Ad

சனி, 18 நவம்பர், 2023

`உலகின் மிகவும் விசுவாசமான நாய்’ - 100 ஆண்டுகளைத் தொட்ட ஹச்சிகோவின் உருக்கமான கதை!

அகிடா வகையைச் சேர்ந்த நாயான ஹச்சிகோ 1923-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி ஜப்பானில் பிறந்துள்ளது. இதை டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஹிடெசாபுரோ யுனோ என்ற பேராசிரியர் ஒருவர் தன் செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். ஹிடெசாபுரோ யுனோ ஒவ்வொரு நாளும் காலையில் ஷிபுயா ரயில் நிலையத்தில் இருந்து டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்துக்கு வேலைக்கு செல்வார். இவர் வேலைக்குச் செல்லும் போதும் மீண்டும் மாலையில் வேலைவிட்டு வரும்போதும் இவரை ரயில் நிலையத்துக்கே சென்று ஹச்சிகோ வரவேற்கும்.

ஹச்சிகோ

ஆனால், 1925-ம் ஆண்டு மே 21-ம் தேதி பல்கலைக்கழகத்துக்கு வேலைக்குச் சென்ற ஹிடெசாபுரோ யுனோ மீண்டும் திரும்பவில்லை. பல்கலைக்கழகத்தில் இருக்கும்போதே, திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்துவிட்டார். இதை அறியாத ஹச்சிகோ ஒவ்வொரு நாளும் அவரை தேடி ரயில் நிலையத்துக்கு சென்றிருக்கிறது. ஒரு நாளோ, ஒரு வாரமோ, ஒரு மாதமோ அல்ல. 1925 முதல் 1935 வரை சுமார் 10 ஆண்டுகள் தனது பாசத்துக்குரிய உரிமையாளர் ஹிடெசாபுரோ யுனோவை தினமும் தேடிச் சென்றுள்ளது ஹச்சிகோ.

ரயில் நிலைய ஊழியர்கள் அதை விரட்ட முயற்சி செய்தாலும் தினமும் அங்கு செல்வதை அது நிறுத்தவில்லை. பின்னர், 1932-ம் ஆண்டு அக்டோபரில் ஹச்சிகோவைப் பற்றி ஜப்பானிய நாளிதழான டோக்கியோ அசாஹி ஷிம்பன் வெளியிட்ட செய்தியையடுத்தே, அதன் புகழ் ஜப்பான் மட்டுமல்ல உலகமெங்கிலும் பரவியது. இதைக் கண்ட பலரும் அதை தத்தெடுக்க முயன்றனர் ஆனால், அது அவர்களுடன் செல்லாமல் யுனோவின் முன்னாள் தோட்டக்காரருடன் சென்றுவிட்டது. டோக்கியோவில் உள்ள ஷிபுயா ரயில் நிலையத்தில் ஹச்சிகோ வெண்கல உருவச்சிலையை வைத்த அந்நாட்டு அரசாங்கம், 1931-ல் அகிடோவை தேசிய சின்னமாகவும் அறிவித்து கௌரவித்தது.

ஷிபுயா ரயில் நிலையத்தில் ஹச்சிகோ

பின்னர் 1935-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி ஹச்சிகோ தனது உயிரை விட்டது. இறந்த ஹச்சிகோவின் உடல் தகனம் செய்யப்பட்டு அதன் சாம்பல் ஹிடெசாபுரோ யுனோவின் சமாதிக்கு அருகிலேயே புதைக்கப்பட்டது. மேலும் உலகின் மிகவும் விசுவாசமான நாயாக அறியப்படும் ஹச்சிகோவை நினைவுகூரும் வகையில் டோக்கியோ பல்கலையின் வேளாண்மை துறையின் கட்டடத்தின் முன்னே ஹச்சிகோ மகிழ்ச்சியாக உனோவை பார்த்து பாய்வது போன்ற ஒரு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

ஹச்சிகோவின் கதை மாணவர்களின் பாடப்புத்தகங்கள், திரைப்படங்கள், சிறுவர்களுக்கான கார்ட்டூன் தொடர்கள் என அனைத்திலும் இடம் பெற்றுள்ளது. ஹச்சிகோ கேள்விக்கு இடமில்லாத விசுவாசத்துடன் இருப்பதால் சிறந்த ஜப்பானிய குடிமகனை பிரதிப்பலிப்பதாகக் கருதப்படுகிறது. ஹச்சி என்பதுதான் நாயின் உண்மையான பெயர் `கோ’ என்பது அந்த நாயின் நீண்ட காத்திருப்புக்கு அந்நாட்டு மாணவர்கள் வழங்கிய கௌரவப் பெயர். அதனால் பின்னாளில் ஹச்சிகோ என அழைக்கப்பட்டது.

டோக்கியோ பல்கலைக்கழக சிலை

அகிடா நாய்கள் அமைதியானவை, நேர்மையானவை, புத்திசாலித்தனம் மற்றும் தைரியமானவை. தங்கள் எஜமானருக்கு கீழ்படிபவை. இது ஒரு பிடிவாதமான ஆளுமையும் கொண்டுள்ளது. தன் எஜமானரைத் தவிர மற்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும். இது ஜப்பானின் பழைமையான மற்றும் பிரபலமான நாய் இனங்களில் ஒன்றாகும்.



source https://www.vikatan.com/trending/viral/the-worlds-most-loyal-dog-hachiko-turns-100

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக