Ad

திங்கள், 6 நவம்பர், 2023

நமக்குள்ளே... பண்டிகை மகிழ்ச்சியையும் பிள்ளைகளின் கொண்டாட்டத்தையும் ஒரு புள்ளியில் இணைப்போம்!

பக்கத்து வீட்டு வாண்டு, புத்தாடை அணிந்து, சாக்லேட்களுடன் நம் வீடு தேடி வந்து சிரிக்கும்போது, ‘என்ன ஸ்பெஷல் இன்னிக்கு?’ என்றால்... விழுந்தது போக மீதமிருக்கும் பற்களால் வெட்கத்துடன் சிரித்து, ‘எனக்கு ஆப்பி பர்த்டே’ எனச் சொல்லும். குழந்தைகள் உலகில் `பர்த்டே’ என்பது கிடையாது; `ஆப்பி பர்த்டே’தான். குழந்தைகளுக்கு ’ஹேப்பி பர்த்டே’ போலத்தான் சமூகத்துக்குப் பண்டிகைகளும் திருவிழாக்களும். அவை மகிழ்ச்சிக்கானவை.

மொழி அடிப்படையில் நிறைய புத்தாண்டுகள் இருந்தாலும் ஜனவரி 1 தான் உலகம் கொண்டாடும் புத்தாண்டு. என்றாலும், இன்று பல பண்டிகைகளும், கலாசார விழாக்களும் எல்லைக்கோடுகள் தாண்டியும் கொண்டாடப்படுகின்றன. அமிஞ்சிகரையில் பணிபுரியும் ஒரு ஐடி ஊழியர், தன் அமெரிக்க வாடிக்கையாளருக்கு ‘ஹேப்பி ஹாலோவீன்’ சொல்வதோடு நிற்காமல், தானும் அதைக் கொண்டாடி வீடியோ எடுத்துப் பகிர்கிறார். அதை அலுவல் ரீதியான வேலையாக மட்டும் செய்யாமல், உணர்வுரீதியாக விரும்பியே செய்கிறார். கணவரின் நலனுக்காக வட மாநிலப் பெண்கள் கொண்டாடும் ’கர்வா செளத்’ இப்போது இங்கேயும் கொண்டாடப்படுகிறது.

நாடு, மாநிலம் என்பதெல்லாம் இன்று கொண்டாட்டங்களுக்கு எல்லையாக இல்லை என்பதில் மகிழ்ச்சிதான். ஆனால், மாற்றுக் கலாசார பண்டிகைகளை அறிந்து, அவற்றைக் கொண்டாடும் நாம், நம் பண்டிகைகளின் கொண்டாட்டங்களையும் விரிவுபடுத்தி வருகிறோமா?!

நமக்குள்ளே

இந்தக் கேள்விக்கு கலவையான பதில்களே வரக்கூடும். பண்டிகைகளை மறக்காவிட்டாலும் அதற்கான காரணங்கள் மறக்கப்பட்டுவிட்டன. 90’ஸ் கிட்ஸ் பலருக்கு ஆயுத பூஜைக்கும், பொங்கலுக்கும் ‘இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக’தான் அவர்கள் அறிந்த கொண்டாட்டமாக இருக்கிறது. பண்டிகை என்றால் புத்தாடைகள் என்பதுகூட 2கே கிட்ஸுக்கு இல்லை. வருடம் முழுக்க ஆடைகள் எடுத்துக்கொண்டே இருக்கும் அவர்களுக்கு, ரீல்ஸ் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதே பண்டிகைகளுக்கான ‘நோட்டிஃபிகேஷன்’ ஆகியுள்ளது.

இன்றைய தலைமுறையினரின் கொண்டாட்ட வடிவத்தை குறை சொல்ல எதுவுமில்லை. மாற்றம்தான் இங்கு நிரந்தரம். என்றாலும், நம் பண்டிகைகளின் அடிப்படையை அவர்களுக்குச் சொல்ல சின்னச் சின்ன முயற்சிகள்கூட எடுக்காமல், நாம் தொலைத்த விழா சந்தோஷங்கள் நிறைய என்பதையும் மறுப்பதற்கில்லை. அந்தச் சிறிய முயற்சிகளை... இந்த தீபாவளி மற்றும் பிற பண்டிகை நாள்களில் முன்னெடுக்கலாமே?

உதாரணமாக, தீபாவளிக்கு சொந்த ஊர் போனதை சமூக வலைதளத்தில் ‘ஸ்டோரி’ போடும் பிள்ளைகளிடம், நம் கால தீபாவளி பண்டிகையில் சித்தப்பா பிள்ளைகள், பெரியம்மா பிள்ளைகள், அத்தை பிள்ளைகள் என உறவுகள் கூடும்போது மகிழ்ச்சி எப்படி பெருகும் என்பதை எடுத்துச்சொல்லி, உறவுகள் பேணலை வலியுறுத்தலாம். மாட்டுப் பொங்கலுக்கு மாட்டுடன் ரீல்ஸ் எடுக்கும் இளசுகளிடம், பொங்கல் பண்டிகையின் அடிப்படையை அவர்களுக்குப் பிடிக்கும் வகையில் சொல்லலாம். `வாவ்’ என மொபைல் ஃப்ரேமுக்குள் உங்களையும் இழுத்துப்போட்டு ஷூட் செய்து விடுவார்கள். கேட்டுக்கொள்ள அவர்கள் தயாராகவே உள்ளார்கள்... நாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறோமா பண்டிகைகளின் உயிர்நாடி மகிழ்ச்சியை?! செய்வோம் இந்தப் பண்டிகையில்!

தீபாவளி வாழ்த்துகள் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

`முதுமைக்கு மரியாதை - முடிவில் ஓர் ஆரம்பம்' அடுத்த இதழில் இடம்பெறும்.


source https://www.vikatan.com/lifestyle/namakkulle-editorial-page-november-21-2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக