Ad

சனி, 11 நவம்பர், 2023

``சாதிய வன்கொடுமைகள் ஆட்சியைப் பொறுத்து நடப்பதல்ல..!” - சொல்கிறார் திருமாவளவன்

``தி.மு.க ஆட்சியில் சாதிய வன்முறைகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறதே?”

திருமாவளவன் - ஸ்டாலின்

``சாதிய வன்கொடுமைகள் ஆட்சியைப் பொறுத்து நடப்பதல்ல, தி.மு.க அரசும் சாதி பேதங்களுக்கு ஆதரவானது கிடையாது. ஆனால் சமூக யதார்த்தத்தில் இன்னும் இது போன்ற நிலை தொடர்கிறது. அது வருத்தத்துக்குரியது. இவற்றைத் தீவிரமான நடவடிக்கைகள் மூலமாகக் கட்டுபடுத்த முடியும். வி.சி.க-வைப் பொறுத்தவரை விசாரணை என்கிற பெயரில் எங்காவது குற்றவாளியைக் கைதுசெய்வதில் காலதாமதம் செய்யப்பட்டால், உடனடியாக அமைச்சரின் கவனத்துக்கும், முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு செல்கிறோம். சம்பவங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.”

திருமாவளவன்

`` `மாநில உரிமைகளைவிட தேசிய அரசியலை மையப்படுத்தும் தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை' என்ற வாதம் சமீபகாலமாக முன்வைக்கப்படுகிறதே?”

``நம் கருத்தாகச் சொல்வதைவிட, மக்களே தேசியக் கட்சிகளை ஏற்பதா இல்லையா என்பதை முடிவு செய்கிறார்கள். 40 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தல் என்றால், காங்கிரஸ்தான் தலைமை வகிக்கும். தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ ஓர் அங்கமாக இருக்கும். இந்தியா முழுக்க அப்படித்தான் தேசியக் கட்சிகள் தலைமை தாங்கின. ஆனால், இன்று இந்தியா முழுக்க மாநிலக் கட்சிகள்தான் ஆதிக்கம் செய்கின்றன. இது தன்னியல்பாக மக்கள் உணர்ந்துகொண்ட ஒன்றே தவிர, யாரும் கற்பித்த ஒன்றல்ல."

``மாநிலக் கட்சிகள் வலிமை பெறுவதை ஆரோக்கியமான போக்காகக் கருதுகிறீர்களா?”

``இது மக்கள் தேவையிலிருந்து உருவாவது. அரோக்கியமானதா, ஆரோக்கியமில்லாததா என்பதைவிட மாநில உணர்வுகள், மாநில உரிமைகள் ஆகியவற்றை வைத்து மக்கள் முடிவுசெய்கிறார்கள். எந்தக் கட்சி நமக்காக நிற்கிறது என்பதை, மக்கள்தான் முடிவெடுக்கிறார்கள்.”

திருமாவளவன்

``ஈழ விவகாரத்தில் நேர்மையான இயக்கம் வி.சி.க என தற்போது பதிவுசெய்யவேண்டிய அவசியமென்ன?”

``உலகத்தமிழர்களே வி.சி.க-தி.மு.க கூட்டணியோடு நிற்பதை விமர்சிக்கிறார்கள். ஏராளமான போராட்டங்கள், மாநாடுகள், பேரணிகளை நடத்தியிருக்கிறோம். 2009-ல் தி.மு.க-வுடன் கூட்டணியில் தொடர்ந்தோம் என்பதற்காக, ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்கள் பிரச்னையில் திருமாவளவனும், வி.சி.க-வும் எதிராகப் போய்விட்டார்கள் என்ற கருத்தை, உலகத்தமிழர்கள் மத்தியில் முன்வைக்கிறார்கள். ஆகவே, அது குறித்து விளக்கமளித்தேன்.”

“பா.ஜ.க-வுடனான அ.தி.மு.க-வின் கூட்டணி முறிவு குறித்து உங்கள் பார்வையென்ன?"

``அ.தி.மு.க, தி.மு.க-வை எதிர்க்கக்கூடிய இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அந்த இடத்தை பா.ஜ.க-விடம் இழந்துவிடக் கூடாதென்றுதான் வி.சி.க தொடர்ந்து வலியுறுத்துகிறது. கூட்டணியை அ.தி.மு.க முறித்துக் கொண்டதை வரவேற்கிறேன்."

எடப்பாடியுடன் திருமாவளவன்

``அ.தி.மு.க-வின் கூட்டணி முறிவு, தி.மு.க கூட்டணியை பலவீனமடையச் செய்யுமா?”

``தி.மு.க கூட்டணியை பலவீனப்படுத்தும் எனச் சொல்ல முடியாது. தி.மு.க கூட்டணி நாற்பது தொகுதிகளிலும் வெல்லும்.”



source https://www.vikatan.com/news/general-news/vck-leader-thirumavalavan-shares-his-views-on-current-political-happenings-around-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக