Ad

ஞாயிறு, 26 நவம்பர், 2023

Suryakumar Yadav: `சூர்யாவை ட்ரோல் செய்வதில் நியாயமில்லை!' - ஏன் தெரியுமா?

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி முடிந்த சூடு குறைவதற்குள்ளாகவே அடுத்ததாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடத் தொடங்கிவிட்டது இந்தியா. முதல் போட்டியில் அதிரடியாக கடைசிப் பந்து வரை சென்று திரில்லாகவும் வென்றிருக்கிறது. ஆனால் இந்த வெற்றியால் ரசிகர்கள் முழுமையான மகிழ்ச்சியில் இல்லை. காரணம், இந்தியாவின் உலகக்கோப்பை தோல்வி. குறிப்பாக, சூர்யகுமார் யாதவ் மீது கடுமையான அதிருப்தியில் இருக்கின்றனர்.

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் அடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் ஒன்றுமே செய்யாமல் விட்டுவிட்டு இப்போது ஒரு சாதாரண டி20 போட்டியில் வந்து வாள் வீசிக் கொண்டிருக்கிறார் என்பதே காரணம்.
Suryakumar Yadav

ரவிசாஸ்திரி: இப்படி ஒரு ஃபார்மில் இருக்கக்கூடிய சூர்யாவை எப்படி ஆட்டமிழக்கச் செய்ய முடியும்?

மேத்யூ ஹேடன்: இது ஓடிஐ உலகக்கோப்பை எனச் சொல்லுங்கள், அதுபோதும்.

வர்ணனையில் இருவரும் இப்படிப் பேசிக்கொண்டதாக மீம்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. அடுத்த ஒரு வாரத்திற்கான கன்டன்ட் என்ன எனத் தேடிக் கொண்டிருந்த இணையதளவாசிகளுக்கு இரையாகியிருக்கிறார் சூர்யா. அவர் என்னதான் சிறப்பாகச் செயல்பட்டாலுமே உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அவர் செய்யத் தவறிய சம்பவத்தை வைத்தே அவரை இனி ட்ரோல் செய்யப்போகின்றனர். ஆனால், இதில் நியாயமே இல்லை என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.

ரசிகர்கள் சில வீரர்களைப் புரிந்துகொண்டு உட்கிரகித்துக் கொள்ளும் விஷயத்திலேயே சில சமயங்களில் தடுமாறிவிடுகிறார்கள். அசோக் டிண்டா ஒயிட் பால் கிரிக்கெட்டில் அதிக ரன்களை கொடுக்கிறார் என்பதற்காக அவரைக் கடுமையாக ட்ரோல் செய்வார்கள். இப்போது வரைக்கும் எந்த பௌலர் அதிகமாக ரன்களைக் கொடுத்தாலும் அவரை 'டிண்டா அகாடமி வீரர்' எனச் சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அதே அசோக் டிண்டா மேற்கு வங்கத்திற்காக உள்ளூர் போட்டிகளில் துல்லியமாகப் பந்துவீசி மிரட்டியிருக்கிறார்.

அஷோக் டிண்டா

ரஞ்சி கிரிக்கெட்டின் ரெக்கார்டுகளை புரட்டிப் பார்த்தால் பல ஆண்டுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் டிண்டாவின் பெயர் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். ஆனால், நம்மவர்கள் அவரை வெறுமென ஒயிட் பால் கிரிக்கெட்டராக சில போட்டிகளை மட்டுமே பார்த்து தீர்ப்பெழுதிவிட்டார்கள். அதே டிண்டாவிற்கு முறையாக ரெட் பாலிலும் கவனம் குவியும் வகையிலான வாய்ப்புகள் கிடைத்திருந்தால் அசத்தியிருப்பார். ஆனால், அது அவருக்கு கடைசி வரை கிடைக்கவே இல்லை.

அதேமாதிரி, வாய்ப்புகள் கிடைத்தும் குறிப்பிட்ட ஃபார்மேட்களில் சிறப்பாகச் செயல்பட முடியாமல் சொதப்பிய வீரர்களும் இருக்கிறார்கள். மிகப்பெரிய உதாரணம் யுவராஜ் சிங். டி20 உலகக்கோப்பையையும் ஓடிஐ உலகக்கோப்பையையும் இந்தியா வென்றதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங்தான். அவர்தான் அந்த உலகக்கோப்பைகளின் ஹீரோ. ஆனால், ஒயிட் பால் கிரிக்கெட்டில் சாதித்த யுவராஜால் ரெட் பால் கிரிக்கெட்டில் எதையும் பெரிதாக செய்ய முடியவில்லை. அதற்கான காரணம் புதிர்தான்.

எல்லா வீரர்களும் எல்லா ஃபார்மேட்டிலும் கில்லியாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதே ஞாயமில்லை. சூர்யகுமார் யாதவும் ஒரு யுவராஜைப் போலத்தான். யுவராஜுக்கு எப்படி ரெட் பால் செட் ஆகவில்லையோ அதேமாதிரி சூர்யாவுக்கு லாங் ஃபார்மேட் கிரிக்கெட் செட் ஆகவில்லை. உலகக்கோப்பையிலுமே இந்திய அணி அவரை முதன்மை ஆப்ஷனாக பார்க்கவே இல்லை. ஓடிஐக்களில் தன்னால் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதை சூர்யாவும் உணர்ந்திருந்தார். சூர்யா முழுமையான வீரர் இல்லை என்பதை ரோஹித்தும் டிராவிட்டும் கூட அறிந்திருந்தனர். ஏன், சில சமயங்களில் வெளிப்படையாகவே சூர்யாவின் ஃபார்ம் குறித்து கவலையும் தெரிவித்திருந்தனர்.

Suryakumar Yadav
உலகக்கோப்பையில் வேறு வழியே இல்லாமல்தான் சூர்யாவை லெவனில் எடுத்தனர். காரணம், ஹர்திக்கின் காயம். ஹர்திக் கொடுக்கும் அந்த பேட்டிங் பங்களிப்பை நிரப்ப வேறு ஆப்ஷன் இல்லை. அதனால் மட்டுமே சூர்யாவை எடுத்திருந்தனர்.

ஆக, சூர்யா ஓடிஐக்கான வீரர் இல்லை என்பதையும் அவரின் ஓடிஐ செயல்பாட்டை வைத்து டி20 செயல்பாட்டை குறைத்து மதிப்பிடுவதும் நியாயம் இல்லை என்பதையும் உணர வேண்டும். இன்னும் 6-7 மாதங்களில் அடுத்த டி20 உலகக்கோப்பை தொடங்கவிருக்கிறது. 2007க்குப் பிறகு இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்லவே இல்லை. அதுவும் இந்தியாவிற்கு முக்கியமான தொடர்தான். அதில், சூர்யா இந்தியா அணிக்கு முக்கியமான வீரராக இருப்பார். டி20க்களில் அவரின் ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள். 80% போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டிருப்பார். நேற்று கூட 200+ சேஸிங்கில் 190 ஸ்ட்ரைக் ரேட்டில் 80 ரன்களை அடித்து ஆட்டத்தை இந்தியா பக்கமாகத் திருப்பியிருப்பார்.

ஓடிஐ க்களை வைத்து டி20க்களில் அவரை விமர்சிக்காமல் இந்த ஃபார்மேட்டுக்கான நியாயமான விமர்சனங்கள் ஏதேனும் இருந்தால் வேண்டுமானால் அதை முன் வைக்கலாம். நல்ல அதிரடியாக ஆடும் சூர்யா கடைசி வரை நின்று எந்தப் போட்டியையும் முடித்துக் கொடுக்கமாட்டார். நேற்றும் இதுதான் நடந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் பெயரெடுக்க தொடங்கிய காலத்திலிருந்தே இதுதான் நடக்கிறது. இது சூர்யா கட்டாயம் திருத்திக் கொள்ள வேண்டிய விஷயம்.
Suryakumar Yadav

இவற்றையெல்லாம் தாண்டி, கடந்த காலத்தில் செய்த தவறுகளை மட்டுமே வைத்து நிகழ்காலத்தில் ஒருவனின் காலைப் பிடித்து கீழே இழுப்பதைப் போல ட்ரோல் செய்வதில் எந்த நன்மையும் விளையப்போவதில்லை என்பதையும் உணர வேண்டும்.

ஆல் தி பெஸ்ட் சூர்யா!



source https://sports.vikatan.com/cricket/why-we-shouldnt-troll-suryakumar-yadav-based-on-his-odi-performance

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக