Ad

செவ்வாய், 7 நவம்பர், 2023

பீகாரில் 65 சதவிகிதமாக உயரும் இடஒதுக்கீடு... சட்டசபையில் முதல்வர் நிதிஷ் குமார் |முழு விவரம்

பல மாநிலங்களில் இன்னும் ஆரம்பிக்கப்படாத சாதிவாரி கணக்கெடுப்பை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது மாநிலத்தில் நடத்தி முடித்திருக்கிறார். இந்த சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பீகார் அரசு வெளியிட்ட முதல் அறிக்கையில், `13.07 கோடி மக்கள் வசிக்கும் பீகாரில், பிற்படுத்தப்பட்டோர் 27 சதவிகிதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 37.01 சதவிகிதம், பொதுப்பிரிவினர் 15.52 சதவிகிதம், பட்டியலினத்தவர் 19.65 சதவிகிதம், பழங்குடியினர் 1.68 சதவிகிதம், யாதவ சமுதாயத்தினர் 14.26 சதவிகிதம், குஷ்வாஹா இனத்தவர் 2.27 சதவிகிதம், குர்மி மக்கள் 2.87 சதவிகிதம் உள்ளனர்' என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சாதிவாரி கணக்கெடுப்பு

இப்படியிருக்க, சாதிவாரி கணக்கெடுப்பின் இரண்டாவது தொகுப்பு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், `பீகாரிலுள்ள மொத்த குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 34 சதவிகித குடும்பங்கள் ரூ.6,000-க்கும் குறைவான மாத வருமானத்திலும், 29.61 சதவிகித குடும்பங்கள் ரூ.10,000-க்கும் குறைவான, 28 சதவிகித குடும்பங்கள் ரூ.10,000 முதல் ரூ.50,000 மாத வருமானத்திலும், நான்கு சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே ரூ.50,000 மேலான மாத வருமானத்திலும் வாழ்வதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தலா 42 சதவிகித பட்டியலின, பழங்குடியின குடும்பங்கள் வறுமையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதோடு, மாநிலத்தில் எழுத்தறிவு 79.7 சதவிகிதமாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது. இந்த நிலையில், பீகாரில் இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திலிருந்து 65 சதவிகிதமாக ஆக உயர்த்தப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் நிதிஷ் குமார் முன்மொழிந்திருக்கிறார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

அவர் முன்மொழிந்ததில், `பட்டியலினத்தவரின் இடஒதுக்கீடு 13 சதவிகிதத்திலிருந்து இருந்து 20 சதவிகிதமாகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 30 சதவிகிதத்திலிருந்து 43 சதவிகிதமாகவும், பழங்குடியினர் இடஒதுக்கீடு முன்பிருந்த 2 சதவிகிதம் அப்படியே நீடிக்கும்' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, இதர பிற்படுத்தப்பட்டோர் பெண்களுக்கான மூன்று சதவிகித இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்றும் நிதிஷ் குமார் தெரிவித்தார். நிதிஷ் குமாரின் கூற்றுப்படி இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே இது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான மத்திய அரசின் 10 சதவிகித இடஒதுக்கீட்டையும் சேர்த்து, பீகாரில் இடஒதுக்கீடு 75 சதவிகிதமாக உயரும் என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/news/general-news/bihar-government-will-increase-reservation-to-65-percent-cm-nitish-kumar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக