19 பராமரிப்பு மையத்தை நடத்தி வந்த சித்த மருத்துவர் வீரபாபு, அதைக் காலி செய்யப் போவதாக அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் சென்னையில் லேசான கோவிட்-19 தொற்று ஏற்பட்ட 69 பேருக்கு சித்த மருத்துவ முறைகளை வழங்கிப் பரிசோதிக்கப்பட்டது. சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு நோயாளிகள் வீடு திரும்பினர். இதனையடுத்து அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று சென்னை சாலிகிராமத்திலுள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரி, சித்த மருத்துவ கோவிட்-19 மையமாக மாற்றப்பட்டது.

சித்த மருத்துவம்

ஜூன் 3-ம் தேதி இந்த மையம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அதனை நடத்தி வந்த சித்த மருத்துவர் வீரபாபு மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. சிகிச்சை பெற வருபவர்களிடம் ரத்தப் பரிசோதனை செய்ய ரூ.6,000 வசூலிப்பதாகவும், தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் சிகிச்சை பெறுவோருக்கு வழங்கும் மருந்துகளுக்கு பல ஆயிரம் கட்டணம் வாங்குவதாகவும், அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் ரூ. 2 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுபற்றி சென்னை மாநகராட்சிக்கு புகார்கள் சென்றதாகவும் கூறப்படுகிறது.

அதிகரித்த புகார்!

முதலில் 250 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட இந்த மையம் 450 படுக்கைகளாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் சித்த மருத்துவர் வீரபாபு மையத்தைக் காலி செய்வதாக அறிவித்தார். என்ன நடந்தது என்பது தொடர்பாக சித்த மருத்துவத் துறையின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.

``சிகிச்சை மையம் தொடங்கப்பட்ட காலத்தில் சிறப்பாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதன்பிறகுதான் பிரச்னைகள் தொடங்கின. நோயாளிகள் ஆபத்தான கட்டத்தை நெருங்கும்வரை அங்கேயே சிகிச்சையளிக்கிறார்.

சித்த மருத்துவர் வீரபாபு

பாதிப்புகள் அதிகரித்து ஆபத்தான கட்டத்தில் அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கிறார் என்றும் அங்கு சென்ற உடன் நோயாளிகள் இறந்துவிடுகின்றனர் என்றும் புகார் வந்தது. இறுதி நேரத்தில் அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைப்பதால் தன் மையத்தில் இறப்பே இல்லை என்று கணக்கு காட்டுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. கட்டணம் தொடர்பான புகார்களும் வந்தன. நேரடியாகவும் மறைமுகமாகவும் அவருக்கு பல தரப்பில் இருந்து எச்சரிக்கை தரப்பட்டது. துறை இயக்குநரிடமும் புகார் தெரிவித்தேன்.

அரசு சித்த மருத்துவர்கள் பலர் இருக்கும்போது தனியார் மருத்துவரிடம் இந்த மையத்தை ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி அரசு மருத்துவர்களிடமிருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மையத்துக்கு ஒரு சில சித்த மருத்துவர்களும் பணியமர்த்தப்பட்டனர்.

முதல்வரின் அலுவலகச் செயலாளரான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் ஆதரவு இவருக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் தைரியமாக இப்படியெல்லாம் செயல்படுகிறார். சித்த மருத்துவ முறையைப் பிரபலப்படுத்தாமல், தனி நபரை பிரபலப்படுத்துவதால் வரும் பிரச்னை இது" என்றார் ஆதங்கத்துடன்.

சித்த மருத்துவ பராமரிப்பு மையத்தைக் காலி செய்வது தொடர்பாகவும் அவர் மேல் உள்ள குற்றச்சாட்டுகள் பற்றியும் விசாரிக்க சித்த மருத்துவர் வீரபாபுவிடம் பேசினோம்.

``மூச்சுத்திணறல் உள்ள நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் அண்மையில் இங்கு நிறுவப்பட்டன. அதன் காரணமாக அலோபதி மருத்துவரையும் பணியமர்த்தினேன். அதில் சிகிச்சையளிக்கவே நோயாளிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. அரசுக்கும் இந்த விஷயம் தெரியும். வேறு யாரிடமும் அதிகக் கட்டணம் வசூலிக்கவில்லை.

பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உணவுக்காக அரசு வழங்கிய பணத்தில் கிடைத்த லாபத்தை வைத்துதான் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளைக்கூட வழங்கி வந்தேன். நான்கைந்து மாதமாக இந்த மையத்தைப் பராமரித்து வந்தேன். இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் இங்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். ஓர் உயிரிழப்புகூட ஏற்படவில்லை. ஓய்வில்லாமல் உழைத்து வருகிறேன். எனக்கும் சற்று ஓய்வு தேவைப்படுகிறது.

வீரபாபு

அதனால் இந்த மையத்தைக் காலி செய்கிறேன். இன்னும் 10 நாள்களுக்கு முழுமையாக ஓய்வெடுக்கப் போகிறேன். தற்போது 200 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். புது நோயாளிகள் யாருக்கும் அட்மிஷன் போடவில்லை. சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் லேசான பாதிப்புள்ளவர்கள்தான். இன்னும் ஓரிரு நாள்களில் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.

பத்து நாள்கள் ஓய்வுக்குப் பிறகு என்னுடைய வழக்கமான சித்த மருத்துவ சிகிச்சையைத் தொடரவிருக்கிறேன்" என்றார். ஆனால் இவர் மையத்தைக் காலி செய்யப் போவதாக அரசிடம் தெரிவித்தபோது, சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடியும்வரை காலி செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். அதனால் கூட்டத்தொடர் முடிந்தவுடன் காலி செய்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சி

Also Read: சேலம்: கொரோனா பாதித்தவர்களுக்கு சிறப்பு கவனம்... அசத்தும் அரசு சித்த மருத்துவ மையம்

மருத்துவர் பற்றிய புகார் குறித்து தமிழக சுகாதாரச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ``கோவிட்-19 பராமரிப்பு மையங்களை நிர்வகிப்பது சென்னை மாநகராட்சிதான். மாநகராட்சி அதிகாரிகளிடம்தான் இது பற்றிய விவரங்களைக் கேட்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக வீரபாபு என்னை இதுவரை தொடர்புகொள்ளவில்லை" என்பதோடு முடித்துக் கொண்டார். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை செயலர் கணேஷைத் தொடர்பு கொண்டோம். அவர் அழைப்பை ஏற்கவில்லை.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/siddha-doctor-veerababu-going-to-vacate-his-covid-19-siddha-treatment-centre

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக