Ad

சனி, 14 ஜனவரி, 2023

மூத்த அமைச்சரை வெளுத்து வாங்கிய புதின்... உக்ரைன் போரில் பின்னடைவா?

பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் `நேட்டோ' எனப்படும் வட அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பில் இணைவதற்கு ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் முயன்றது. அதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்த ரஷ்யா, கடந்த ஆண்டு பிப்ர்வரி 24-ம் தேதி அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. உக்ரைனும் பதிலடி கொடுத்தது. சில வாரங்களில் போர் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றுவரை அங்கு போர் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

ரஷ்யா - உக்ரைன் போர்

கடந்த 2022-ம் ஆண்டின் மிகப்பெரிய சோகமாக, ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு லட்சம் வீரர்கள் இந்தப் போரில் மரணமடைந்திருக்கிறார்கள். கடந்த 10 மாதங்களாக நடைபெற்றுவரும் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து அதிர்ச்சிக்குரிய பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஐ.நா சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையத்தின் அறிக்கை ஒன்று கடந்த டிசம்பர் 27-ம் தேதி வெளியானது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போரால் உக்ரைன் பொதுமக்கள் 6,884 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்றும், 10,947 பேர் காயமடைந்திருக்கின்றனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உக்ரைன் போரால் பொருளாதார இழப்பு உட்பட பல பாதிப்புகளை ரஷ்யா சந்தித்துவரும் சூழலில், ரஷ்யாவின் மூத்த அமைச்சர் ஒருவரை அதிபர் புதின் கடுமையாகத் திட்டியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்ற காணொளி கூட்டம் கடந்த ஜனவரி 11-ம் தேதி நடைபெற்றிருக்கிறது. அதில் கலந்துகொண்ட அதிபர் புதின் கோபமாகக் காணப்பட்டார் என்று செய்திகள் கூறுகின்றன. ரஷ்யாவின் துணை பிரதமரான டெனிஸ் மன்டுரோவ், அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யாவின் ஆயுதங்களை மேற்பார்வையிட்டு தேவையான ஆயுதங்கள், உபகரணங்கள் ராணுவத் துருப்புகளுக்கு விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்யும் பொறுப்பு அமைச்சர் டெனிஸ் உடையது. இந்த நிலையில்தான், நாட்டின் விமான ஒப்பந்தங்கள் தொடர்பான பணிகள் மந்தமாக நடைபெறுவதாக புதின் விமர்சித்திருக்கிறார்.

ஏன் தாமதம் என்பதற்கான விளக்கத்தை முன்வைக்க டெனிஸ் முயன்றிருக்கிறார். ஹெலிகாப்டர் இன்ஜின்கள் முன்பு உக்ரைனில் தயாரிக்கப்பட்டதாகவும், தற்போது ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தயாரிப்பதற்கு ஏற்பாடுகள் நடப்பதாகவும் டெனிஸ் விளக்கம் அளித்திருக்கிறார். உடனே அவரை முறைத்தவாறு, “இது மிகவும் தாமதம்... மிகவும் தாமதம். பணியை விரைவுபடுத்துங்கள்” என்று கோபமாகக் கூறியிருக்கிறார் புதின்.

அப்போது அமைச்சர் டெனிஸ் மேலும் சில விளக்கங்களைக் கூற முயன்றபோது இடைமறித்த புதின், “இதுவரை எந்த ஒப்பந்தமும் தயாராக இல்லை என்பது எனக்குத் தெரியும். எப்போது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்? இந்தப் பிரச்னையின் தீவிரத்தை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மாதத்தில் அனைத்தும் செய்து முடிக்கப்பட வேண்டும். நாம் எந்த சூழ்நிலையில் இருக்கிறோம் என்பது உங்களுக்குப் புரியவில்லையா?” என்று உஷ்ணமாகியிருக்கிறார்.

புதின்

போர் நடக்கும் சூழலில், கடினமாகவும் கறாராகவும் அணுகக்கூடிய ஒரு தலைவராக தன்னை முன்னிறுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தால், அவ்வாறு புதின் நடந்துகொண்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. ஜனவரி 11-ம் தேதி காணொளிக் கூட்டம் நடைபெற்ற அதே நாளில், உக்ரைனில் ராணுவ தலைமை கமாண்டரை மாற்றியிருக்கிறார் புதின். ராணுவத்தின் தலைமைத் தளபதியான வல்ரே ஜெராசிமோவை உக்ரைன் போருக்கான தளபதியாக புதின் நியமித்திருக்கிறார்.

இதேபோலத்தான், உக்ரைன் போர் தொடங்கிய சில நாள்களில், ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷொய்குவை புதின் திட்டியதாகவும், அதனால், பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும் செய்திகள் வெளியாகின. அதன் பிறகு, அது பற்றிய எந்த செய்தியும் காணவில்லை. தற்போது, மூத்த அமைச்சர் டெனிஸிடம் புதின் கோபப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்தியை அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மறுத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/international/russian-president-putin-scolded-a-senior-minister-what-was-the-reason

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக