Ad

செவ்வாய், 17 ஜனவரி, 2023

Doctor Vikatan: வேலையை பாதிக்கும் அளவுக்கு தலைவலி... பெயின் கில்லரால் சமாளிப்பது சரியா?

Doctor Vikatan: எனக்கு வயது 38. அடிக்கடி தலைவலி வருகிறது. அப்போது என்னால் எந்த வேலையையும் செய்ய முடிவதில்லை. பெயின் கில்லர் போட்டால்தான் வலி நிற்கிறது. இப்படி வலி வரும்போதெல்லாம் பெயின் கில்லர் போட்டுக்கொள்ளலாமா? அடிக்கடி தலைவலி வர என்ன காரணம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம்.

நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்

சிலருக்கு வெயிலில் சென்றால் தலைவலி வரும். பசியில் தலைவலி வரும். தூக்கம் கெட்டுப்போனால் தலைவலிக்கும். பல வருடங்களாக ஒரு பக்கத் தலைவலி இருக்கிறது என்பார்கள் சிலர். அது மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியாக இருக்கும். 100 பேர் தலைவலி என்று சொன்னால் அவர்களில் கிட்டத்தட்ட 80 பேருக்கு அது மைக்ரேனாக இருக்கும்.

மைக்ரேன் என்பது எமர்ஜென்சியாக கருதி சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதல்ல என்றாலும், நரம்பியல் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெறுவது நல்லது. மூன்று மாதங்களுக்கொரு முறை தலைவலி வருகிறது என்றால் அது குறித்து பயப்படத் தேவையில்லை. அதுவே ஒரு மாதத்தில் நான்கைந்து முறை தலைவலி வருகிறது, மாத்திரை சாப்பிட்டால்தான் சரியாகிறது, தலைவலியால் என் வேலைகள் எல்லாம் பாதிக்கின்றன என்றால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. அதற்கு சிகிச்சை அவசியம்.

சிலருக்கு 50 வயது வரை தலைவலி வந்திருக்காது. 50 வயதுக்குப் பிறகு திடீரென அடிக்கடி தலைவலி வருகிறது என்றாலும் அவசியம் நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும்.

இன்னொரு வகை தலைவலி உண்டு. `இடி விழுந்தது போன்ற தலைவலி' என்பார்கள். அதை Thunderclap headache என்கிறோம். அதாவது தலை வலிக்க ஆரம்பித்த ஒரு நிமிடத்தில் அது உச்சத்தை அடைந்திருக்கும். அது மிக மிக ஆபத்தான தலைவலி. ஒரு நொடிகூட தாமதிக்காமல் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய பிரச்னை இது.

சிலருக்கு சுளீர், சுளீரென தலைவலி வரும். அப்போது கண்கள் சிவக்கும். சில நிமிடங்களில் தானாக வலி போய்விடும். இன்னும் சிலருக்கு தினமும் அலாரம் வைத்ததுபோல குறிப்பிட்ட நேரத்தில் தலைவலி வரும். சில நிமிடங்கள் வலிக்கும், பிறகு தானாகச் சரியாகிவிடும். மூன்று மாதங்களோ, ஆறு மாதங்களோ கழித்து அதே மாதிரி மறுபடி வரும்.

தலைவலி

நரம்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றால் அவர் கேட்கும் கேள்விகளிலேயே அது எந்த மாதிரியான தலைவலி என்று கண்டுபிடித்துவிடுவார்.

எனவே, ஒவ்வொரு விதமான தலைவலிக்கும் ஒவ்வொருவித சிகிச்சை இருக்கிறது. பொதுவான ஒரு மருந்தால் எல்லாவற்றையும் குணப்படுத்திவிட முடியாது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருந்து பரிந்துரைக்கப்படும். நீங்கள் நினைக்கிற மாதிரி பெயின் கில்லர் போட்டுப் பழகுவது சரியானதும் அல்ல. வலிக்கான காரணமறிந்து சிகிச்சை எடுப்பதுதான் பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-a-headache-that-interferes-with-work-is-it-okay-to-treat-it-with-a-pain-killer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக