Ad

திங்கள், 6 நவம்பர், 2023

Mohammed Shami: இனிப்பு மண்ணிலிருந்து கிளம்பி வந்த `Bloody Sweet’ ஷமி; கொண்டாட்ட நாயகன் ஆனது எப்படி?

`ஒரு நல்ல விளையாட்டு வீரருக்கும், ஒரு சிறந்த விளையாட்டு வீரருக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? ஒரு நல்ல விளையாட்டு வீரர், தனக்குச் சாதகமான சூழ்நிலைகளில் நன்றாக விளையாடுகிறார்; ஒரு சிறந்த வீரர், எல்லாச் சூழ்நிலைகளிலும் நன்றாக விளையாடுகிறார்.’ - முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மெக்ராத் (Glenn McGrath).

ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட்... ரசிகர்களை உஷ்ணத்தின் உச்சத்துக்குக் கொண்டு போயிருக்கும் தருணம் இது. செமி ஃபனலில் மோதப்போவது யார்... ஃபைனலில் இந்தியா வெல்லுமா... தொடர் நாயகன் யாராக இருக்கும்... இப்படிப் பல கேள்விகளோடு பரபரப்பாகக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அதோடு, இந்திய அணி மீதான எதிர்பார்ப்பும் எகிறியிருக்கிறது. இரண்டாம் இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்காவை பந்தாடி மிரளவைத்தது... இப்படித் தொடர்ந்து வெற்றிபெறுவது இந்திய அணிக்குச் சாத்தியம்தானா இந்தியா அடுத்து எப்படி விளையாடப்போகிறது என்று பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய அணிக்கு வலுசேர்த்த வீரர்கள் பலர். விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்கிற அந்தப் பட்டியலில் தனித்த அடையாளமாக ஒருவரைச் சுட்டிக்காட்டுகிறார்கள் ரசிகர்கள். அவர், முகமது ஷமி. ரசிகர்கள் மட்டுமல்ல... இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ், `Bowler of the World Cup' என்று முகமது ஷமியைப் பாராட்டித் தள்ளியிருக்கிறார். முதலில் வாய்ப்பு வழங்கப்படாமல் பிறகு விளையாடி முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அடுத்தடுத்த போட்டியிலும் விக்கெட்டுகளை வாரிக் குவித்து ஆச்சர்யப்படுத்தயிருக்கிறார் ஷமி.

யார் இந்த முகமது ஷமி?

1990-ம் ஆண்டு, உத்தரப்பிரதேசத்தில் மொராதாபாத்துக்கு அருகே இருக்கும் சஹஸ்பூர் என்ற சிறு கிராமத்தில் பிறந்தவர் முகமது ஷமி. சஹஸ்பூர் சேறும் சகதியுமான மண் மட்டுமல்ல... அதை `இனிப்பு மண்’ என்றும் சொல்லலாம். சுற்றிலும் சர்க்கரை ஆலைகள். எதிர்காலத்தில் அந்த மண்ணுக்கு சர்க்கரையைவிட இனிப்பான, வெற்றிச் சேதியை ஷமி கொண்டு வருவார் என்று அந்த மண்ணின் மக்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்பா தூசீஃப் அகமது (Toosheef Ahmed) ஒரு விவசாயி. இளம் வயதில் அவரும் கிரிக்கெட் விளையாடியவர்.

Shami
`நான் யாருடனும் என்னை ஒப்பிட்டுப் பார்க்க ஒருபோதும் முயன்றதில்லை.’ - சச்சின் டெண்டுல்கர்.

ஒருநாள்... வயலிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தார் தூசீஃப் அகமது. கிராமத்துத் திடலில் சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஷமியும் இருந்தார். தன்னுடைய மகன், பேட் பிடிப்பதைவிட பௌலிங்கில் ஆர்வமாக இருப்பதைப் பார்த்தார் அப்பா தூசீஃப் அகமது. கொஞ்ச நேரம்தான். வீட்டுக்குப் போய்விட்டார். அன்று இரவு படுக்கைக்குப் போகும் முன்பு, ஷமியை அழைத்தார். ``நாளைக்குக் காலையில நான் வயலுக்குப் போறப்போ நீயும் என்கூட வா.’’

``ஸ்கூல் இருக்கேப்பா.’’

``கொஞ்ச நேரம்தான். நீ விட்டுக்கு வந்து ஸ்கூலுக்குப் போயிடலாம்’’ என்றார்.

ஷமி தலையை ஆட்டினார்.

அடுத்த நாள் ஆளரவமற்ற ஓர் இடத்துக்கு ஷமியை அழைத்துப்போனார் அப்பா. ``நேத்து நீ பந்து போட்டதைப் பார்த்தேன். எங்கே இப்போ போடு பார்ப்போம்.’’ ஒரு பந்தை எடுத்து நீட்டினார். ஷமி விழிவிரியப் பார்த்தார். ஆனாலும் தயங்கவில்லை. பந்து வீசும் அளவுக்கான தூரத்துக்குப் போனார். பந்தைப் பிடித்தார். குறி பார்த்தார். அப்பா நின்றுகொண்டிருந்த இடத்தை நோக்கிப் பந்தை வீசினார். அப்பா பந்தை எடுத்துக்கொண்டு ஷமியின் அருகே வந்தார்.

Bumrah & Shami

``இப்போ நீ போடுற பந்தை யாரு வேணாலும் அடிக்க முடியும். நாம போடுற பந்தை ஒரு பேட்ஸ்மேன் அடிக்கக் கூடாதுன்னா அது வேகமா இருக்கணும். வேகம்... வேகம்... வேகம்... அது ரொம்ப முக்கியம். அந்தப் பந்து எங்கே போகுது, என்ன செய்யுதுன்னு கணிக்க முடியாததா இருக்கணும்.’’

முகமது ஷமிக்குப் புரிந்ததுபோல இருந்தது. தொடர்ந்து பயிற்சி. அப்பாவும் சித்தப்பாவும் இளம் வயதில் கிரிக்கெட் விளையாடியவர்கள். இருவரும் ஷமிக்குப் பயிற்சி கொடுத்தார்கள். நாளாக நாளாக பந்து ஷமிக்கு வசப்பட்டது. எப்பேர்ப்பட்ட காற்றையும் எதிர்கொண்டு ஸ்டம்ப்பை வீழ்த்தும் அளவுக்கான பந்து வீசும் வேகம் அவருக்கு வசப்பட்டது.

`இளம் வயதிலிருந்தே விளையாட்டுகளில் ஈடுபடுவது உடல்நலனையும் மனநலனையும் உறுதிப்படுத்தும்.’ - முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா (Brian Lara)

அப்பா துசீஃப் அகமது, ஷமியை வாட்ச் பண்ணிக்கொண்டேயிருந்தார். அந்தச் சிறுவனுக்குள் ஒரு கனல் இருந்தது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. பந்துவீச்சில் அத்தனை ஆர்வமாக இருந்தான். அவன் போடுகிற பாலெல்லாம் ஸ்டம்ப்பைப் பிய்த்துக்கொண்டுபோனது. அவன் வயது பையன்கள் பேட் பிடிக்கும்போது அவன் பந்து போடுகிறான் என்றாலே அலறினார்கள். இருந்தும் என்ன... அவர்கள் விளையாடுவது டென்னிஸ் பாலில். இது வேலைக்காகாது. நிஜ கிரிக்கெட் என்பது வேறு. நிஜ கிரிக்கெட் பந்து என்பது வேறு ரகம். கையில் தொட்டுப் பார்க்கவே கடினமாக இருக்கும். கால் கையில் வேகமாக வந்து மோதி விழுந்தால் எலும்பு நொறுங்கிப்போகும். தலையில் விழுந்தால் மண்டை ஓடு தகர்ந்துபோகும் அளவுக்கு வீரியமுள்ள பந்து அது. அதில் ஷமி முறையாகப் பயிற்சி பெற வேண்டும். அப்போதுதான் அவன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இதையெல்லாம் அசை போட்டுக்கொண்டேயிருந்தார் துசீஃப் அகமது.

Shami

அப்போது ஷமிக்கு 15 வயது. அப்பா, ஷமியை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள மொராதாபாத் நகரத்துக்குப் போனார். அருகில் என்றால் பக்கத்தில் இருக்கும் நகரம் அல்ல. கிட்டத்தட்ட 22 கிலோமீட்டர். எப்படியாவது ஷமி ஓர் ஆளாக வேண்டும், கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்கிற உறுதி அந்த மனிதருக்குள் அழுத்தமாக விழுந்திருந்தது. அங்கே ஒரு கோச்சிடம் கொண்டுபோய்ச் சேர்த்தார். கோச்சின் பெயர் பத்ருதீன் சித்திக் (Badruddin Siddique). ஷமி பந்துவீசும் லாகவத்தைப் பார்த்தவுடனேயே அவருக்குப் பிடித்துப்போய்விட்டது. இந்தப் பையன் சாதாரண ஆளில்லை. பந்து வீசவே பிறந்தவன் என்கிற எண்ணம் அவருக்குள் பதிந்துவிட்டது. ஷமி வேகமாகப் பந்து வீசுவதை மெருகேற்றினார் பத்ருதீன் சித்திக்.

முகமது ஷமியின் இளம் வயது வாழ்க்கை மிக விரிவானது. ஒரேயோர் கட்டுரையில் அத்தனையையும் அடக்கிவிடுவது அசாதாரணமான காரியம். ஷமியின் திறமையை முழுமையாகத் தெரிந்துகொண்டு அதை மேலும் மேலும் வளர்த்தார் பத்ருதீன். ஷமியும் தனக்கான எதிர்காலம் கிரிக்கெட்... முக்கியமாக பௌலிங் என்பதை உணர்ந்துகொண்டார். பத்ருதீனிடம் பயிற்சி பெற்ற காலங்களில் அவர் சொல்வதற்கெல்லாம் ஒத்துழைத்தார். பயிற்சிக்கு ஒரு நாள்கூட வராமல் இருந்ததில்லை ஷமி. அதேநேரத்தில் கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டார். இதையெல்லாம், தன் வாய்மொழியாகவே சொல்லியிருக்கிறார் பக்ருதீன். 19 வயதுக்குள்ளானவர்களுக்கான போட்டியில் இடம் இல்லை என்றபோது, ஷமியை கொல்கத்தாவுக்குப் போகச் சொன்னார் பக்ருதீன்.

shami

கொல்கத்தாவில் அன்றைக்கு இருந்த கிரிக்கெட் கிளப்புகளில் வசதி படைத்தவர்களுக்கும், நன்கு அறிமுகமானவர்களுக்குமே இடம் கிடைத்தது. அதையும் தாண்டி, ஒரு சாதாரண கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்தார் ஷமி. அங்கே தெபாபிராட்டா தாஸ் (Debabrata Das) என்பவரின் கண்களில் விழுந்தார். அவர் அன்றைக்கு கிரிக்கெட்டில் முக்கியமான ஆளுமை.

`கிரிக்கெட்தான் எல்லாம் என்பது இல்லை. நிச்சயமாக எந்த வகையிலும் இல்லை. ஆனால், நான் யார் என்பதை விளக்கும் ஒரு பெரிய பகுதி அது.’ - எம்.எஸ்.தோனி.

ராஜஸ்தானில் நடந்த ஒரு விளையாட்டில் ஷமி ஆடியதைப் பார்த்து ஆடிப்போனார் தாஸ். அதற்குப் பிறகு ஷமியிடம் சம்பளம் பேசப்பட்டது. ஒரு சீஸனுக்கு 75,000 ரூபாய். தினமும் 100 ரூபாய். அதைப் பற்றியெல்லாம் அக்கறையே படவில்லை ஷமி. ஸ்டம்ப்பைத் தூக்குவதிலேயே அவருடைய கவனமெல்லாம் இருந்தது. 2010-ல் டி-20 மேட்ச்சில் வங்காள கிரிக்கெட் டீமில் விளையாடி, பிறகு Duleep Trophy-யில் விளையாடி, ஐபிஎல்-லுக்கு வந்து, இந்தியன் கிரிக்கெட் டீமில் சேர்ந்து இன்றைக்கு அசைக்க முடியாத உயரத்தைத் தொட்டிருக்கிறார் முகமது ஷமி.

பத்திரிகையாளரும், அதீத கிரிக்கெட் ஆர்வலரும், என் நண்பருமான அலுலக சக தோழர் ஒருவர், ``ஸ்டம்ப்புக்கும் பாலுக்கும் ஒரு முக்கியமான கனெக்‌ஷன் இருக்குங்க. கிரிக்கெட் ஸ்டேடியத்துல ஸ்டம்ப், பந்துக்காகக் காத்திருக்கும். `வா... வா... என்னை வந்து முத்தமிடு. என்னை அப்பிடியே நொறுக்கு... உடைச்சுப்போடு... நான் அந்த தருணத்துக்காகத்தான் காத்திருக்கேன்’ அப்பிடின்னு சொல்லிக்கிட்டே இருக்குமாம். இதை நல்லா புரிஞ்சுக்கிட்ட பௌலர், ஸ்டம்புக்குத்தான் குறி வெப்பார். அது ஷமி விஷயத்துல நூறு சதவிகிதம் நடந்துக்கிட்டிருக்கு’’ என்றார்.

முகமது ஷமி

அதோடு முகமது ஷமியின் பந்துவீச்சின் லாகவத்தையும் அவர் குறிப்பிட்டார். ``அவரோட பௌலிங்ல ஸ்பெஷல்னா மூணு விஷயம்... ஒண்ணு, நேரா ஸ்டம்ப்பை நோக்கியே பால் போடுறது. ரெண்டு, துல்லியமா தன் குறியை எய்ம் பண்ணி வீசுறது. மூணு, வேகம்... அது ரொம்ப முக்கியம். வேகம்... வேகம்... வேகம்... அதுல ஷமி மன்னன். அதுனாலதான் ஷமியை நாம கொண்டாடுறோம்.’’

முகமது ஷமியின் சாதனைகள், அவர் எடுத்த விக்கெட்டுகள், அவரின் பந்து வீச்சு வேகம்... அத்தனையும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், இன்றைக்கும் அவர் இரண்டாம்தர பௌலர்தான். இரண்டு, மூன்று முன்னணி பௌலர்களுக்குப் பின்னர்தான் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் தன் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, இதுதான்... கிரிக்கெட்தான்... பௌலிங்தான் தன் வாழ்க்கை என உறுதி செய்துகொண்டு முன்னேறினால், அவரின் வெற்றியை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இதோ... அதைச் செயலில் காட்டிக்கொண்டிருக்கிறார் முகமது ஷமி!



source https://www.vikatan.com/lifestyle/motivation/motivation-story-for-the-life-of-mohammed-shami

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக