Ad

சனி, 21 ஜனவரி, 2023

``கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றவே உதயநிதி படங்கள் வெளியிடுகிறார்” - சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி

``தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள்கள் நிறைந்த மாநிலமாக உருவாகிவிட்டது. கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றவே உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் மூலம் ரூ.100 கோடி, ரூ.200 கோடிக்குப் படங்களை வாங்கி, வெளியிடுகிறார். அந்தப் பணம் எங்கிருந்து வந்தது... ஸ்டாலின் பொம்மை முதல்வராக இருக்கிறார்” என அரியலூரில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க முன்னாள் முதலமைச்சர், மறைந்த எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். எடப்பாடி பழனிசாமி மேடைக்கு வந்ததும், அவருக்கு ஆளுயுர மாலை அணிவித்து செங்கோல் கொடுக்கப்பட்டது.

பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, ``தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்கட்டணம், பால் உள்ளிட்ட பல பொருள்கள் விலை உயர்ந்துவிட்டன. அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட `திருமணத்துக்குத் தங்கம்’, `பசுமை வீடு’ உள்ளிட்ட பல திட்டங்கள் ரத்துசெய்யப்பட்டுவிட்டன. அதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால், திமுக ஆட்சியில் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே வளர்ச்சிபெற்று மகிழ்ச்சியில் இருக்கிறது. ஸ்டாலின் தற்போது பொம்மை முதல்வராகச் செயல்படுகிறார்.

அரியலூரில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் 20 மாதங்கள் ஆகியும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இந்த 20 மாதங்களில் தன் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டு விழாவை நடத்தியிருக்கிறார். அ.தி.மு.க-வில் கடைக்கோடித் தொண்டனும் பொதுச்செயலாளர் ஆகலாம். ஆனால், திமுக-வில் தற்போது உதயநிதி அமைச்சர் ஆனதுபோல அடுத்துடுத்து அவர்களது குடும்பமே முதல்வராவார்கள். ஸ்டாலினின் மகன் என்ற ஒரே காரணத்தால் உதயநிதி அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.

தி.மு.க-வுக்காக உதயநிதி என்ன செய்தார்... `உதயநிதியின் மகன் அமைச்சரானாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்’ என கே.என்.நேரு கூறுகிறார். திண்டுக்கல்லுக்குச் சென்ற உதயநிதி, மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமியை அருகில் வைத்துக்கொண்டு ரிப்பன் வெட்டுகிறார். அ.தி.மு.க ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்பதால் 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு, மருத்துவப் படிப்புக்கான செலவையும் அரசே ஏற்றது. இதனால் 564 ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

நீட் தேர்வால் அனிதா தற்கொலை செய்துகொண்டார். அப்போது, `தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்துசெய்து முதல் கையெழுத்து போடப்படும்’ என ஸ்டாலின் சொன்னார், செய்தாரா... செய்யவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வால் 15 உயிர்கள் பறிபோயிருக்கின்றன. `நீட் தேர்வை ரத்துசெய்வதற்கான ரகசியம் என்னிடம் இருக்கிறது’ என்றார் உதயநிதி. ஆனால், இதுவரை அந்த ரகசியத்தையும் சொல்லவில்லை. நீட் தேர்வை ரத்துசெய்யவும் இல்லை.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மீத்தேன் திட்டங்களை ரத்துசெய்து டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகளைத் திறந்தோம். நாங்கள் கொண்டுவந்த திட்டங்களைத் திறந்துவைத்து, தி.மு.க-வினர் பெருமைப்பட்டுக்கொள்கின்றனர். அ.தி.மு.க செயல்படுத்திய திட்டங்களை நிறுத்தியதே தி.மு.க மாடல் ஆட்சி.

அ.தி.மு.க கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. போதைப்பொருள்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறியால் மக்கள் துன்பம் அடைந்துள்ளனர். தமிழகம் போதைப்பொருள்கள் நிறைந்த மாநிலமாக உருவாகிவிட்டது. கஞ்சா விற்காத இடமே இல்லை. தி.மு.க-வினரே அதை விற்பனை செய்கின்றனர். அதை எதிர்த்து கேட்கும் அ.தி.மு.க-வினர் மீது பொய் வழக்கு போடப்படுகிறது.

உதயநிதி தன் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ரூ.100 கோடி, ரூ.200 கோடிக்குப் படத்தை வாங்கி வெளியிடுகிறார். அந்தப் பணம் எங்கிருந்து வந்தது... கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றவே படங்களை வாங்கி வெளியிடுகிறார். `வாரிசு’, `துணிவு’ படங்களை வெளியிட்டவர்கள், அரசு அனுமதி பெறாமலேயே சிறப்புக் காட்சிகள் திரையிட்டனர். அதற்கு வழக்கு வரும். நிச்சயம் உதயநிதி குடும்பத்தினர் அதிலிருந்து தப்ப முடியாது. குறைந்த செலவில் எடுக்கப்பட்டிருக்கும் 150 படங்கள் தியேட்டர் கிடைக்காமல், வெளியிட முடியாமல் முடங்கிக்கிடக்கின்றன” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/edappadi-palanisamy-meeting-in-ariyalur-slams-udhayanithi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக