Ad

சனி, 11 நவம்பர், 2023

'சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்களம்' - குடியரசு, ஜனநாயகக் கட்சிகளில் கடும் போட்டி; ஒரு பார்வை!

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பருடன் நிறைவடைகிறது. இதையடுத்து 2024 நவம்பர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில் வழக்கம்போல குடியரசு, ஜனநாயகக் கட்சிகளுக்கிடையேதான் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

டொனால்டு ட்ரம்ப்

குடியரசுக் கட்சி:

டொனால்டு ட்ரம்ப்:

குடியரசுக் கட்சிக்கான அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் முதலிடத்தில் இருக்கிறார். 77 வயதான அவர்மீதான குற்ற வழக்குகள், அவருக்குச் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் அவர், 'இரண்டாவது முறையாக நான் அதிபராவதைத் தடுக்கும் முயற்சிதான் இது' எனக் குற்றச்சாட்டியிருக்கிறார். ட்ரம்ப்பின் இத்தகைய குற்றச்சாட்டை, அந்நாட்டின் நீதித்துறை திட்டவட்டமாக மறுக்கிறது. மேலும் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி நடந்த குடியரசுக் கட்சியின் விவாதக் கூட்டத்தில் பங்கேற்ற இருவர், `ட்ரம்ப் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரை வேட்பாளராக ஆதரிக்க மாட்டோம்' எனத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ட்ரம்ப், 'அமெரிக்காவில் குடியேறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சீனாவுடனான வர்த்தகத்திலும் ஏராளமான கட்டுப்பாடுகள் இயற்றப்படும். எனக்கு அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்படும்' என சபதம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரான் டிசாண்டிஸ்:

இவர் ட்ரம்பின் முதன்மையான போட்டியாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். கருக்கலைப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்காகப் போராடியிருக்கிறார். அமெரிக்க ராணுவத்திலும் சேவை செய்த டிசாண்டிஸ், கருத்துக்கணிப்புகளில் ட்ரம்பை-விட கிட்டத்தட்ட 40% புள்ளிகள் பின்தங்கி இருக்கிறார். அவர் தன்னிடம் பணியாற்றிய ஊழியர்களை பணிநீக்கம் செய்த சர்ச்சை நிலவி வருகிறது. மே மாதத்திலிருந்து தனது பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். ஆனால் இது அவருக்கான ஆதரவை அதிகரிக்கவில்லை.

விவேக் ராமசாமி:

தொழிலதிபரான விவேக் ராமசாமி அடிப்படையில் ஓர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். `அமெரிக்கா மருத்துவ மேம்பாடு, சுகாதாரம் ஆகியவற்றுக்காக சீனாவை நம்பி இருப்பதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், ட்ரம்ப்பை மன்னித்துவிடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

விவேக் ராமசாமி

நிக்கி ஹேலி:

இவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான். குடியரசுக் கட்சியில் போட்டியிடும் பெண் வேட்பாளர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். தென் கரோலினா மாகாணத்தின் முன்னாள் ஆளுநராகவும், ஐக்கிய நாடுகளின் தூதராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும் இவர், பைடன், ட்ரம்ப் ஆகியோருடன் ஒப்பிடும்போது, தான் இளமையானவர் என்றும், அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களின் மகள் என்ற பின்னணியையும் பெற்றிருக்கிறார். மேலும், குடியரசுக் கட்சியில் ஒரு திடமான பழைமைவாதியாக நற்பெயரைப் பெற்றுள்ளார். இவர் பாலினம் மற்றும் இனம் தொடர்பான பிரச்னைகளை நம்பகமான முறையில் தீர்க்கும் திறனைக் கொண்டுள்ளார். வெளிநாட்டில் அமெரிக்க நலன்களின் உறுதியான பாதுகாவலராகவும் அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். கருத்துக்கணிப்புகளின்படி, குடியரசுக் கட்சியினரிடையே இவருக்கு, ஒற்றை இலக்க ஆதரவு உள்ளது.

டிம் ஸ்காட்:

இவர் பிளவுபட்டிருக்கும் கட்சியை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இதுவே ட்ரம்ப், டிசாண்டிஸிடமிருந்து மாறுபட்டு காட்ட உதவுகிறது. இது எப்படியும் வெற்றி பெற போதுமானதாக இருக்காது. 58 வயதான ஸ்காட், குடியரசுக் கட்சியினரிடையே 2% ஆதரவைப் பெற்றுள்ளார் என சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்திருக்கிறது.

நிக்கி ஹேலி

கிறிஸ் கிறிஸ்டி

61 வயதான கிறிஸ்டி, முதலில் ட்ரம்ப்பின் ஆதரவாளராக இருந்தார். அவரது பிரசாரத்துக்கு ஆலோசனை வழங்கி வந்தார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால், முன்னாள் ஜனாதிபதியைக் கடுமையாக விமர்சித்தார். இவருக்கும் கருத்துக்கணிப்புகளின்படி 2% ஆதரவே இருக்கிறது.

ஆசா ஹட்சின்சன்:

`தன்மீதான குற்றச்சாட்டுகளைச் சமாளிக்க, ட்ரம்ப் போட்டியிலிருந்து ஒதுங்க வேண்டும்' என்ற முழக்கத்துடன் வெள்ளை மாளிகையைப் பிடிப்பதற்கான தனது முயற்சியை மேற்கொள்ள தொடங்கினார். 72 வயதான ஹட்சின்சன், தனது அனுபவத்தின் மூலமாக வரிக் குறைப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளை தன்னால் மேற்கோள்ள முடியும் என பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் அவருக்கு ஆதரவு மிகவும் குறைவாகவே உள்ளது.

டக் பர்கம்:

67 வயதான பர்கம், 2001-ம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு தனது மென்பொருள் வணிகத்தை விற்றபிறகு, வடக்கு டகோட்டாவின் ஆளுநராக இரண்டாவது நான்கு ஆண்டுக்கால பதவியை வகித்து வருகிறார். குறைந்த வரிகள் மற்றும் குறைவான விதிமுறைகளை ஆதரிப்பாதக தெரிவித்து வருகிறார். இவருக்கும் ஆதரவு மிகக் குறைவாகவே இருக்கிறது.

ஜோ பைடன் - கமலா ஹாரிஸ்

ஜனநாயகக் கட்சி

ஜோ பைடன்:

80 வயதான பைடன், ஏற்கெனவே இதுவரை இல்லாத மூத்த அமெரிக்க அதிபராக உள்ளார். மேலும் நான்கு ஆண்டுகள் பதவியில் இருப்பதால், மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்திகளைச் சமாளிக்க வேண்டும். ஆனால், ட்ரம்பை தோற்கடிக்கக்கூடிய ஒரே ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பைடன்தான் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். தனது வேட்புமனுவை தாக்கல் செய்தபோது, 'அமெரிக்க ஜனநாயகத்தை பாதுகாப்பது எனது வேலை' என அறிவித்தார். மேலும் அவர், ஜனவரி 6, 2021 அன்று ட்ரம்ப் ஆதரவாளர்களால் அமெரிக்க தலைநகர்மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிப்பிட்டு கொதித்தார். துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், தனது ஆதரவை பைடனுக்கு வழங்கி வருகிறார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தில், 'அமெரிக்கா எதிர்பார்க்கப்பட்ட மந்தநிலையிலிருந்து தப்பி, பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்ததைவிட வேகமாக வளர்ந்து வருகிறது. பணவீக்கம் 2022-ல் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. உணவு மற்றும் எரிவாயு விலை குறைவு. ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கை, இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் அமெரிக்காவின் செயல்பாடு' போன்றவற்றை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோ பிடன் - ட்ரம்ப்

மரியன்னே வில்லியம்சன்:

71 வயதான மரியன்னே வில்லியம்சன் ஒரு பிரபல எழுத்தாளராவார். 'நீதி மற்றும் அன்பின் கொள்கை' எனத் தனது பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார். அவர் 2020-ம் ஆண்டு நடத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

டீன் பிலிப்ஸ்:

அதிகம் அறியப்படாத அமெரிக்க காங்கிரஸ்காரர் டீன் பிலிப்ஸ். இவர், பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற மாட்டார் எனத் தெரிவித்திருக்கிறார். 54 வயதான இவர், கோடீஸ்வர தொழிலதிபராவார். இவர் ஆன்லைனில் வெளியிட்ட ஒரு நிமிட வீடியோவில், 'எங்களுக்குச் சில சவால்கள் உள்ளன. இந்தப் பொருளாதாரத்தை நாங்கள் சரிசெய்யப் போகிறோம். மேலும் நாங்கள் அமெரிக்காவை சரிசெய்யப் போகிறோம்" எனக் கூறியிருந்தார்.

அமெரிக்காவில் எட்டுத்திக்கும் தேர்தல் களம் பரபரக்கத் தொடங்கியிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம், அமெரிக்க அரசியல் போக்கை!



source https://www.vikatan.com/news/general-news/the-us-election-field-is-heating-up-due-to-the-upcoming-presidential-polls

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக