Ad

திங்கள், 16 ஜனவரி, 2023

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு `ரிமோட் வாக்குப்பதிவு வசதி'... சாதக, பாதகங்கள் என்னென்ன?

இந்தியாவில் ஆண்டுதோறும் தேர்தலில் சராசரியாக 70% வாக்குகள் மட்டுமே பதிவாகிறது. மூன்றில் ஒருவர் வாக்களிப்பதில்லை என்று ஆய்வுகள் கூறுகிறது. குறிப்பாக, கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 67.4% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. இதில் பதிவாகாமல் இருந்த 32.6% வாக்குகள் பெரும்பாலும் புலம்பெயர்ந்த தொழிலார்கள் ஓட்டுகளே. வறுமை காரணமாக பயணம் செய்ய முடியாமல் போனது, வேலை பார்த்த இடத்தில் விடுமுறை கிடைக்காமல் இருந்தது என இப்படி பல காரணங்களுக்காக தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. இன்னும் குறிப்பாக, தன் சொந்த நிலத்தை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்னும் ஜனநாயக முடிவை அவர்களால் எடுக்க முடிவதில்லை. இந்தப் பிரச்னையைக் களைவதற்கும் தீர்வை எட்டுவதற்கும் தேர்தல் ஆணையம், 'பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்' மற்றும் 'எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா' ஆகிய பொதுத் துறை நிறுவங்களுடன் இணைந்து புதிதாக இயந்திரத்தை உருவாக்கியது. அதுதான் Multi-Constituency Remote Electronic Voting machine (RVM) என்னும் ரிமோட்ட வாக்குப்பதிவு இயந்தரம்.

தேர்தல் ஆணையம்

இதற்கான அறிவிப்பைக் கடந்த டிசம்பர் 29-ம் தேதி வெளியிட்டது. தற்போது, அனைத்துக் கட்சிகளையும் கூட்டி கருத்து கேட்பும் நடந்து முடிந்திருக்கிறது. குறிப்பாக, அங்கிகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகளும், 57 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கூறப்பட்ட கருத்துக்களை வைத்து இந்த புதிய இயந்திரம் நடைமுறைக்கு வருமா இல்லையா என்பது முடிவாகும். இந்தக் கூட்டம் டெல்லியில் 16.01.2023 அன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சிகள் இதை ஒருமனதாக எதிர்ப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.

திக்விஜய் சிங்

`ஏன் ரிமோட் வாக்குப்பதிவு முறை?’

1. எந்த ஒரு வாக்காளரும் தேர்தல் நடைமுறையில் விடுபட கூடாது, என்னும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் நேரத்தில் வாக்களிக்க முடியாதவர்கள், ஆன்லைன் வாயிலாகவோ, தேர்தல் அலுவலர் அலுவலத்திலோ, 'தான் வெளியூரிலிருந்து வாக்களிக்க இருப்பதாக தெரிவிக்க வேண்டும்'. இதன் அடிப்படையில் அவர்களுக்கு ரிமோட்ட வாக்குப்பதிவு இயந்தரத்தில் வாக்களிக்கும் வசதிகள் செய்து தரப்படும். ஒரே இயந்திரத்தில் 72 வெவ்வேறு தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்கும்படியான வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன. எனவே, அந்தந்த தொகுதிக்கான வாக்கு பதிவுகள் தனித்தனியாக இயந்திரத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் சேமிக்கப்படும். இதில் குழப்பமும் இருக்காது என தேர்தல் ஆணையம் கூறுகிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள்

2. தேர்தல் முடிவில் மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை பலரும் இழக்கும் வரலாறு இந்தியாவில் இருக்கிறது. ஒருவேளை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செலுத்தும் வாக்குகள் மூலமாக வெற்றியின் போக்கு மாறும் சூழல் ஏற்படும். இது போட்டியிடுவோருக்கு ஆதாயம். அதேபோல், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் கூடுதலாக பயணிக்கும் நேரம், அதற்காக தொகை செலவிடுவதும் குறைகிறது.

3. மத்திய அரசால், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அறிமுகம் செய்ய திட்டமிடும் ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் ஒரே நாடு ஒரே தேர்தலைக் கையாள பெரும் உதவியாக இருக்கலாம்.

4. புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்திலே இருந்து ஓட்டுப்போடும் வாய்ப்பை ஏற்படுத்துவது வாயிலாக, ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும் என்கிற நிலை உருவாகும்.

தேர்தல்

`ரிமோட் வாக்குப்பதிவு பாதகங்கள் என்ன?’

1. தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நம்பகத்தன்மை இல்லை என வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது, இந்த வாக்குப்பதிவு எந்திரம் அறிமுகமானால், இது மேலும் குழப்பத்தை உண்டாக்கலாம். இப்படி இதன் பின்னால் இருக்கும் பாதகங்கள் குறித்து காங்கிரஸ் சார்பாக எதிர்க்கட்சிகள் கூட்டிய கூட்டத்தில் பேசப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு

2. இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் 30 கோடி பேர் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், 2011-ம் ஆண்டு தரவுகள்படி,45 கோடி பேர் புலம்பெயர்ந்தவர்கள் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், உலக வங்கியின் ஆய்வுப்படி 62% மாவட்டத்துக்குள்ளேயும் 26% மாவட்டத்துக்கு வெளியேவும், 12% மட்டுமே மாநிலத்துக்கு வெளிய பயணிப்பதாக தெரிய வந்தது. இதனடிப்படையில் பார்த்ததால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவரங்கள் பற்றி தெளிவான மற்றும் நம்பகத்தன்மை உடைய புள்ளி விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை.

'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' குறித்து காங்கிரஸ் தலைமையில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டம்.

எனவே, புலம்பெயர்ந்தவர்கள் அதிகமாக இருப்பதாகக் கூறி, இந்த ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்கறது. இது ஒருவகையான மோசடி என்று எதிர்க்கட்சி சார்பகக் கூறப்படுகிறது.

3. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம், மருத்துவம் என பல சிக்கல்கள் இருக்கும்போது, அதை சரிசெய்யாமல் அவர்களிடம் கிடைக்கும் ஓட்டை மட்டும் பாஜக எதிர்பார்க்கிறது என்ர வாதமும் முன்வைக்கப்படுகிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், தோல்வியை சந்திக்கப்போவதை தடுக்கவே பாஜக இந்த முயற்சிகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்படுகிறது. இப்படியாக தேர்தலில் தில்லுமுல்லு செய்ய, ஒருபக்கம் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி 'ரிமோட் வாக்குப்பதிவு' இயந்திரத்தையும், மறுபக்கம் சட்ட ஆணையத்தைப் பயன்படுத்தி 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறையைகே கொண்டு வர முயற்சிக்கிறது பாஜக, என்னும் கருத்து விசிக சார்பாக முன்வைக்கப்பட்டது

பாஜக

4. இதன் தொடர்ச்சியாகவே, ரிமோட் வாக்குப்பதிவுக்கு குறித்து கருத்து கேட்க தேர்தல் ஆணையம் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் எதிர்க்கட்சி சார்பாகப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், "புலம்பெயர் தொழிலாளர்கள் வரைமுறை மற்றும் எண்ணிக்கை தெளிவாக இல்லை. இது அரசியல் முரண்பாடுகளையும் சிக்கலையும் ஏற்படுத்தும். அனைத்துக் கட்சிகளின் முடிவுகளை வரும் 25-ம் தேதி ஒன்றாகவோ கூட்டாகவோ தெரிவிப்போம்". என்றார்.

இந்தியத் தேர்தல் ஆணையம்

ஐக்கிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசிய மாநாட்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி , திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா என பெரும்பாலான தேசிய, மாநில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் சூழலில் தேர்தல் ஆணையத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்னும் கேள்வி எழுகிறது. இந்த மாத இறுதியில் அனைத்துக் கட்சிகள் தங்கள் இறுதி கருத்தைத் தெரிவிக்கும்போது 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' பற்றி இந்திய தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/election/the-advantage-and-disadvantage-of-using-remote-voting-machine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக