Ad

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

சீனாவுக்கு மருத்துவ பயிற்சிக்குச் சென்ற தமிழக மாணவன்... திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சோகம்!

புதுக்கோட்டை மாவட்டம் போஸ் நகரைச் சேர்ந்தவர் சையது அபுல்ஹாசன் சாதலி. இவரின் மகன் ஷேக் அப்துல்லா. இவர் சீனாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு முடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே உலக நாடுகள் முழுவதும் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு இருந்ததால், வீட்டிலிருதே ஆன்லைன் மூலமாகவே மருத்துவக் கல்வியை முடித்து தேர்ச்சியும் பெற்றிருந்தார். இந்த நிலையில் தான், அங்குள்ள மருத்துவ பல்கலைகழகத்தில் மருத்துவ பயிற்சிக்காக சமீபத்தில் அழைப்பு வந்திருக்கிறது. இதையடுத்து கடந்த மாதம் 11-ம் தேதி புதுக்கோட்டையில் இருந்து சீனாவுக்கு அப்துல்லா புறப்பட்டு சென்றுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக, சீனாவின் விதிமுறைப்படி 8 நாள்கள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட ஷேக் அப்துல்லா, அதன்பின் பல்கலைக்கழகத்திற்கு சென்றிருக்கிறார். இதற்கிடையே தான், கடந்த வாரம் ஷேக் அப்துல்லாவின் உடல்நிலையில் பிரச்னை ஏற்பட்டு, ஹர்பன் சிட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற அதிர்ச்சி தகவலை பல்கலைக்கழகம் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறது.

சீனாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பதற்றமடைந்த பெற்றோர், மீண்டும் பல்கலைக்கழக நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு மகனின் உடல்நலம் குறித்து விசாரித்து உள்ளனர்.

அப்போது, ஷேக் அப்துல்லாவுக்கு கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை, ஆனால், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். மேலும், ஊரிலிருந்து மருத்துவ செலவுக்கு பணம் அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளனர்.

இதையடுத்து, சையது அபுல்ஹாசன் சாதலி தனது உறவினர்கள், நண்பர்கள் அதுபோக கடன் என ரூ.6,40,000 ஆயிரத்தைத் திரட்டி அங்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்பட்ட, ஷேக் அப்துல்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக சீன பல்கலைக்கழக நிர்வாக தரப்பில் அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த அப்துல்லாவின் பெற்றோர் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றிருக்கின்றனர்.

``மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்னையில் தலையிட்டு இறந்த மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உறவினர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து அப்துல்லாவின் உறவினர்களிடம் பேசினோம்,

``கூலி வேலை பார்த்து கடன் வாங்கி தான் அப்துல்லாவை, சீனாவில் மருத்துவம் படிக்க வச்சாங்க. நல்லா இருந்தவனுக்கு திடீர்ன்னு முடியாம போய் இறந்தது அதிர்ச்சியா இருக்கு. கொரோனா இருந்துச்சான்னு தெரியலை. ஆனா, கல்லீரல், கிட்னின்னு அடுத்தடுத்த பிரச்னைகள் இருந்ததா சொல்றாங்க. அனைத்தும் மர்மமாகவே இருக்குது. சிகிச்சைக்குக் கூட இங்கிருந்து பணத்தை அனுப்பி வச்சிருக்கோம்.

ஆனா, இப்போ அப்துல்லாவின் உடலை, சொந்த ஊருக்குக் கூட கொண்டு வர முடியாத சூழல் தான் இருக்குது. மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு உடனே இறந்த அப்துல்லாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கணும். உயிரிழந்த அப்துல்லாவின் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரண உதவி வழங்கணும்" என்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/a-student-who-went-to-china-for-medical-training-dead

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக