Ad

சனி, 14 ஜனவரி, 2023

இட்லி, ஆப்பம், பிரியாணி... சிறுதானியங்களில் சிறப்பான வீக் எண்டு விருந்து

2023-ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது ஐ.நா. கடந்த சில வருடங்களாக சிறுதானிய உணவுமுறை குறித்து அதிகம் பேசுகிறோம். சிறுதானிய சமையல் சுவையாக இருக்குமா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. சத்துகளைப் போலவே சுவையிலும் சிறுதானிய உணவுகள் சளைத்தவை அல்ல. அந்த அனுபவத்தைப் பெற இந்த வார வீக் எண்டுக்கு சிறுதானியங்களை வைத்துச் சமைக்க உங்களுக்கு சில ஸ்பெஷல் ரெசிப்பீஸ்...

குள்ளகார் காஞ்சிபுரம் இட்லி

தேவையானவை:

குள்ளகார் (புழுங்கல்), குள்ளகார் (பச்சை) - தலா ஒரு கப்

உளுந்து - கால் கப்

அவல் - கால் கப்

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

மிளகு, சீரகம் (பொடித்தது) - 2 டீஸ்பூன்

கடுகு, உளுந்து - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - 12 இலைகள்

சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்

கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - இஞ்சி விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் + ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

குள்ளகார் காஞ்சிபுரம் இட்லி

செய்முறை:

அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் நன்கு கழுவி 3 மணி நேரம் ஊறவிடவும். அவலைக் கழுவி தனியே ஊறவைக்கவும். பின்பு எல்லாவற்றையும் ஒன்றாக நன்கு அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து 6-7 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

2 டேபிள்பூன் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து, சிவந்ததும் பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, தேங்காய்த் துருவல், பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து மாவில் சேர்க்கவும். அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், சுக்குத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து டம்ளர் அல்லது இட்லித் தட்டில் ஊற்றி ஆவியில் நன்கு வேகவைத்து எடுக்கவும்.

கிச்சலி சம்பா சாத்தமுது

தேவையானவை:

கிச்சலி சம்பா அரிசி - ஒரு கப்

துவரம்பருப்பு - அரை கப்

தக்காளி - 3

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

மிளகு - 2 டீஸ்பூன்

சீரகம் - 2 டீஸ்பூன்

துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

கறிவேப்பிலை,

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

கிச்சலி சம்பா சாத்தமுது

செய்முறை:

அரை கப் துவரம்பருப்பை நன்கு வேகவைத்துக் கொள்ளவும். அரிசியுடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும். வெந்த துவரம்பருப்பில் பாதியை இதனுடன் சேர்த்துக் கலக்கவும்.

2 கப் தண்ணீரில் புளியைக் கரைத்து, மீதமுள்ள துவரம்பருப்புடன் சேர்க்கவும். அதனுடன் தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைக்கவும்.

சுற்றிலும் கொதிவந்து நுரை கட்டியதும் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், துவரம்பருப்பை கொரகொரப்பாகப் பொடித்துச் சேர்த்து இறக்கி மூடிவைக்கவும். எண்ணெய் ஒரு டீஸ்பூன், நெய் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை சேர்த்து, பொரிந்ததும் சாதத்தில் சேர்க்கவும். 5 நிமிடங்கள் கழித்து ரசத்தை நன்கு வடிகட்டி சிறிது சிறிதாக சாதத்தில் கலக்கவும். நன்கு கலந்து பின்னர் கொத்தமல்லித்தழை நெய் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

காளான் சீரக சம்பா பிரியாணி

தேவையானவை:

சீரக சம்பா - ஒரு கப்

காளான் - 12

வெங்காயம், தக்காளி - தலா 2

பச்சை மிளகாய் - ஒன்று

புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

தயிர் - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

அரைக்க:

மிளகு - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள், தனியாதூள் - தலா அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று

காளான் சீரக சம்பா பிரியாணி

செய்முறை:

அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். காளான், வெங்காயம், தக்காளியைக் கழுவி நறுக்கிக்கொள்ளவும். அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைக்கவும். குக்கரில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயம், சிட்டிகை உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு அரைத்த விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு அதில் தயிர் சேர்த்துக் கலந்து, ஒன்றே முக்கால் கப் கொதிக்கும் நீர் சேர்க்கவும். அதனுடன் காளான், தேவையான உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு அரிசி சேர்த்து மூடி, மிதமான தீயில் வேகவிட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். பிரஷர் அடங்கியதும் திறந்து கிளறிப் பரிமாறவும்.

மாப்பிள்ளை சம்பா அவல் ஆப்பம்

தேவையானவை:

மாப்பிள்ளை சம்பா - ஒரு கப்

கெட்டி அவல் - கால் கப்

உளுந்து - ஒரு டேபிள்ஸ்பூன்

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

தேங்காய்ப்பால் (கெட்டியாக) - அரை கப்

உப்பு - தேவைக்கேற்ப

மாப்பிள்ளை சம்பா அவல் ஆப்பம்

செய்முறை:

மாப்பிள்ளை சம்பா அரிசியுடன் மற்றவற்றை (உப்பு, தேங்காய்ப்பால் நீங்கலாக) ஒன்றாகக் கலந்து நன்கு கழுவி ஊறவைக்கவும். 2 மணி நேரம் ஊறிய பின் நன்கு அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து 6-8 மணி நேரம் புளிக்கவிடவும்.

அதில் தேங்காய்ப்பால் சேர்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, காய்ந்ததும் தீயைக் குறைத்து, மாவை ஒரு கரண்டி ஊற்றி, சுற்றி கனமாகத் தேய்க்கவும். மூடிவைத்து வேகவிட்டு எடுக்கவும். எண்ணெய் தேவையில்லை.



source https://www.vikatan.com/food/food/small-grain-weekend-special-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக