Ad

புதன், 15 நவம்பர், 2023

IND vs NZ: வேட்டையாடிய ஷமி, வரலாறு படைத்த கோலி - இறுதிப்போட்டியில் இந்தியா!

2011-ல் எந்த வான்கடே மைதானத்தில் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதோ அதே வான்கடே மைதானத்தில் இந்திய அணி மீண்டும் ஒரு உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. கடைசி வரை பரபரப்பாக சென்ற அரையிறுதிப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியிருக்கிறது.
Rohit

இந்த அரையிறுதிப் போட்டியை ஒரு திரைப்படம் போல இரண்டு பாதிகளாக பிரித்துக் கொண்டால், முதல் பாதி முழுவதும் இந்தியாவிற்குச் சாதகமாகவே இருந்தது. டாஸை ரோஹித்தான் வென்றார். நினைத்தபடியே முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். நினைத்தபடியே பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடிக்கொடுத்து அணிக்குத் தேவைப்பட்ட பாசிட்டிவான தொடக்கத்தை கொடுத்தார். இன்னொரு ஓப்பனரான கில்லும் தன் பங்குக்கு அதிரடி காட்டியிருந்தார். கோலி இந்தத் தொடர் முழுவதும் எப்படி பக்குவமாக ஆடியிருந்தாரோ அதே பக்குவமான ஆட்டத்தை இங்கேயும் ஆடியிருந்தார். நல்ல ஸ்கோரை செட் செய்ய அத்தியாவசிய தேவையாகக் கருதப்படும் பார்ட்னர்ஷிப்களை அமைப்பதில் கோலி முக்கிய பங்காற்றினார். கில், ஸ்ரேயாஸ் இருவருடனும் ஒத்துழைத்து சிறப்பாக ஆடியிருந்தார். வான்கடேவில் சச்சினின் முன்பாகவே தனது 50வது சதத்தை பதிவு செய்து அவரது ரெக்கார்டையே உடைத்து அதை சச்சினுக்கே டெடிகேட்டும் செய்து அசத்தினார் கோலி.

கோலி 117 ரன்களில் சௌதியின் பந்தில் ஆட்டமிழக்க, ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து ஆடி அசத்தலாக ஒரு சதத்தை அடித்தார். ஃபார்மில் இல்லாமல் தவித்த ஸ்ரேயாஸ் ஐயர் இதே வான்கடே மைதானத்தில்தான் இலங்கைக்கு எதிராக அரைசதம் அடித்து மீண்டும் நல்ல ஃபார்மிற்கு வந்திருந்தார். இப்போது மீண்டும் அதே வான்கடேவில் அரையிறுதிப் போட்டியில் சதத்தை அடித்து தனது முக்கியத்துவம் என்ன என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். காலில் பிடிப்பு ஏற்பட்டிருந்த போதும் ரிட்டையர் ஹர்ட்டிலிருந்து மீண்டு வந்து பேட்டிங் ஆடினார் கில். ஒரு அணியாக முழுக்க முழுக்க சிறந்த பேட்டிங் செயல்பாட்டை வெளிக்காட்டியதால் இந்திய அணி 50 ஓவர்களில் 397 ரன்களை எடுத்தது.

Kohli

நியூசிலாந்து அணிக்கு 398 ரன்கள் டார்கெட். இத்தனை பெரிய டார்கெட்டை நாக் அவுட் அழுத்தத்தில் சேஸ் செய்வது கடினம். இது ஒன்சைட் கேமாகவே அமையும் என்கிற எதிர்பார்ப்பே அனைவருக்கும் இருந்தது. ஆனால், நியூசிலாந்து ட்விஸ்ட் கொடுத்தது. இந்தப் போட்டியில் கடைசி வரைக்கும் இந்தியாவை நிம்மதியடைய செய்யாமல் பரபரப்பாகவே வைத்திருந்தது. பவர்ப்ளேக்குள்ளாகவே ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே என இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை ஷமி எடுத்துக் கொடுத்தார்.

Shami

சீமை சரியாக பிடித்து ஷமி உள்ளேயும் வெளியேயும் பந்தைத் திருப்பியதில் நியூசிலாந்து திணறிப்போனது. ஷமியை தவிர பும்ரா மற்றும் சிராஜின் லைன் & லெந்த்தெல்லாம் கொஞ்சம் சுமாராகவே இருந்தது. பும்ராவெல்லாம் கன்னாபின்னாவென வீசி எக்கச்சக்கமான வொய்டுகளை அள்ளிக்கொடுத்திருந்தார். இரண்டு விக்கெட்டுகள் வேகமாக விழுந்திருந்தாலும் டேரில் மிட்செல்லும் கேன் வில்லியம்சனும் கூட்டணி அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இருவரும் 8வது ஓவரில் கூட்டணி சேர்ந்தனர்.

Kane Williamson
33வது ஓவரில்தான் இந்த கூட்டணி பிரிந்தது. இடைப்பட்ட இந்த 25 ஓவர்கள்தான் இந்திய அணியை ரொம்பவே படுத்திவிட்டது. இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பி நின்ற மணித்துளிகள் இதுவாக மட்டும்தான் இருக்கும்.

அந்தளவுக்கு கடுமையாக இந்தியா சொதப்பியது. கேன் வில்லியம்சன் நல்ல டச்சிலெல்லாம் இல்லை. ஆனாலும், அவருக்கு அதிர்ஷ்டம் இருந்தது. நிறைய பந்துகள் எட்ஜ் ஆகி கேட்ச் ஆகும் வாய்ப்பைப் போல சென்று பவுண்டரியானது. சில பந்துகள் இன்சைட் எட்ஜ் ஆகி ஸ்டம்பை மிஸ் செய்தன. lbw க்களில் அம்பயர்ஸ் கால் ஆகி தப்பித்தார். இப்படி அதிர்ஷ்டத்தின் துணை கொண்டே கேன் வில்லியம்சன் நிலைகொண்டுவிட்டார். டேரில் மிட்செல் ஸ்பின்னர்களை முட்டி போட்டி ஃபைன் லெகிலும் தேர்டு மேனிலும் ஆடியே நிலைப்பெற்றுவிட்டார். இருவரும் இணைந்து 181 ரன்களை எடுத்துவிட்டனர்.

Daryl Mitchell

ரன்ரேட்டையும் ஏறக்குறைய வழிக்குக் கொண்டு வந்துவிட்டனர். நடப்பு உலகக்கோப்பையில் ரோஹித்தை அத்தனை இறுக்கமாக பார்த்ததே இல்லை. இந்திய அணியினரின் முகத்தில் அத்தனை பதற்றம் இருந்தது. இடையில் பும்ராவின் பந்து ஒன்றில் கேன் வில்லியம்சன் கொடுத்த எளிதான கேட்ச்சை ஷமி ட்ராப் வேறு செய்திருந்தார். இவையெல்லாம் இந்த முறையும் நாக் அவுட்டில் நியூசிலாந்து இந்திய அணியைத் தோற்கடிக்கப் போகிறதோ எனும் அச்சத்தை உண்டாக்கியது. இந்திய ரசிகர்களின் நம்பிக்கைக் குறைந்து கொண்டே வந்த அந்த தறுவாயில்தான் ஷமியின் கைக்கு மீண்டும் பந்து சென்றது.

ஷமி
33வது ஓவரை வீசினார் ஷமி. ஆட்டத்தின் திருப்புமுனையே இந்த ஓவர்தான். ஆட்டம் காண்பித்துக் கொண்டிருந்த வில்லியம்சனைக் கச்சிதமாக வீழ்த்தி வெளியே அனுப்பினார் ஷமி. லெக் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட அந்த பந்தை ஸ்கொயரில் சிக்ஸராக்க முயன்றார் வில்லியம்சன். பவுண்டரி லைனை ஒட்டி நின்ற சூர்யகுமார் யாதவ் இந்த பந்தை மிகச்சரியாக கேட்ச் பிடித்தார்.

ஒட்டுமொத்த மைதானமுமே ஆர்ப்பரிப்பில் அலறியது. வான்கடே மைதானமே குதூகலத்தில் குலுங்கியது. ஷமி இத்தோடு நிறுத்திவிடவில்லை. புதிதாக உள்ளே வந்த லேதமுக்கு ஒரு இன்கம்மிங் டெலிவரியை வீசி lbw ஆக்கி 0 ரன்னில் வெளியேற்றினார். ஆட்டமே இங்குதான் மாறத் தொடங்கியது. அதற்கு முன்பு வரை ஓவருக்கு ஒரு சிக்ஸர் பவுண்டரி என அடித்து ரன்ரேட்டைக் கச்சிதமாக உயர்த்திக் கொண்டிருந்த நியூசிலாந்து அணி விக்கெட் விழுந்த அழுத்தத்தில் தடுமாறியது. அடுத்த 4 ஓவர்களில் நியூசிலாந்து அணி 16 ரன்களை மட்டுமே எடுத்தது. ஒரே ஒரு பவுண்டரியை மட்டுமே அடித்தது. இருந்தாலும் நியூசிலாந்து ஓயவில்லை. டேரில் மிட்செல் ஆஸ்திரேலியாவிற்கு மேக்ஸ்வெல் ஆடியதை போன்ற ஒரு இன்னிங்ஸை ஆட முனைந்தார். க்ளென் பிலிப்ஸூம் அதற்கு ஒத்துழைத்தார். ஆனாலும் அவர்களால் ஓரளவுக்கு போராட முடிந்ததே தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.

Kohli
134 ரன்கள் எடுத்திருந்த டேரில் மிட்செலை ஷமி வீழ்த்த, பிலிப்ஸை பும்ரா வீழ்த்தினார். அவ்வளவுதான் ஆட்டம் முடிந்தது. 327 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட். 70 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெற்றது.
Team India

இன்றைய ஆட்டத்தின் ஹீரோ ஷமிதான். 9.5 ஓவர்களில் 57 ரன்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்தான் நல்ல தொடக்கத்தையும் கொடுத்தார். சறுக்கலுக்குப் பிறகு ஆட்டத்தின் திருப்புமுனையை அவர்தான் உண்டாக்கினார். டெயில் எண்டர்களை அவர்தான் வேகமாக வீழ்த்தினார். ஆட்டம் முழுக்க ஷமிமயம்தான். இப்படிப்பட்ட பௌலரைத்தான் இந்தத் தொடரின் தொடக்கத்தில் முதல் சாய்ஸாகக் கருதாமல் இருந்தது இந்தியா.

2011 உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியுமே பாகிஸ்தானுக்கு எதிராக இப்படித்தான் பரபரப்பாக சென்றிருக்கும். ஆனாலும் க்ளைமாக்ஸ் இந்தியாவிற்கு சாதகமாக அமைந்திருக்கும். இப்போதும் அப்படித்தான் நடந்திருக்கிறது. 2011 அப்படியே திரும்புவதை போலத் தோன்றுகிறது. நவம்பர் 19 இந்தியாவின் நாளாக இருக்குமா?



source https://sports.vikatan.com/cricket/india-vs-newzealand-semi-final-match-report-and-analysis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக