Ad

வெள்ளி, 27 ஜனவரி, 2023

ஒன் பை டூ

தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

``அ.தி.மு.க என்ற கட்சியில் நடக்கும் அவலங்களை `நறுக்’கென்று ஒரே வார்த்தையில் சொல்லியிருக்கிறார் உதயநிதி. பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தங்களின் நாற்காலி ஆசைக்கு அந்த இயக்கத்தை பலி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். முதலில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக டெல்லிக்கு அடிவருடியானவர்கள், எதிர்க்கட்சியான பிறகு தாங்கள் செய்த ஊழலை மறைக்க ஒன்றிய அரசுக்கு அடிமைச் சேவகம் செய்துகொண்டிருக்கிறார்கள். உண்மையான அ.தி.மு.க தொண்டர்களுக்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். ஆனானப்பட்ட வாஜ்பாய், அத்வானி தொடங்கி இன்றைய பிரதமர் மோடி வரைக்கும் கூட்டணி விவகாரங்களைப் பேச அம்மையார் ஜெயலலிதாவின் வீட்டுக் கதவு திறக்காதா என்று போயஸ் கார்டனில் காத்திருந்த காட்சியைத்தான் தமிழ்நாடு பார்த்திருக்கிறது. ஆனால் இன்று, கமலாலயம் வாசலில், `நான்... நீ...’ என்று போட்டி போட்டுக்கொண்டு காத்துக்கிடக்கிறார் கள் அ.தி.மு.க-வினர். ஒரு கவுன்சிலரைக்கூட ஜெயிக்க வைக்க வக்கில்லாத அண்ணாமலை என்ற அரைவேக்காடு நபரிடம் ஓர் இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரி இவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது, ‘நக்கிக் குடிப்பார் அதையும் நல்லதென்று சொல்லுவார்’ என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.’’

செ.கிருஷ்ணமுரளி, சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க

``கோபாலபுரத்தின் கொத்தடிமைக் கூட்டத்தை உருவாக்கியவர்களுக்கு அ.தி.மு.க குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது... தி.மு.க கூட்டத்தை மக்கள் பத்து வருடங்கள் மூலையில் உட்காரவைத்தும் இன்னும் அவர்கள் திருந்தவில்லை. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ‘பழம் கனிந்துகொண்டிருக்கிறது. பாலில் எப்போது விழும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்’ எனக் கருணாநிதி சொன்னதும்... விஜயகாந்த் வீட்டுக்குத் தூது மேல் தூது அனுப்பி, பேச்சுவார்த்தை நடத்தியதும்... தே.மு.தி.க-வுடன் கூட்டணிவைக்க தி.மு.க-வினர் கடைசிவரை காத்துக்கிடந்த கதையும் உதயநிதிக்குத் தெரியாதுபோல. அவர் இன்னும் சினிமா உலகத்திலிருந்து வெளியில் வரவில்லை. கைதட்டல் வாங்க வேண்டுமென யாரோ எழுதிக்கொடுத்ததை மேடைகளில் பேசிக்கொண்டிருக்கிறார். தாத்தா, அப்பா, மகன் என வம்சாவளியில் குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர்கள், ஜனநாயகக் கட்சியான அ.தி.மு.க-வைக் குறைகூறுவது நகைப்புக்குரியது. தி.மு.க ஆட்சி அமைத்த பிறகு, பட்டத்து இளவரசன் உதயநிதியை அமைச்சர் ஆக்கியது மட்டுமே ஸ்டாலின் அரசின் ஒரே சாதனை. இந்த கொடுங்கோல் ஆட்சி மீதான மக்களின் கோபம், ஈரோடு இடைத்தேர்தலில் வெளிப்படும்.’’



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-udhayanidhi-stalin-comments-on-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக