Ad

வெள்ளி, 27 ஜனவரி, 2023

ஏழு வயது ஸ்ருதியின் கொலைக்குக் காரணம்... 7 வயது ஸ்ருதியே! சட்டம் இருட்டறையா, கல்லறையா?

பள்ளிக்கூட பேருந்தில் இருந்த ஓட்டையின் வழியே கீழே விழுந்ததால் கொல்லப்பட்ட 7 வயது ஸ்ருதியை மறந்திருக்க முடியாது. அப்படி மறந்திருந்தாலும், நேற்று (25.01.23) செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் வழங்கி யிருக்கும் ஒரு தீர்ப்பு, மீண்டும் அதை நினைவுபடுத்தியிருக்கிறது. கூடவே, பதறவும் வைத்திருக்கிறது. `சட்டம் என்றென்றைக்கும் ஓர் இருட்டறையே' என்பதையும் அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஒருதடவை நினைவூட்டியிருக்கிறது.

2012-ம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகேயுள்ள சேலையூயில் இயங்கிவரும் சீயோன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவந்த மாணவி ஏழு வயது ஸ்ருதி, பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பேருந்தின் தளத்திலிருந்த ஓர் ஓட்டை வழியே கீழே விழுந்தார். சகமாணவிகள் கூச்சலிட்டுக் கதறி தீர்க்க, பேருந்தை சற்றுத் தொலைவாக நிறுத்திவிட்டு தப்பியோடினார் டிரைவர். அதற்குள்ளாக அந்தக் கொலை நடந்து முடிந்துவிட்டது. ஆம், ஸ்ருதி கொல்லப்பட்டுவிட்டார்.

சிறுமி சுருதி

பேருந்தில் நீண்டநாள்களாகவே ஓட்டை இருந்துள்ளது. அதை மறைப்பதற்காக ஓர் அட்டையை வைத்து மூடியிருந்தனர். அது அட்டை என்பதால், இயல்பாகவே பலமிழக்க... ஸ்ருதி கொல்லப்பட்டாள் என்பதுதான் சகமாணவிகள் உள்ளிட்டோர் கொடுத்த வாக்குமூலம். இதன் அடிப்படையில்தான் பள்ளியின் தாளாளர், பேருந்துக்குத் தடையில்லா சான்றிதழ் கொடுத்த மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட எட்டு பேர் மீது அப்போது போலீஸ் தரப்பிலிருந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சில மாதங்களிலேயே அனைவரும் ஜாமீனில் வெளிவந்து விட்டனர். அதுமட்டுமல்ல, ஸ்ருதியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தரப்பட வேண்டும் என்கிற அப்போதை நீதிமன்ற உத்தரவும் நிறைவேற்றப்படாமலேயேதான் இருந்தது. இந்நிலையில், கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து, தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட எட்டு பேரையும் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்துவிட்டது நீதிமன்றம்.

ஆக, இந்த எட்டு பேருக்கும் ஸ்ருதியின் மரணத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெள்ளத்தெளிவாக அறிவித்துவிட்டது நீதிமன்றம். கேவலமான நிலையில் ஒரு பேருந்தை அந்தப் பள்ளி நிர்வாகம் ஓட்டிக்கொண்டிருந்ததில் எந்தத் தவறுமில்லை என்று சான்றளிக்கப்பட்டுவிட்டது.

அத்தகைய கேவலமான பேருந்தை, தரமான பேருந்து என்று சான்றிதழ் கொடுத்த மோட்டார் வாகன ஆய்வாளர் மீது துளிகூட தவறில்லை என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டுவிட்டது. ஓட்டை உடைசலாக இருக்கும் பேருந்து, உயிர்களுக்கு உலை வைக்கலாம் என்று தெரிந்திருந்தும் தொடர்ந்து அதை ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநருக்கும் ஸ்ருதியின் கொலைக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று தீர்ப்பு எழுதப்பட்டுவிட்டது.

பேருந்தில் இருந்த ஓட்டை

நடந்தது ஒரு கொலை. ஏழு வயது பிஞ்சு கொல்லப்பட்டிருக்கிறார். யார்தான் அவளைக் கொன்ற குற்றவாளி? வேறு யார்.... ஸ்ருதியேதான். ஆம்... இந்தக் கேடுகெட்ட சமுதாயம் எதையும் எப்படியும் புரட்டிப்போடும் என்று தெரிந்துகொள்ளாமல் இங்கே பிறந்தது ஸ்ருதியின் குற்றம்தானே.

அதிகார வர்க்கம், கல்வி வணிகர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் கூட்டுக்களவாணிகள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் ஏழு வயது வரைக்கும் வளர்ந்தது ஸ்ருதியின் குற்றம்தானே. அந்த இரண்டாம் வகுப்பு மாணவிக்கு, `பேருந்தில் ஓட்டை இருந்தால், அதை அட்டை வைத்து அடைக்கும் அதிபுத்திசாலிகள் நிறைந்திருப்பார்கள்' என்பதுகூட தெரியாமல் போய்விட்டதே. அதுவும் ஸ்ருதியின் குற்றம்தானே!

பேருந்து ஓட்டையில் விழுந்து உயிரிழந்த சிறுமி

கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால், கொலை செய்தாலும் தப்பித்துக்கொள்ளும் வகையில் சாட்சியங்களையும் குற்றப்பத்திரிகையையும் தயார் செய்யும் திருட்டு போலீஸ்கள் நிறைந்த நாடு என்பதைக்கூட தெரிந்துகொள்ளாமல், பணத்தைக் கட்டி அந்தப் பேருந்தில் பயணித்ததும் அந்தப் பிஞ்சின் குற்றம்தானே!

நெஞ்சு கொதிக்கிறது. சட்டம் இருட்டறையா, கல்லறையா? ஒருவேளை, `ஸ்ருதியின் கொலைக்குக் காரணம்... ஸ்ருதியே' என்பதையும் தீர்ப்பில் சேர்த்திருந்தால், நெஞ்சு கொதிப்பு அடங்கியிருக்குமோ?!

- ஜூகோ



source https://www.vikatan.com/social-affairs/judiciary/tambaram-private-school-girl-death-case-judgement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக