Ad

சனி, 14 ஜனவரி, 2023

புதுக்கோட்டை: தலையில் கரும்பு, சைக்கிளில் செல்லும் பொங்கல் சீர்வரிசை - மகளை நெகிழ வைக்கும் தந்தை!

தலையில் கரும்புக்கட்டினைச் சுமந்தவாறே கடந்த சில ஆண்டுகளாகவே 'தைப் பொங்கலும் பொங்குது...' பாடல் வரியுடன் சாலையில் சைக்கிளில் முதியவர் ஒருவர் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் கவர்ந்தது. மகளுக்குப் பொங்கல் சீர்வரிசை கொண்டு செல்லும் முதியவரின் வீடியோ, பொங்கல் நேரத்தில் அதிகம் பகிரப்பட்டும், பார்க்கப்பட்டும் வருகிறது. இந்த வருடமும் அவர் மகளுக்குச் சீர் வரிசை எடுத்துச் சென்றிருக்கிறார்.

பொங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தக்கோட்டைக் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை (85) தான் அந்த முதியவர். இவர் தன் மகள் சுந்தரம்பாளுக்கு ஒவ்வொரு பொங்கலின் போதும் சீர்வரிசை கொடுக்கத் தவறுவதில்லை. சைக்கிளிலேயே, அதுவும், பொங்கல் கரும்பைத் தலையில் சுமந்தவாறே வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தூரம் சைக்கிளில் கொண்டு சென்று சீர்வரிசைகளை மகளுக்குக் கொடுத்து நெகிழ வைத்து வருகிறார்.

செல்லத்துரையிடம் பேசினோம், "18 வருஷத்துக்கு முன்னால மகள் சுந்தராம்பாளை நம்பம்பட்டியில கட்டிக்கொடுத்தேன். 10 வருஷமா குழந்தை இல்லாம இருந்துச்சு. அப்புறம் ஆண் ஒண்ணு, பெண் ஒண்ணுன்னு இரட்டை குழந்தைங்க பிறந்தாங்க. பேரப்பிள்ளைங்க பொறந்த வருஷத்துல இருந்து இப்பவரைக்கும், வருஷம் தவறாம பொங்கல் அன்னைக்கு மொத நாளு சீர்வரிசையைக் கொண்டுபோய் சேர்த்திடுவேன். இப்ப இல்லை, எனக்கு விவரம் தெரிஞ்சதில் இருந்தே சைக்கிள்லதான் போயிக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கேன்.

செல்லத்துரை

கரும்புக் கட்டை ரோட்டுல கொண்டுபோகிறோம். மெயின் ரோட்டுல கொண்டு போகும் போது, மத்தவங்களுக்கு ஏதும் பிரச்னை ஏற்பாடாம பத்திரமாகக் கொண்டு போகணும். அதுல ரொம்ப கவனமா இருப்பேன். இன்னைக்கு நேத்து இல்லை ஆண்டாண்டு காலமா கொண்டு போயிக்கிட்டு இருக்கிறதால, அதுவே பழகிடுச்சு. வெல்லம், பச்சரிசி, முந்திரி, மஞ்சள்கொத்து, கரும்புன்னு கொஞ்சம் பொங்க சீர்தான் எடுத்துக்கிட்டு போறேன். எனக்காக மகளும், பேரப்பிள்ளைங்களும் ஆவலோட காத்திருப்பாங்க. ரொம்ப மகிழ்ச்சியாகிடுவாங்க. அந்த உற்சாகத்துலதான் தொடர்ந்து கொண்டுபோய்க்கிட்டு இருக்கேன்" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.



source https://www.vikatan.com/news/tamilnadu/this-father-from-pudukottai-is-carrying-pongal-treat-for-her-daughter-every-year

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக