Ad

வியாழன், 2 நவம்பர், 2023

Mohammed Shami: மூன்று போட்டிகள், இரண்டு ஃபைஃபர், இரண்டு ஆட்டநாயகன்; இது ஷமியின் சிறப்பான சம்பவம்!

"நான் பென்ச்சிலிருந்து எல்லாவற்றையும் பார்த்துகொண்டுதான் இருந்தேன். வாய்ப்பு கிடைக்காத சமயங்களில் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும். நமக்கென எதாவது போட்டிகள் கிடைத்தால்தான் நம்மை நிரூபித்துக் காட்ட முடியும். ஆனால், அப்படியான சூழலிலும் உங்கள் அணி சிறப்பாகச் செயல்படுகிறதெனில், உங்கள் சக பௌலர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் எனில் நாம் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒவ்வொருவரும் மற்றவர்களின் வெற்றிக்கும் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்."
Shami

தரம்சாலாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் ஹாலை எடுத்த பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் முகமது ஷமி இப்படித்தான் பேசியிருந்தார். ஷமியின் பேச்சில் வெளிப்படும் பக்குவமும் அணிக்காக எதையும் தாங்கிக் கொள்ளும் தன்மையும்தான் அவரை அடுத்தடுத்த வெற்றிகளை நோக்கி தள்ளுகிறது. இப்போது வான்கடேவில் நடந்த ஆட்டத்திலும் இலங்கைக்கு எதிராக இன்னொரு 5 விக்கெட் ஹாலை எடுத்துள்ளார்.

Shardul Thakur

நடப்பு உலகக்கோப்பையின் தொடக்கத்தில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் ஷமி முதல் சாய்ஸாக இருக்கவே இல்லை. சேப்பாக்கத்தில் நடந்த முதல் போட்டியில் மூன்று ஸ்பின்னர்களுடன் இந்திய அணி ஆடியது. அதனால் ஷமிக்கு வாய்ப்பில்லை என சமாதானம் கூறப்பட்டது. ஆனால், அதற்கடுத்த போட்டிகளில் அஷ்வின் பென்ச்சில் வைக்கப்பட்டு இரண்டு ஸ்பின்னர்களோடு ஆடியபோதும் ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கொஞ்சம் பேட்டிங் ஆடுவார் என்கிற ஒரே காரணத்துக்காக ஷர்துல் தாக்கூருக்குதான் அந்த வாய்ப்பை வழங்கினர்.

சிராஜ் ஃபார்முக்கு வருவதில் தடுமாற்றம் இருந்தது. அப்போதும் அணியின் கண்கள் ஷமியை நோக்கி திரும்பவில்லை. தரம்சாலாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில்தான் அந்தச் சூழலுக்கு 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆடியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஷமியை லெவனுக்குள் கொண்டு வந்தார்கள்.

அந்த முதல் போட்டியிலேயே வீசிய முதல் பந்திலேயே வில் யங்கின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியிருந்தார். 'வாய்ப்பு கிடைத்தால்தான் நம்மை நிரூபித்துக்காட்ட முடியும்' என ஷமி கூறியிருந்தாரே அந்த வார்த்தைகளில் அடங்கியிருந்த ஆதங்கம் முழுவதும் இந்தப் போட்டியில் வெளிப்பட்டிருந்தது. இந்தப் போட்டியிலேயே 5 விக்கெட் ஹாலையும் எடுத்து ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தியிருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான கடந்த போட்டியிலுமே 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பேர்ஸ்ட்டோ, ஸ்டோக்ஸ், மொயீன் என வீழ்த்தியதில் பெரும்பாலும் முக்கிய விக்கெட்டுகள்தான்.

Shami

மூன்றாவது போட்டியாக இலங்கைக்கு எதிரான போட்டியிலும் களமிறங்கினார். பும்ராவும் சிராஜூம் முதல் 9 ஓவர்களில் அதிரடியாக இலங்கையில் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்க, 10வது ஓவரில் ஷமியின் கைகளுக்குப் பந்து வந்தது.

Shami
தன்னுடைய சகாக்கள் தங்களுடைய வேலையை கச்சிதமாக முடித்துவிட்டார்கள். இப்போது இது ஷமியின் முறை. அவர்கள் இருவரும் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்துக் கொடுத்தார்கள். ஷமியால் அதை செய்ய முடியவில்லை. ஆனால், அதற்கு பரிகாரமாக அந்த முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த ஓவரையே மெய்டனும் ஆக்கினார்.

இலங்கை அணியை இத்தனை வேகமாக வீழ்த்த ஷமியின் பந்துவீச்சே மிக முக்கிய காரணமாக இருந்தது.

இந்தப் போட்டியிலும் 5 விக்கெட் ஹாலை எடுத்திருந்தார். அதிலும் வீசிய முதல் 13 பந்துகளிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

ஷமியின் இந்த உலகக்கோப்பை பயணம் முழுவதுமே வியப்புதான். ஆடியிருக்கும் 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அதில் இரண்டு 5 விக்கெட் ஹாலும் அடக்கம். இன்னொரு போட்டியில் 4 விக்கெட்டுகள். விக்கெட்டுகளை உற்பத்தி செய்யும் வேக இயந்திரம் என்றே ஷமியைப் புகழலாம். ஆனால், இதற்காக அவர் கடந்து வரும் கரடுமுரடான பாதைக்குதான் அதிக கவனத்தைக் கொடுக்க வேண்டும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த 2015 உலகக்கோப்பையில் ஷமிதான் இந்திய அணியின் மெயின் பௌலர். அந்த உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் ஆடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த உலகக்கோப்பையின் முதல் போட்டியில் ஆடிய போதே ஷமிக்கு மூட்டில் கடும் காயம் ஏற்பட்டிருந்தது. கொடும் வலியில் நகரவே முடியாத போதும் அந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக அளப்பரிய பங்களிப்பைக் கொடுத்திருந்தார்.

Shami | IND vs AUS
"காயம் ஏற்பட்ட சமயத்தில் என்னுடைய தொடையும் மூட்டும் ஒரே அளவில் இருந்தது. அந்தளவுக்கு வீக்கம் இருந்தது. என்னால் நகர முடியவில்லை. ஒருநாளைக்கு மூன்று பெயின் கில்லர்களை எடுக்க வேண்டியிருந்தது. அப்படியொரு சூழலிலும் சக வீரர்கள் மற்றும் தோனி கொடுத்த நம்பிக்கையில்தான் ஆடினேன்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதியில் என்னால் பந்துவீச முடியவில்லை என களத்திலேயே தோனியிடம் கூறிவிட்டேன். 'நீ 60 ரன்களுக்குள் கொடுத்தால் போதும். அப்படி வீசு வேறெதுவும் வேண்டாம்' என தோனி கூறி எப்படியோ என்னை ஊக்குவித்துதான் பந்துவீச வைத்தார்." இதெல்லாம் அந்த உலகக்கோப்பைக்கு பிறகு ஷமியே கூறியவை.

Shami

2015-ல் இன்றியமையாத வீரராக இருந்தவர், பும்ராவின் வருகையால் 2019 உலகக்கோப்பையில் இரண்டாம் கட்ட வீரராக ஆகிப்போனார். அந்த உலகக்கோப்பையிலும் தொடக்கத்தில் ஷமி லெவனில் இருந்திருக்கமாட்டார். புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்படவே அவருக்குப் பதிலாகத்தான் லெவனுக்குள் வந்திருந்தார். அப்போதும் சொற்ப போட்டிகளிலேயே ஆடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். ஆனாலும் அரையிறுதியில் அவரை பென்ச்சில்தான் வைத்திருப்பார்கள். இப்போதும் இந்திய அணியில் அவருடைய இடம் நிரந்தரமானதல்ல. எப்போது வேண்டுமானாலும் பென்ச்சுக்கு அனுப்பப்படலாம். ஆனால்,

Shami
இப்போது அவர்தான் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்திருக்கும் பௌலர் (45). இந்திய அணிக்காக ஓடிஐக்களில் அதிக 5 விக்கெட் ஹால்களையும் எடுத்தவர் (4). அவருக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அவர் வீசும் பந்து ஸ்டம்புகளைச் சிதறடிக்கும். பேட்டர்களைப் பதறவைக்கும். சாதனை மேல் சாதனைகளை செய்யும் அதுதான் ஷமி!


source https://sports.vikatan.com/cricket/an-analysis-about-mohammed-shamis-comeback

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக