Ad

திங்கள், 16 ஜனவரி, 2023

Doctor Vikatan: தினமும் பிரெட் சாண்ட்விச் சாப்பிடுவது சரியானதா?

Doctor Vikatan: தினமும் பிரேக்ஃபாஸ்ட்டுக்கு பிரெட் சாப்பிடலாமா? பிரெட் ரோஸ்ட் அல்லது சாண்ட்விச் சாப்பிடலாமா? மல்ட்டிகிரெயின் பிரெட் நல்லதா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

தினமும் பிரெட் சாப்பிடுவதால் அது மலச்சிக்கல் பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. நீங்கள் எந்த மாதிரியான பிரெட் சாப்பிடுகிறீர்கள், எத்தனை ஸ்லைஸ் சாப்பிடுகிறீர்கள், நார்ச்சத்து எடுத்துக் கொள்கிறீர்களா என்பதெல்லாம் கவனிக்கப்பட வேண்டும்.

பொதுவாக பிரெட்டில் நார்ச்சத்து இருக்காது. அதிலும் மைதாவில் தயாரிக்கப்படும் பிரெட்டை காலை உணவுக்கு எடுத்துக் கொள்வது நல்லதல்ல. அதற்கு பதில் மல்ட்டிகிரெயின் பிரெட் அல்லது பிரவுன் பிரெட் சாப்பிடலாம். அதிலும் மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் பிரவுன் பிரெட்டையும் சாப்பிடக்கூடாது.

வாரத்தில் ஒன்றிரண்டு நாள்கள் பிரெட் ரோஸ்ட் அல்லது பிரெட் சாண்ட்விச் சாப்பிடலாம். ஆனால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரெட் உணவுகள் ஏற்றுக்கொள்ளாது. சாண்ட்விச்சில் சேர்க்கப்படும் பச்சைக் காய்கறிகள் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம்.

பொதுவாக எந்த உணவையும் இது நல்லது, இது கெட்டது என்று சொல்ல முடியாது. நம் உடல்வாகு, நாம் செய்கிற வேலைகளின் தன்மை போன்றவற்றைப் பொறுத்தே அதை முடிவு செய்ய முடியும். நீங்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்கிறீர்களா, உடலுக்கு அதிக உழைப்பு தரும் வேலைகளைச் செய்பவரா என்பதும் இதில் முக்கியம்.

மைதா பிரெட்டுடன் ஒப்பிடும்போது மல்ட்டிகிரெயின் பிரெட்டும் பிரவுன் பிரெட்டும் நல்லதுதான். ஆனாலும் அவற்றின் லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள ஊட்டச்சத்துகள், சேர்க்கைகள் ஆகியவற்றைப் படிக்க வேண்டும். மல்ட்டிகிரெயின் பிரெட், பிரவுன் பிரெட் போன்றவை எல்லா கடைகளிலும் ஒரே மாதிரியான தரத்தில் கிடைப்பதில்லை. ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு மாதிரி தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.

Bread Slices

சில கடைகளில் 'ஆர்ட்டிசன் பிரெட்' ( Artisan Bread ) என்று கிடைக்கும். அதாவது வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப கஸ்டமைஸ் செய்து தயாரித்திருப்பார்கள். சிறுதானிய மாவெல்லாம் சேர்த்து ஊட்டச்சத்து நிரம்பியதாகச் செய்திருப்பார்கள். அது ஓரளவு ஆரோக்கியமானது. வாய்ப்பிருந்தால் அதை வாங்கிச் சாப்பிடுங்கள்.

எனவே பிரெட் சாப்பிடுவோர், அதில் மைதா சேர்த்திருந்தால் தவிர்க்க வேண்டும். ரீஃபைண்டு ஃப்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தால் அது மைதாவாக இருக்கும். அதில் நார்ச்சத்தும் சர்க்கரைச்சத்தும் எந்த அளவுக்கு இருக்கிறது என்று பார்க்க வேண்டும். இரண்டு, மூன்றுவித மாவு சேர்க்கப்பட்டிருந்தாலும் சர்க்கரை சேர்க்காமலும் இருந்தால் தேர்வு செய்யலாம். ஆனால் தினமும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/food/healthy/doctor-vikatan-is-it-right-to-eat-a-bread-sandwich-every-day

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக