Ad

சனி, 4 நவம்பர், 2023

கேரளா: மகனைக் கைதுசெய்யச் சென்ற போலீஸை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது... என்ன நடந்தது?

கேரள மாநிலம், கண்ணூர் சிறைய்க்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாபு உம்மன் தாமஸ். இவரின் மகன் ரோஷன். ரோஷன் மீது வளப்பட்டணம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி ஒரு கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரோஷனைத் தேடி அவரது வீட்டுக்கு நேற்று இரவு போலீஸார் சென்றுள்ளனர். அப்போது வீட்டின் மாடியில் நின்றுகொண்டிருந்த பாபு உம்மன் தாமஸ், துப்பாக்கியால் போலீஸை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக போலீஸார் மீது தோட்டாக்கள் படவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் போலீஸார் வேகமாக செயல்பட்டு பாபு  உம்மன் தாமஸை மடக்கி பிடித்து கைதுசெய்திருக்கிறார்கள். பாபு உம்மன் தாமஸ் ரிவால்வர் மூலம் மூன்று ரவுண்டுகள் சுட்டதாகவும், உடனடியாக குனிந்ததால் தோட்டாக்கள் தங்கள் மீது படவில்லை எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வளப்பட்டணம் காவல் நிலையம்

அதே சமயம் பாபு உம்மன் தாமஸின் மனைவி லிண்டா, "போலீஸார் தங்களுடன் சில ரௌடிகளை அழைத்துக்கொண்டு வந்திருந்தனர். அவர்கள் எங்கள் வீட்டையும், இரண்டு கார்களையும் அடித்து நொறுக்கினர். அதனால் தற்காத்துக்கொள்வதற்காகவே என்னுடைய கணவர் வானத்தை நோக்கி சுட்டார். அவர் போலீஸை நோக்கி துப்பாக்கியால் சுடவில்லை" என தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த வீடு

இதற்கிடையே பாபு உம்மன் வைத்திருந்தது, லைசென்ஸ் பெற்ற துப்பாக்கி என தெரியவந்துள்ளது. இதையடுத்து கண்ணூர் சிட்டி போலீஸ் கமிஷனர் அஜித்குமார் சம்பவம் நடந்த வீட்டை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் கமிஷனர் கூறுகையில், "ரோஷன் வீட்டில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்தே அவர்கள் அங்கு சென்றனர். போலீஸாருடன் ரௌடிகள் யாரும் செல்லவில்லை" என்றார்.



source https://www.vikatan.com/crime/kerala-police-arrested-a-man-who-fired-against-him

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக