Ad

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

Motivation Story: 99 வயது வரை வாழ்வை வாழ்ந்த கலைஞன்; எழுத்தில் `கிங்’ குஷ்வந்த் சிங்; ஜெயித்த கதை!

`மனிதர்களின் அர்ப்பணிப்பு உணர்வும், ஆர்வமும் எதையும் வெல்லக்கூடியவை.’ - அமெரிக்க ரெஸ்லிங் சண்டைக் கலைஞர் பிரீ பெல்லா (Brie Bella)

`யோஜனா.’ இதுதான் அந்தப் பத்திரிகையின் பெயர். மத்திய அரசால் தொடங்கப்பட்ட பத்திரிகை. ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1957. தலைமை ஆசிரியர் குஷ்வந்த் சிங். மத்திய அரசின் ஐந்தாண்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது; அரசின் முக்கியமான பணிகள் குறித்து விவரிப்பது; அரசின் செயல்பாடுகள் குறித்து மக்களின் கருத்தை அறிவது... இவைதான் பத்திரிகையின் முக்கிய நோக்கம். முதல் இதழ் வெளிவந்தது. குஷ்வந்த் சிங் அதன் தலைமை ஆசிரியரல்லவா... மக்களிடம் ரெஸ்பான்ஸ் எப்படியிருக்கிறது என்று அறிந்துகொள்ள விரும்பினார். டெல்லியின் முக்கியமான வீதிகளில் உலா வந்தார்.

பத்திரிகைகளை விற்பனை செய்யும் சின்னப் பெட்டிக்கடை முதற்கொண்டு பெரிய கடைகள் வரை ஏறி, இறங்கிவிட்டார். ஒரு கடையில்கூட, ஒரேயொரு `யோஜனா’ பத்திரிகைகூட இல்லை. அதிர்ந்துபோனார். அலுவலகத்துக்குத் திரும்பினார். அங்கே அச்சடிக்கப்பட்ட `யோஜனா’ இதழ்கள் கட்டுக்கட்டாகக் கிடந்தன. குடோனுக்குப் போனார். அங்கேயும் கட்டுக்கட்டாக குவிந்துகிடந்தது `யோஜனா.’ ஆக, பத்திரிகை வெளியே போகவே இல்லை. சர்குலேஷன் டிபார்ட்மென்ட் தூங்குகிறது என்று புரிந்துபோனது அவருக்கு. அன்றைக்கே அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அச்சகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அத்தனை பேருக்கும் ஓர் அழைப்பு விடுத்தார். ` `யோஜனா’ பத்திரிகை வெளியானதையொட்டி ஒரு பார்ட்டி... அனைவரும் வருக..!’ இப்படி ஓர் அழைப்பு.

Khushwant Singh |குஷ்வந்த் சிங்

பார்ட்டி என்றால் கேட்க வேண்டுமா... அதுவும் குஷ்வந்த் சிங் கொடுக்கும் பார்ட்டியாயிற்றே... அத்தனை ஊழியர்களும் தொழிலாளர்களும் ஆஜர்! அவர்கள் எதிர்பார்த்தபடியே குஷ்வந்த் சிங்குக்குப் பிரியமான ஷாம்பெயினுடன் விருந்து தொடங்கியது. விருந்துக்கு நடுவே, அனைவரையும் அழைத்துப் பேச ஆரம்பித்தார் குஷ்வந்த் சிங். ``என் அன்புக்குரியவர்களே... அச்சடித்த பிரதிகளெல்லாம் இப்படி அலுவலகத்திலும் கிடங்கிலும் குவிந்துகிடப்பது நியாயமா... அரசாங்கப் பணி என்பதால்தானே இத்தனை அலட்சியம் உங்களுக்கு. இதுவே, தனியார் நிறுவனமாக இருந்தால், அவர்கள் சும்மாவிடுவார்களா... நீங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது. இன்னும் இரண்டு நாள்களில், அச்சடித்த அத்தனை `யோஜனா’ இதழ்களும் மக்களிடம் போய்ச் சேர வேண்டும். இல்லையென்றால்...’’ மேற்கொண்டு அவர் ஒன்றும் சொல்லவில்லை.

அடுத்த நாள் அலுவலகமே பரபரவென இயங்கியது. `யோஜனா’ பத்திரிகையின் முதல் இதழ் இரண்டே நாள்களில் மக்களிடம் சென்று சேர்ந்தது; விற்றுத் தீர்ந்தது. இன்றைக்கும் `யோஜனா’ வெளியாகிக்கொண்டுதான் இருக்கிறது, 13 இந்திய மொழிகளில். தமிழில் `திட்டம்’ என்று அதற்குப் பெயர். ஒரு பத்திரிகையைத் தூக்கி நிறுத்தி, எல்லோரிடமும் கொண்டுபோய்ச் சேர்க்கக் காரணமாக இருந்தது, குஷ்வந்த் சிங்கின் அர்ப்பணிப்பு உணர்வு, உழைப்பு.

வழக்கறிஞர்; புதிய, சுதந்திர இந்தியாவின் ஐ.எஃப்.எஸ்; லண்டனிலும் டொரொன்டோவிலும் இந்தியத் தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரி; ஆல் இந்தியா ரேடியோவில் ஜர்னலிஸ்ட்; யுனெஸ்கோவில் டிபார்ட்மென்ட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷனில் பணி... என மரியாதைக்குரிய பல வேலைகளைப் பார்த்துவிட்டிருந்தார் குஷ்வந்த் சிங். ஒன்றுகூட அவருக்கு ஒட்டவில்லை. எழுதுவது மட்டும்தான் அவருக்குப் பிடித்திருந்தது. `Truth, Love & A Little Malice' என்ற சுயசரிதை நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்... `இந்தப் பணிகள் என் வாழ்க்கையை விரயமாக்கிவிட்டன. ஆரம்பத்திலேயே நான் பேனாவைக் கையில் பிடித்திருக்க வேண்டும்.’

Khushwant Singh |குஷ்வந்த் சிங்

எழுத்தை நம்பிக் களமிறங்கினார். எழுத்து, அவரை வாரி அணைத்துக்கொண்டது. காரணம், அவரின் உழைப்பு... அர்ப்பணிப்பு உணர்வோடுகூடிய உழைப்பு. குஷ்வந்த் சிங் மீது எத்தனையோ எதிர்மறை விமர்சனங்கள் உண்டு. எதையும் அவர் கண்டுகொண்டதில்லை. அதோடு, ஓர் அடிப்படை நேர்மையை வாழ்நாளெல்லாம் கடைப்பிடித்தார். பணம், பதவி எதற்காகவும் அதை அவர் விட்டுக்கொடுத்ததே இல்லை. `யோஜனா’வில் பணியாற்றிக்கொண்டிருந்தபோதே அவருக்கு வேலைக்குச் சேரும்படி ஓர் அழைப்பு வந்தது. `டைம்ஸ்’ குழுமத்தின் வார இதழான `இல்லஸ்ட்ரேட்டடு வீக்லி’யில் இதழாசிரியர் பொறுப்பு. அன்றைய சூழலில் மிகவும் மரியாதைக்குரிய பதவி அது.

அழைப்பு வந்தவுடன், `ஃபிலிம்ஃபேர்’ பத்திரிகையின் நிறுவனரும், `டைம்ஸ் ஆஃப் இந்தியா’வின் முதல் பொது மேலாளருமான ஜே.சி.ஜெயினுக்கு ஒரு கடிதம் எழுதினார், குஷ்வந்த் சிங். `அன்புடையீர், வணக்கம். இல்லஸ்ட்ரேட்டடு வீக்லி’யின் இதழாசிரியராக நான் பொறுப்பு ஏற்பது ஒருபக்கம் இருக்கட்டும். தற்போது மிஸ்டர் ராமன் என்பவர் அந்தப் பொறுப்பில் இருக்கிறாரே... நான் வந்தால், அவர் பாடு என்னவாகும்?’ இதுதான் அந்தக் கடிதத்தின் சாரம். தனக்குப் பதவி கிடைத்தால் போதும், தன் வாழ்க்கை சிறந்தால் போதும் என்கிற மனிதர்களுக்கு மத்தியில், சிங்கின் இந்த மனோபாவம்தான் அவரை உச்சி முகர்ந்து கொண்டாடவைக்கிறது.

Khushwant Singh's book

குஷ்வந்த் சிங்கின் கடிதத்துக்கு ஜே.சி.ஜெயின் பதில் அனுப்பியிருந்தார். `சார்... நீங்கள் இங்கு வந்து இதழாசிரியர் பொறுப்பை ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் மிஸ்டர் ராமனை நாங்கள் பணியிலிருந்து நீக்கப்போவது மட்டும் நிச்சயம்.’ ஆக, மிஸ்டர் ராமனிடம்தான் கோளாறு என்று உணர்ந்துகொண்டார் சிங். ஆனாலும், இல்லஸ்ட்ரேட்டடு வீக்லியில் பொறுப்பேற்பதற்கு அவருக்கு ஒரு தடை இருந்தது. அவருடைய மகன் ராகுல், `டைம்ஸ்’ குழுமத்தின் `தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் உதவி ஆசிரியர். ஒரே குழுமத்தில் தந்தையும் மகனும் பணியாற்றுவது நன்றாக இருக்காது. அது, வேலைக்காகாது. பல பிரச்னைகளை அது கொண்டு வந்து சேர்க்கும். எனவே, ராகுலுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். `ராகுல்... உன் வேலையை ராஜினாமா செய்துவிடு.’ ராகுலும் ராஜினாமா செய்தார்.

`தி ரீடர்ஸ் டைஜஸ்ட்’ பத்திரிகையில் போய்ச் சேர்ந்தார். அதற்குப் பிறகுதான், `இல்லஸ்ட்ரேட்டடு வீக்லி’ பத்திரிகையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் குஷ்வந்த் சிங். அவர் அந்தப் பத்திரிகையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, அன்றைய சூழலில் அதன் விற்பனை 65,000 பிரதிகள். அந்த விற்பனையை 4,00,000 பிரதியாக உயர்த்திக்காட்டினார் குஷ்வந்த் சிங். காரணம், அவரின் எழுத்து, புதுப்புது ஐடியாக்கள் எல்லாம் வாசகர்களைக் கவர்ந்திழுத்தன.

எவ்வளவோ எழுதிவிட்டார் குஷ்வந்த் சிங். `Train to Pakistan' என்ற அவருடைய நூல் வெறும் பதிவல்ல, ஆவணம். 99 ஆண்டுகாலம் வாழ்ந்த அவர், எழுத்துலகில் சாதித்தது ஏராளம். உதாரணமாக அவர் சொன்ன ஒரு வாக்கியம்... `பல நூற்றாண்டுகளாக சாதியப் பாகுபாட்டை ஏற்றுக்கொண்ட ஒரு நாட்டில், சமத்துவமின்மை என்பது ஓர் உள்ளார்ந்த பொதுக் கருத்தாகவே ஆகிவிட்டது.’ இன்றைய தேதிவரை அதை யாராலும் மறுக்க முடியாது... உண்மைதானே!


source https://www.vikatan.com/oddities/miscellaneous/inspirational-story-about-writer-kushwanth-singh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக