Ad

வியாழன், 16 நவம்பர், 2023

SA v AUS: கண்கள் கலங்க, இதயங்கள் நொறுங்க மீண்டும் வெளியேறிய தென்னாப்பிரிக்கா; இறுதிப்போட்டியில் ஆஸி!

"It's a never ending tension at Eden Garden..." என எம்பாங்வாவின் அந்தக் கம்பீரக் குரலின் வர்ணனையில் போட்டியைப் பார்க்கும்போது ஒரு மாதிரி ரத்தம் கொதித்து உச்சிக்கு ஏறியது. ஆம், உலகக்கோப்பையின் அதிசிறந்த அரையிறுதிப் போட்டிகளில் ஒன்று நடந்து முடிந்திருக்கிறது.

ஒவ்வொரு நொடியிலும் பதைபதைப்பையும், என்ன நடக்குமோ என்கிற திகிலையும் கொடுத்த இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி திரில்லாக வென்று இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் ஆட தகுதிபெற்றிருக்கிறது.

ஆஸ்திரேலியா

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமாதான் டாஸை வென்றிருந்தார். தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்தான் செய்திருந்தது. முதலில் பேட்டிங் செய்வதென்பது தென்னாப்பிரிக்காவிற்கு கைவந்த கலை. நடப்பு உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்த பெரும்பாலான போட்டிகளில் 300+ ரன்களைக் கட்டாயம் எடுத்திருக்கிறது. சேஸிங்கில்தான் கொஞ்சம் வீக். புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த அணி, நெதர்லாந்து அணிக்கு எதிராக டார்கெட்டை சேஸ் முடியாமல் தோல்வியைத் தழுவியிருந்தது.

அந்தளவுக்கு தென்னாப்பிரிக்காவிற்கு சேஸ் என்றால் ஆகாது. ஆக, முதல் பேட்டிங் எடுத்தது தென்னாப்பிரிக்காவிற்கு முழுக்க முழுக்கச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி இருக்கவில்லை. ஒரு ட்விஸ்ட் அரங்கேறியது. வழக்கமாக சேஸிங்கில் எப்படி ஆடுவார்களோ அப்படியே முதலில் பேட்டிங் செய்கையிலும் ஆடினார்கள்.

"நான் 100% ஃபிட்டாக இல்லை!" என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு பேட்டிங் ஆட வந்திருந்த பவுமா முதல் ஓவரிலேயே ஸ்டார்க்கின் பந்தில் எட்ஜ்ஜாகி கீப்பர் இங்லீஸிடம் கேட்ச் ஆனார். முதல் 10 ஓவர்கள் பவர்ப்ளே முழுவதும் ஆஸியின் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினர். டீகாக்கும் 3 ரன்களில் ஹேசல்வுட்டின் பந்தில் சிக்சருக்கு முயன்று பேட் கம்மின்ஸால் அற்புதமாக கேட்ச் செய்யப்பட்டார். ஸ்டார்க்கும் ஹேசல்வுட்டும் டெஸ்ட் மேட்ச்சின் முதல் செஷனில் பந்து வீசும் உணர்வில் வீசிக்கொண்டிருந்தனர். குட் லெந்தில் ஒரு புள்ளியைப் பிடித்துக் கொண்டு அதைச் சுற்றிய லெந்திலேயே தொடர்ந்து வீசி கச்சிதமாக டெஸ்ட் மேட்ச் உணர்வைக் கொடுத்தனர்.

ஹேசல்வுட்

தென்னாப்பிரிக்காவின் பேட்டிங்கும் டெஸ்ட் போட்டியை போலத்தான் இருந்தது. ஓப்பனர்களை வேகமாக இழந்ததால் ஓவருக்கு 1 ரன் என்ற வீதத்தில்தான் அடித்துக் கொண்டிருந்தனர். மார்க்ரமும் வாண்டர் டஸனும் கூட எதுவும் செய்ய முடியவில்லை. ஸ்டார்க், ஹேசல்வுட் கூட்டணியிடம் வீழ்ந்தனர். 24-4 என தென்னாப்பிரிக்க அணி தடுமாறியது. இந்நிலையில்தான் க்ளாசனும் மில்லரும் கூட்டணி சேர்ந்தனர்.

மில்லர் - க்ளாசென்
12வது ஓவரில் இணைந்த இந்தக் கூட்டணி 31வது ஓவரில்தான் பிரிந்தது. இருவரும் இணைந்து 95 ரன்களைச் சேர்த்திருந்தனர். தென்னாப்பிரிக்க அணி கொஞ்சம் மூச்சுவிட்டது. கொஞ்சம் நிமிர்ந்தது.

ஆஸிக்குப் பொறுக்கவில்லை. பார்ட் டைமரான ஹெட்டைக் கொண்டு வந்து ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை அள்ளினார் பேட் கம்மின்ஸ். க்ளாசனை போல்டாக்கிய ஹெட் யான்சனை lbw ஆக்கினார். அடுத்தடுத்த பந்துகளில் இருவரையும் வீழ்த்தினார். தென்னாப்பிரிக்கா மீண்டும் தடுமாறியது. ஆனாலும், மில்லர் களத்தில் நின்றார். தன்னால் இயன்றவரை தட்டி தட்டி ஆடி குறைந்தபட்ச மதிப்புமிக்க ஸ்கோரை நோக்கி தென்னாப்பிரிக்கவை முன் நகர்த்தினார்.

மில்லர்
முக்கியமான கட்டத்தில் உயிரைக் கொடுத்து ஆடி சதத்தை அடித்து, அணியையும் 200 ரன்களைக் கடக்க வைத்தார் மில்லர். 101 ரன்களை எடுத்தவர் கம்மின்ஸின் பந்தில் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தென்னாப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வார்னர்

ஆஸ்திரேலியாவிற்கு டார்கெட் 213. ரொம்பவே சௌகரியமாக ஆஸ்திரேலியா வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படித்தான் இன்னிங்ஸையும் தொடங்கியது ஆஸி. ஓவருக்கு 10 ரன்கள் என்ற வீதத்தில் முதல் ஐந்தாறு ஓவர்களை வார்னரும் ஹெட்டும் அணுகியிருந்தார்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடித்து ஆட்டத்தை சீக்கிரம் முடித்துவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால், இந்த இருவரும் வீழ்ந்த பிறகு ஆட்டம் வேறொரு கட்டத்தை எட்டியது.

இதயத்துடிப்பை எகிற செய்து இருப்புக் கொள்ளாமல் நிலைத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்திவிட்டது. வார்னரை மார்க்ரம் போல்டாக்க ஹெட்டை மகாராஜா போல்டாக்கினார். ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் என வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸிக்கு ஆதிக்கம் செல்லுத்த தென்னாப்பிரிக்காவிற்கு அப்படியே தலைகீழாக ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஷம்சியும் மகாராஜாவும் இரண்டு எண்ட்களிலும் தனி ராஜ்ஜியம் நடத்தியிருந்தனர்.

ஆஸியினர் முழுமையாகத் திணறினர். எக்கச்சக்கமான கேட்ச் வாய்ப்புகளைக் கொடுத்தனர். நிறைய வாய்ப்புகளை தென்னாப்பிரிக்க ஃபீல்டர்கள் விரயம் செய்தனர். எக்கச்சக்கமான கேட்ச் ட்ராப்கள். எக்கச்சக்கமான மிஸ் ஃபீல்ட்கள்! சில அப்பீல்கள் அம்பயர்ஸ் காலில் அப்படியே எதிராகச் சென்றன. ஆனாலும் திறம் வாய்ந்த பந்துவீச்சினால் தொடர்ச்சியாக சான்ஸை கிரியேட் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தினர் தென்னாப்பிரிக்க பௌலர்கள்.

தென்னாப்பிரிக்கா

மிட்செல் மார்ஸை ரபாடா டக் அவுட் ஆக்கினார். நின்று பயமுறுத்திய ஸ்மித்தை கோட்ஸி வெளியேற்றினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆடிய இன்னிங்ஸ் கொடுத்த தெம்போடு வந்த மேக்ஸ்வெல்லை ஷம்சி போல்டாக்கினார். ஒவ்வொரு விக்கெட்களாக விழ விழ, தென்னாப்பிரிக்க மீதான நம்பிக்கை அதிகரித்தது. எப்படியாவது பிழைத்திருந்தால் போதும் வென்றுவிடலாம் என்கிற எண்ணத்தில் ஒரு அடியை பின்னால் வைத்துதான் ஆடியது ஆஸி. நின்று ஆடி நம்பிக்கைக் கொடுத்த இங்லீஸை கோட்ஸி போல்டாக்கிய தருணத்தில் ரத்த அழுத்தம் இன்னும் அதிகரித்தது. என்ன நடக்கப்போகிறதோ எனும் பதைபதைப்பு அதிகமானது. இரு அணிகளும் கத்தி மீது நடப்பதைப் போன்ற இறுக்கத்தோடும் விறுவிறுப்போடும் ஆடின. ஆனாலும் தென்னாப்பிரிக்க அணியால் போட்டியை சுவாரஸ்யப்படுத்த முடிந்ததே ஒழிய வெல்ல முடியவில்லை.

ஷம்சி

கம்மின்ஸூம் ஸ்டார்க்கும் கடைசியில் தேவைப்பட்ட ரன்களை மெதுவாக உன்னிப்பாகக் கவனித்து ஆடி எடுத்துக் கொடுத்தனர். 47.2 ஓவர்களில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.

மீண்டும் ஒரு முறை நாக் அவுட்டில் தென்னாப்பிரிக்கா வீழ்ந்திருக்கிறது. உடைந்தே பழகிப்போன தென்னாப்பிரிக்க வீரர்களின் இதயத்திற்கு இந்த முறையும் அந்தச் சோகத்திலிருந்து விடுதலை இல்லை. இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியா அணி எட்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. தங்களின் வல்லாதிக்கத்தை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

இந்த முறை உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்? இந்தியாவா, ஆஸ்திரேலியாவா? கமென்ட்டில் சொல்லுங்கள்.



source https://sports.vikatan.com/cricket/south-africa-vs-australia-semi-final-match-report-and-analysis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக