Ad

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் திமுக குறுக்கீடா?! - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேர்வானதன் பின்னணி

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி காலமானதையடுத்து இத்தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. திருமகன் ஈவெரா முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மூத்த மகன்.

மிகக் குறுகிய காலத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு சவால் எழுந்தது. ஆரம்பத்தில், `காங்கிரஸ் மேலிடத்திடம் பேசி ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. போட்டியிடும் என்றும், அதற்கு ஈடாக அடுத்த ஆண்டு 2024இல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாய்ப்பு அளிப்பதாக வாக்குறுதி தரும்’ என்றும் தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.  

திருமகன் ஈவெரா

ஆனால், திருமகன் ஈவெரா காலமான தகவல் அறிந்ததும், மகனை இழந்து தவிக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக, அன்று மாலையே சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்து, கோவையில் இருந்து ஈரோட்டில் உள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இல்லத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்து சேர்ந்தார்.

முதல்வரை கண்டதும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அவரின் மனைவி வரலட்சுமி, மகன் சஞ்சய் சம்பத் ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு முதல்வர் ஸ்டாலின் கிளம்பிய போதே இந்தத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பது என்றும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே வாய்ப்பளிக்குமாறு காங்கிரஸ் மேலிடத்திடம் கேட்பது எனவும் முடிவு செய்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின்

அதன்படி ஈரோடு கிழக்கில், காங்கிரஸ் தான் போட்டியிடும் என்று திட்டவட்டமாக  முன்கூட்டியே அறிவித்து விட்டார் கே.எஸ் அழகிரி. திமுக-வும் இதனை உறுதி செய்தது. கடந்த 15ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு காமராஜர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்தார். அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில், அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை இடைத்தேர்தலில் களம் இறக்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்,  இளங்கோவனிடம் கூறியதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்த சிலர்.

ஏற்கெனவே, இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி.ராஜன், முன்னாள் மாநகர் மாவட்டச் செயலாளர் ஈ.பி.ரவி, ராஜேஷ் ராஜப்பா உள்ளிட்ட பலரும் சீட் வழங்கக் கோரியிருந்த நிலையில், இளங்கோவனின் மனைவி வரலட்சுமி, இளைய மகன் சஞ்சய் சம்பத், திருமகன் ஈவெராவின் மனைவி பூர்ணிமா ஆகியோரில் யாராவது ஒருவருக்கு வாய்ப்பளிப்பது என்றே இளங்கோவன் நினைத்திருந்தார். ஆனால், காங்கிரஸ் தொண்டர்களில் பலரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தியிருந்தனர்.

திருமகனின் மனைவி பூர்ணிமா, திரைப்படத் துறையில் புகழ்பெற்ற காஸ்ட்யூம் டிசைனராக இருப்பதாலும், அரசியலில் ஆர்வம் இல்லாததாலும் அவர் போட்டியிட விருப்பமில்லை என்று மறுத்து விட்டார்.  

கடந்த தேர்தலில் வாக்களித்த இளங்கோவன்

வரலட்சுமி இளங்கோவன், தன்னுடைய இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டிருந்தார். எனவே, இறுதியாக தனது மகன் சஞ்சய் சம்பத் அல்லது தனக்கு வாய்ப்பளிக்குமாறு காங்கிரஸ் மேலிடத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார் இளங்கோவன். இரு தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கூட இளங்கோவன் தனது இளைய மகனுக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரே எதிர்பாராத விதமாக நேற்று மாலை கட்சி மேலிடம் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து விட்டது. இதை அவரின் ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர். தனது சொந்த தொகுதியான ஈரோடு கிழக்கில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அவரது வெற்றி உறுதியாகி விட்டதாகவும், திருமகன் ஈவெரா விட்டுச் சென்ற பணிகளை இளங்கோவன் சரியான முறையில் ஏற்று நடத்துவார் என்றும் கட்சித் தொண்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், `ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் முதல்வர் ஸ்டாலினின் குறுக்கீடு உள்ளதா?’ என்பது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்ட போது, ``ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்குமாறு கேட்டபோது அதை மறுக்காமல் கூட்டணி தர்மத்தை மதித்து முதல்வர் ஸ்டாலின் இந்த தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கி தந்தார். அவர், இளங்கோவனுக்கோ, அவரின் குடும்பத்தாருக்கோ சீட் கொடுக்குமாறு கேட்கவில்லை.   போட்டியிட விரும்புவோரின் பட்டியலை மட்டுமே மேலிடத்துக்கு அனுப்பி வைத்தோம். வேட்பாளர் தேர்வை பொறுத்தவரை முழுக்க, முழுக்க காங்கிரஸ் மேலிடம் மட்டுமே முடிவெடுத்துள்ளது.

கே.எஸ்.அழகிரி

அரை நூற்றாண்டு காலம் அரசியல் அனுபவம் உள்ள இளங்கோவன் பழுத்த அரசியல்வாதி. மக்களின் நன்மதிப்பை பெற்றவர். காங்கிரஸ் வேட்பாளராக அவர் தேர்வு செய்யப்பட்டதால் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது” என்றார்.

காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1948-ம் ஆண்டு பிறந்தார். தற்போது அவருக்கு வயது 74. சென்னை மாநிலக்கல்லூரியில் பி.ஏ.பொருளாதாரம் படித்த பட்டதாரி. பெரியாரின் அண்ணனான ஈ.வி.கிருஷ்ணசாமியின் பேரன். இவரின் தந்தை ஈ.வெ.கி.சம்பத்தும், தாயார் சுலோசனா சம்பத்தும் அரசியல்வாதிகளாக இருந்தவர்கள் தான்.   தாயார் சுலோசனா சம்பத் அ.தி.மு.க.வில் அமைப்புச் செயலாளராகவும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பிலும் இருந்தவர். இளங்கோவன் கடந்த 1985 முதல் 1988 ஆம் ஆண்டு வரையிலும் சத்தியமங்கலம் எம்.எல்.ஏ.வாகவும், 2004இல் கோபிசெட்டிபாளையம் மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக இருந்தவர்.

2009 இல் ஈரோடு மக்களவைத் தொகுதியிலும், 2014 திருப்பூர் மக்களவைத் தொகுதி, 2019 தேனி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும், தமிழக காங்கிரஸ் பொது செயலாளராகவும், தமிழக மாநில காங்கிரஸ் தலைவராகவும், செயல் தலைவராகவும், மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.



source https://www.vikatan.com/news/politics/how-did-evkselangovan-get-the-chance-as-erode-east-congress-candidate

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக