Ad

சனி, 21 ஜனவரி, 2023

"இதை செய்யாவிட்டால், தமிழ்நாட்டில் பாஜக-வால் ஒருபோதும் வேரூன்ற முடியாது!"- போட்டு தாக்கும் பொன்னையன்

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளருமான பொன்னையனை சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்.

``கட்சி இணைப்பு குறித்து பன்னீரையும், எடப்பாடியையும் சந்திக்கவிருப்பதாக சசிகலா கூறியிருக்கிறாரே?"

``தீவிர தி.மு.க எதிர்ப்பைக் கடைபிடிக்கும் இ.பி.எஸ்ஸும், கோபாலபுர வாரிசுகளுடன் நெருக்கமாகிபோன ஓ.பி.எஸ்ஸும் கொள்கைரீதியாக வடக்கு, தெற்கு என இரு துருவங்களாக மாறிவிட்டார்கள். துருவங்களை யாராலும் சேர்க்க முடியாது. சசிகலா அம்மையார் கூறியிருப்பது அடிப்படை இல்லாத கொள்கையின் நிலைபாடுதான். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம்."

``ஆனால், `அ.தி.மு.க ஒன்றிணையவேண்டும்' என்று பா.ஜ.க-வினரும், புதுச்சேரி ஆளுநர் தமிழிசையும் கூறுகிறார்களே?"

``பா.ஜ.க-வினர் மற்றும் தமிழிசை போன்றவர்களின் கருத்து அவர்களின் சொந்த கருத்து. அதற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை."

பொன்னையன்

``அ.தி.மு.க மூத்த தலைவரான உங்களுக்கு கட்சி இப்படி நான்கு துண்டுகளாக உடைந்து கிடப்பது வருத்தமாக இல்லையா?"

``என்னைப் பொறுத்தவரை கட்சி உடையவே இல்லை. 94.5 சதவிகித நிர்வாகிகளுடன், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க வலிமையோடுதான் இருக்கிறது. ஓ.பி.எஸ் உள்ளிட்ட சில கும்பல்கள் பிரிந்து செயல்படுவதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதனால் எனக்கு கவலையும் இல்லை."

``ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியை அங்கீகரிக்கவில்லையே... சமீபத்தில் ரிமோட் வாக்குப் பதிவு குறித்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம்தானே கருத்து கேட்டிருக்கிறது?"

``தமிழ்நாடு மட்டுமல்ல அகில இந்திய அளவில் தேர்தல் ஆணையத்தில் குளறுபடிகள் நடப்பது கண்கூடாக தெரிகிறது. அதைபோலதான் இதுவும். அ.தி.மு.க-வை கட்சியின் சட்ட திட்டங்கள்தான் வழி நடத்துகின்றன. அதன்படி, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் எடப்பாடிதான் அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமைக்குச் சொந்தக்காரர். ஓ.பி.எஸ்ஸுக்கு வந்த கடிதங்களை எல்லாம் கணக்கிலே எடுத்துக் கொள்ள வேண்டாம்."

``ஆட்சியில் இருந்தபோது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்துவிட்டு, இப்போது மட்டும் ஆதரிப்பது சரியா?"

``இது ஒன்றும் மீறக்கூடாத கொள்கையில்லை. சூழலுக்கு ஏற்ப நிலைப்பாட்டை மாற்றலாம். அதே நேரத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் நடைமுறை சிக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன. கருத்து என்பது வேறு, சாத்தியக்கூறுகள் என்பது வேறு. சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. எங்கள் கருத்தை நாங்கள் சொல்லியிருக்கிறோம். அவ்வளவுதான்."

பொன்னையன்

``சட்டமன்றத்திலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்ததை எப்படி பார்க்கிறீர்கள்?"

``அரசியலமைப்பின்படி ஒரு குறுகிய எல்லையில் பணியாற்றும் அதிகாரம்தான் ஆளுநருக்கு இருக்கிறது. அதன்படி, தனது மாநில அரசு கொடுக்கும் உரையில் உள்ளதை நீக்குவதோ, புதிதாக சேர்ப்பதோ மரபு கிடையாது. அப்படி மரபை மீறும் ஆளுநரின் செயல் ஏற்புடையது இல்லை என்பதுதான் பலரின் குற்றச்சாட்டு. ஓர் ஆளுநர் தனது சொந்த கருத்துகளை நடைமுறைப்படுத்த நினைப்பது அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் சிலவற்றை பேசி வருகிறார் என்ற வலுவான குற்றச்சாட்டை நான் மறுக்கவில்லை. இருப்பினும் ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அரசு கொடுத்திருக்க வேண்டும்."

``ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டிக்கு கொடுக்கப்பட்ட மரியாதை போலவா?"

``சென்னா ரெட்டியையும் தற்போதைய ஆளுநரையும் ஒப்பீடு செய்ய முடியாது. தனிப்பட்ட முறையில் சென்னா ரெட்டியின் செயல்பாடு ஏற்புடையாத இல்லை என்பதால்தான் எதிர்ப்பு தெரிவித்தோம்."

பொன்னையன்

`` `நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தனித்து நின்றாலும் பல இடங்களில் பா.ஜ.க வெல்லும்' என்று அந்தக் கட்சியின் நிர்வாகிகள் கூறுகிறார்களே?"

``தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எல்லா கட்சிகளின் ஆசை. ஆனால், வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் என்பதுவேறு. தமிழ்நாட்டின் இருமொழி கொள்கை, நீட் எதிர்ப்பு, அண்டை மாநிலத்துடனான நீர் பங்கீடு உள்ளிட்ட கொள்கைகளுக்கு தமிழக பா.ஜ.க எதிராகச் செயல்படுகிறது. காவிரி நீர் பங்கீட்டில், இதுவரை தமிழக பா.ஜ.க செய்தது என்ன? நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டதை மறுத்துவிட்டார்கள். ஏழு தமிழர்கள் விடுதலையை பொறுத்தவரை, தமிழக மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் என்ற கொள்கையோடு செயல்படுவதாக மக்கள் எண்ணுகிறார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சம்ஸ்கிருதம்தான் ஆளவேண்டும் என்ற வெறிதனமான ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் மத்திய அரசு இருக்கிறது. தமிழ் என்றாலே வெறுக்கிறார்கள். இந்தியா முழுவதும் அவர்கள் எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டுக்கென கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த வெறித்தனங்களிலிருந்து பா.ஜ.க மாறவில்லை என்றால் தமிழ்நாட்டில் ஒருபோதும் வேரூன்ற முடியாது."

``இவ்வளவு முரண்பாடுகளோடு ஏன் கூட்டணி அமைத்தீர்கள்?"

``கொள்ளை வேறு, கூட்டணி வேறு. கொள்கையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், அவர்கள் நிற்கும் தொகுதியில் ஓட்டு கிடைக்காது."

பொன்னையன்

``இது அ.தி.மு.க-வுக்கும் பாதகம்தானே?"

``இது ஒரு முக்கியமான பிரச்னை. சிறுபான்மையின, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிக முக்கியதுவம் கொடுப்பதுதான் எங்கள் கொள்கை. பா.ஜ.க இதில் மாறுப்பட்டிருப்பதை நாங்கள் அணு அளவும் ஏற்றுக் கொண்டதில்லை. திருந்துவார்கள் என்று எண்ணுகிறோம். கூட்டணி குறித்து பொறுத்திருந்து பாருங்கள்."

"இவர்களைப் பற்றி ஒன்லைனில் கமென்ட் சொல்லுங்கள்?”

மோடி

பிரதமர் மோடி: மிகச் சிறந்த ஞானம் படைத்தவர். அகில இந்திய அளவில் வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியதுவம் கொடுக்கிறார்.

ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் : தந்தை வழியில் பொய்மைக்கு முக்கியத்துவம் தரக்கூடிய அரசியல்வாதி.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி: ராஜாஜி போல நிர்வாக திறமை கொண்டவர். எதையுமே புள்ளிவிவரங்களோடு பேசக்கூடிய நினைவாற்றல் கொண்டவர்.

பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்: நிலையற்ற கொள்கைக்கு சொந்தக்காரர்.

சசிகலா

சசிகலா : நம்ப தகாதவர்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி: வாரிசு அரசியலில் நாயகன்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-ponnaiyan-shares-his-views-on-current-political-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக