Ad

சனி, 4 நவம்பர், 2023

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டுகிறதா திமுக அரசு?

`தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி ஆய்வறிக்கை சமர்ப்பித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைப்படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?' என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இது தொடர்பாக விளக்கமளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம்

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கிப்போட்ட சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு. 2018-ம் ஆண்டு தூத்துக்குடி வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையால் தாங்கள் கேன்சர் உள்ளிட்ட நோய் பாதிப்புக்கு ஆளாகிவருவதாகவும், நீர், நிலம், காற்று என தூத்துக்குடியின் சுற்றுச்சூழலே மாசுபட்டு வாழத்தகுதியற்ற இடமாக மாறிவருவதாகவும் கூறி, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளில், மிகப்பெரிய பேரணியை நடத்திய பொதுமக்கள்மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஸ்னைப்பர் துப்பாக்கிகள் மூலம் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் குண்டடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பின்னர் மனித உரிமை ஆணையம், புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது. ஆனால், `இந்த வழக்கு விசாரணை முறையாக நடத்தப்படவில்லை, எனது புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கூறி மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஹென்றி திபேன்

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் இருக்கிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், அது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில், `உயர் நீதிமன்றத்திலிருந்து பெற்ற அறிக்கையைத் தவிர, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இருந்து எந்த அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை!' என பதிலளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மனுதாரர் ஹென்றி திபேன், ``மனித உரிமை ஆணைய சட்டப்படி, அறிக்கையை சம்பந்தப்பட்ட அரசுக்கும், புகார்தாரர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த சி.பி.ஐ, தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை என்ற காவல்துறை அதிகாரியை மட்டும் வழக்கில் சேர்த்திருக்கிறது. ஆனால், துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், 17 அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. அந்த அறிக்கையை ஏற்று அரசாணை பிறப்பித்த தமிழ்நாடு அரசு, அதனடிப்படையில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை!" எனக் குற்றம்சாட்டினார்.

சென்னை உயர் நீதிமன்றம்

இதையடுத்து, `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?' என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் நவம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கான பணிகளை சட்டத்துறை செய்து வருகிறது!" எனத் தெரிவித்திருக்கிறார்.

``கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடந்த சம்பவத்தில், தி.மு.க அரசே அமைத்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைப்படி, தவறுசெய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க அரசுக்கு என்ன தயக்கம்?" என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/high-court-questioned-tamilnadu-government-in-tuticorin-firing-cae

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக