Ad

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

ஈரோடு: தோட்டத்து வீட்டில் விஷமாத்திரை உண்டு வயதான தம்பதியர் தற்கொலை - நடந்தது என்ன?!

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அனுமன்பள்ளி அருகே சின்ன தொட்டிபாளையத்தை அடுத்த கள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர் (85). இவருக்கு பழனியம்மாள் (66) என்ற மனைவியும், ராஜாகந்தசாமி (43) என்ற மகனும் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும் கள்ளியங்காட்டு தோட்டத்தில் குடியிருந்து, அவர்களின் சொந்த தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தனர். இதனிடையே பழனியம்மாளி்ன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் கடும் அவதி அடைந்து வந்துள்ளார். அதேபோல கருப்பண்ண கவுண்டருக்கு காது சரியாக கேட்காமலும், கண்பார்வை குறைபாடும் இருந்து வந்தது. 

இதனால் கணவன் - மனைவி இருவரும் கடந்த சில நாள்களாகவே மனவேதனையுடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 26 -ம் தேதி இரவு 8 மணி அளவில் கருப்பண்ண கவுண்டரும், பழனியம்மாளும் தற்கொலை செய்ய முடிவு எடுத்து தென்னை மரங்களைத் தாக்கும் வண்டுகளை அழிக்கும் விஷ மாத்திரைகளை சாப்பிட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கணவன்- மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.  அப்போது அவர்களின் மகன் ராஜா கந்தசாமி வெளியூர் சென்றிருந்ததாகத் தெரிகிறது.

தற்கொலை

இந்நிலையில் நேற்று காலை வீட்டுக்கு மகன் ராஜா கந்தசாமி வந்தபோது கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்த போது அவரின் தாய், தந்தை உயிரிழந்து சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறினார்.
இதுகுறித்து வெள்ளோடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வயது முதிர்வு காரணமாக கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/an-elderly-couple-committed-suicide-in-house-police-investigating

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக