Ad

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

தனித்து களம் காணும் தேமுதிக... ஈரோடு கிழக்கு கணக்கு தான் என்ன?!

2021 சட்டமன்ற தேர்தலின் போது சீட் கொடுப்பதில் அதிமுக-வுடன் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் கூட்டணியிலிருந்து தே.மு.தி.க விலகியது. இதேபோல், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்து களம் கண்டது. தற்போதைய அரசியலில் தனித்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தே.மு.திக, வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியை மாற்றி அமைக்கும் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச்சூழலில், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4-ம் தேதி காலமானார். அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த கையோடு அங்குத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தல்

தி.மு.க தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு அத்தொகுதியை விட்டுக்கொடுத்துள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோல, அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை பிரச்னையால் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க உடன் கூட்டணியில் இருப்பதால் பா.ஜ.க-வும் இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்தச்சூழலில், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே சுதீஷ் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஈரோடு இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

மா.செ கூட்டம்

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ``ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க தனித்துப் போட்டியிடும். ஈரோடு கிழக்கில் மாவட்டச் செயலாளர் ஆனந்த் வேட்பாளராகப் போட்டியிட உள்ளார்" என்று அறிவித்திருக்கிறார். ஏற்கனவே, சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க படுதோல்வியை சந்தித்தது. இந்தநிலையில், இடைத்தேர்தலில் தனித்து களம் இறங்கியுள்ள தே.மு.தி.கவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம்,

ஆனந்த்

``மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தான் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். வெற்றியோ, தோல்வியோ தேர்தலில் நிற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் தே.மு.தி.க இருக்கிறது. 2011-ம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாங்கள் வெற்றிபெற்றோம். அதே நம்பிக்கையுடன் தான் இப்போதும் களம் காண்கிறோம். தே.மு.தி.க தொடங்கியது முதல் தற்போது வரை அனைத்து இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் எங்களுக்கு அமையும். ஓருரி நாள்களில் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி அறிவிக்கப்படும். பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் நேரடி பிரசாரத்திற்குச் செல்வார்கள். விஜயகாந்த் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அவர் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வாரா என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் சொல்வோம்" என்கின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-is-dmdk-strategy-stand-alone-in-erode-east-by-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக