Ad

செவ்வாய், 17 ஜனவரி, 2023

நெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: காவல் நிலையத்துக்குள் ஓடித் தப்பிய மூவர்; பின்னணி என்ன?!

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர், அவரின் உறவினர்கள் இருவருடன் டவுன் பகுதியில் குற்றாலம் ரோட்டில் இருக்கும் பழைமையான சி.எஸ்.ஐ கிறிஸ்து ஆலயம் அருகே நின்றுகொண்டிருந்துள்ளனர். பின்னர் அதன் அருகே உள்ள புரோட்டா கடைக்குள் நுழைந்து சாப்பிடுவதறகாக அமர்ந்திருக்கிறார்கள்.

நாட்டு வெடிகுண்டு வெடித்த இடம்

அவர்கள் கடைக்குள் சென்று அமர்ந்ததை உறுதி செய்த ஒரு கும்பல் காரிலும், இரு சக்கர வாகனங்களிலும் வந்து கடையின் முன்பாக நின்றுள்ளது. பின்னர் காரில் வந்தவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். பெரும் சத்தத்துடன் அது வெடித்ததால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதற்குள், கடைக்குள் இருந்த ஐயப்பன், அவரின் உறவினர்கள் ஆகியோர் சுதாகரித்துக் கொண்டு கடைக்குள் இருந்து வெளியே வந்துள்ளனர். அப்போது வெளியே இருந்த கும்பல், ஐயப்பனைக் கொல்லும் நோக்கத்துடன் அரிவாளுடன் ஆவேசமாகக் கத்தியபடி வந்துள்ளனர். மூவரும் அங்கிருந்து ஓடியபோதிலும் அந்தக் கும்பல் அவர்களை விரட்டியுள்ளது.

தடயவியல் அதிகாரிகள் ஆய்வு

உயிருக்குத் தப்பியோடிய ஐயப்பனும் அவரது உறவினர்களும் நெல்லை டவுன் காவல்நிலையத்துக்குள் நுழைந்துள்ளனர். அதற்குள் போலீஸாரும் அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களும் அந்தக் கும்பலை விரட்டதால் கார் மற்றும் இரு பைக்குகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சீனிவாசன் தலைமையிலான போலீஸார் அந்தப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

சம்பவ இடத்துக்கு வந்த நடமாடும் தடய அறிவியல் ஆய்வக அதிகாரிகள், மர்ம பொருள் வெடித்த இடத்தில் சோதனை நடத்தினார்கள். காவல் நிலையத்துக்குள் புகுந்து தஞ்சமடைந்த ஐயப்பன் அவரது உறவினர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அவர்கள் உயிர்தப்பியதாக சம்பவம் நடந்தபோது அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த ஐயப்பனிடம் எதற்காக இந்தச் சம்பவம் நடந்தது என்பது பற்றியும் கொலை செய்ய வந்தவர்கள் யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தினார்கள்.

சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணை

பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் டவுன் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், திருநெல்வேலி டவுண் பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகரான புலித்துரை, மற்றும் இசக்கிமாரி, கோவில்பட்டி ஆவடையாபுரத்தை சேர்ந்த அஜித்குமார், ராஜேஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி, வெடி மருந்துகள் பயன்படுத்துதல், பயங்கர ஆயுதங்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கார்

பறிமுதல் செய்யப்பட்ட காரில் இருந்து இரு நாட்டு வெடிகுண்டு போன்ற வெடிக்கும் உருண்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பெண் விவகாரம் காரணமாக இந்த கொலை முயற்சி நடந்ததா அல்லது கொடுக்கல் வாங்கல் காரணமாக நடந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/reason-behind-the-country-bomb-blast-in-nellai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக