Ad

வெள்ளி, 20 ஜனவரி, 2023

ஒன் பை டூ

வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க

``நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 4.41 சதவிகிதம்தான். இத்தனைக்கும் தி.மு.க கூட்டணியில் 13 கட்சிகள் இருந்தன. எனவேதான் எடப்பாடியார் அப்படிக் கூறியிருக்கிறார். அதுமட்டுமன்றி தி.மு.க தேர்தல் சமயத்தில் நிறைவேற்றவே முடியாத, சாத்தியமே இல்லாத பல பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லியும் மக்களை ஏமாற்றியது. பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை, நீட் தேர்வு விலக்கு, பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, காஸ் மானியம் என்று வாய்க்கு வந்த வாக்குறுதிகளைச் சொல்லி மக்களை ஆசைகாட்டி ஏமாற்றியது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், சொன்ன எதையும் செய்யாமல், மக்களை திசைதிருப்ப ‘திராவிட மாடல்’ ஆட்சி என்ற யுக்தியைக் கையிலெடுத்திருக் கிறார்கள். மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை, அனைத்துத் துறைகளிலும் லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுகிறது. கட்சியிலும் ஆட்சியிலும் ஒட்டுமொத்த அதிகாரமும் ஒரே குடும்பத்தில் குவிந்துகிடக்கிறது. தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் சொன்ன திராவிட மாடல் ஆட்சி இதுதானா... ஆட்சியிலிருந்தாலும், இல்லையென்றாலும் மக்களுக்காகப் போராடுவது அ.தி.மு.க மட்டுமே. மக்கள் விரோத தி.மு.க-வின் குடும்ப ஆட்சியை மக்கள் தூக்கி எறியும் நாள் தொலைவில் இல்லை.’’

வைகைச்செல்வன், பழ.செல்வகுமார்

பழ.செல்வகுமார், மாநில துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க

``சொந்தமாகத் தேர்தல் வாக்குறுதி கொடுக்கக்கூட தெரியாமல், தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையைக் காப்பியடித்து ஆட்சிக்கு வருவதும், ஆட்சிக்கு வந்த பின்னால் மக்கள் பணிகளில் கவனம் செலுத்தாமல், கொள்ளையடிப்பதும், தங்களின் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஊர்ந்து செல்வதும், டெல்லிக்குக் காவடி தூக்குவதும் அ.தி.மு.க ஸ்டைல். தமிழ்நாட்டைக் கடனாளியாக்கியது மட்டும்தான் அவர்களது ஒரே சாதனை. தி.மு.க தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற கூட்டணி, கொள்கைக் கூட்டணி. மாறாக, குழப்பமான ஒரு கூட்டணியை அமைத்துவிட்டு, ‘எங்கள் தோல்விக்குக் கூட்டணிக் கட்சியே காரணம்’ என்று குறை கூறியவர்களுக்கு எங்கள் கூட்டணி பற்றிப் பேச என்ன தகுதியிருக்கிறது... தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமைத்து 20 மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி, அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடும் வகையில் ஆட்சி நடத்துகிறார் தளபதி ஸ்டாலின். அ.தி.மு.க என்றொரு கட்சி இருப்பதையே மக்கள் மறந்துவிட்டார்கள். தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்ளவும், தி.மு.க ஆட்சியை எப்படிக் குறை கூறுவது என்று தெரியாமலும் இப்படி உளறிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க-வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.’’



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-edappadi-palanisamy-talks-about-dmk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக