Ad

சனி, 11 நவம்பர், 2023

How To: தீபாவளி லேகியம், வீட்டிலேயே செய்வது எப்படி? I How To Make Deepavali Lekiyam At Home?

தீபாவளிக்குப் பலரும் பட்டாசு, புது உடை, உணவு வகைகள், பலகாரங்கள் எனக் கொண்டாட்டமாக உள்ளனர். ஊரில் இருந்து வந்தவர்களுடன் பேசிக்கொண்டே பலகாரம் செய்வதில் வீட்டில் இருப்பவர்களுக்கு அலுப்பு ஏற்படாது. ’முறுக்கு மாவுல வெண்ணெய் கொஞ்சம் சேர்த்துக்கோ, டேஸ்ட் சூப்பரா இருக்கும்’, ’இந்த வருஷம் லட்டு கொஞ்சம் அதிகமாக செய்வோமா, சித்தி வீட்டுக்கும் கொடுத்துவிடலாம்’ எனப் பேச்சுகளுடன் வேலைகள் நடந்து கொண்டிருக்கும்.

இதனூடே, ’நம்ம பாட்டி ஒரு தீபாவளி லேகியம் செய்வாங்களே... அப்பப்பா என்ன ருசி...’ என்று அதைப் பற்றி யாராவது சிலாகித்துச் சொல்வார்கள். இன்றும் கூட சில வீடுகளில் தீபாவளி பலகாரங்களுடன் தீபாவளி லேகியமும் செய்வது கட்டாயமாக உள்ளது.

தீபாவளி லேகியம் என்றால் மருந்து என்றில்லாமல், சுவையும் அபாரமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள். தீபாவளி விருந்தாலும், பலகாரங்களாலும் ஏற்பட்ட வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறு, திடீர் ஏப்பங்கள், வாந்தி, வயிற்று வலி, அசதி போன்றவற்றுக்கு தீபாவளி லேகியம் நிவாரணம் கொடுக்கும். கூடவே பனிக்காலத்தில் வரக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கும் இது அருமருந்தாகும்.

இப்படி பல நன்மைகளைத் தரக்கூடிய தீபாவளி லேகியத்தை எப்படிச் செய்வது என்பது குறித்துக் கூறுகிறார், திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ்.

தேவையான பொருள்கள்

சுக்கு - 50 கிராம்

மிளகு - 50 கிராம்

திப்பிலி - 50 கிராம்

சதகுப்பை - 30கிராம்

சிறுநாகப்பூ - 50 கிராம்

வாய்விடங்கம் - 50 கிராம்

கருஞ்சீரகம் - 50 கிராம்

சீரகம் - 50 கிராம்

இலவங்கப்பட்டை - 50 கிராம்

கோரைக் கிழங்கு - 50 கிராம்

கொத்தமல்லி - 30 கிராம்

சித்தரத்தை - 30 கிராம்

ஓமம் - 30 கிராம்

அதிமதுரம் - 20 கிராம்

கிராம்பு - 20 கிராம்

வெல்லம்- 300 கிராம்

தேன் - 100 கிராம்

நெய் - 100 மில்லி

நீங்களே செய்யலாம், செரிமானக் கோளாற்றைப் போக்கும் தீபாவளி லேகியம்!

செய்முறை

* அடுப்பில் பாத்திரம் வைத்து, மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக சிறு தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

* வறுத்து வைத்த ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக நன்றாக அரைத்து, சலித்துக்கொள்ளவும்.

* லேகியத்திற்கு வேண்டிய அளவு வெல்லத்தை எடுத்து பாகு காய்ச்சவும். பாகு கம்பி பதம் வந்தவுடன் அடுப்பில் இருந்து எடுக்காமல் தீயை கொஞ்சம் குறைத்து, அரைத்து வைத்திருக்கும் பொடிகளை ஒன்றன் பின் ஒன்றாக சிறிது சிறிதாகச் சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

* பின்னர் வாணலியை இறக்கி வைத்து நெய் விட்டு நன்றாகக் கிளறி சிறிது ஆறிய பின் சிறிது சிறிதாக தேன் விட்டுக் கிளறி வேறு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* ஆறிய பின்னர் வயதுக்கு ஏற்றவாறு 3 - 12 வயது வரை 5 கிராம் காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகு எடுத்து சப்பிச் சாப்பிடலாம். 13 வயதுக்கு மேற்பட்டோர் 10 கிராம் அளவு எடுத்து காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகுச் சப்பிச் சாப்பிடலாம்.



source https://www.vikatan.com/health/medicine/diwali-legiyam-which-is-good-for-the-body-how-to-do-it

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக