தற்போது பனிக்காலம் நிலவுகிறது. இச்சூழலில் சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இதனால் பாதிக்கப்படுவர். இந்த நிலையில், மழை மற்றும் குளிர்காலங்களில் வயதானவர்களுக்கு வரும் நோய்கள் மற்றும் அவற்றைத் தடுக்கும் முறைகள், அவர்களுக்கான அவசரகால சிகிச்சை முறைகள் பற்றி சென்னையைச் சேர்ந்த தலைமை தீவிர சிகிச்சை மருத்துவர் அஜித்குமாரிடம் கேட்டோம்...
``குளிர்காலத்தில் வயதானவர்களுக்கு வரும் உடல்நல குறைவுகளை, ஆங்கில எழுத்துகளான A முதல் I வரை கொண்டு முறைப்படுத்தலாம். இதில் A என்பது அலர்ஜி, ஆஸ்துமா ஆகும். குளிர்காலங்களில் குளிர்ந்த காற்றை சுவாசிக்கும்போது, அது நமது மூச்சுக்குழாயில் உள்ள `ஹிஸ்டமின்’என்னும் ரசாயனம் சுரப்பதைக் குறைக்கிறது. இதனால் சளி, இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இந்த ரசாயனக் குறைவே அலர்ஜி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு காரணம். இதைத் தடுக்க, வயதானவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். அவர்கள் இருக்கும் அறைகள் தூசி இல்லாத, காற்றோட்டம் உள்ளதாக இருக்க வேண்டும். அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.
குளிர் காலங்களில் மூட்டுவலி
இரண்டாவது, `B’ என்பது Bones (எலும்பு) குறிக்கிறது. பெரும்பாலும் குளிர்காலங்களில் எலும்பு மூட்டுகளில் உள்ள மசகு திரவம் (லுப்ரிகன்ட் ஃப்ளுயிட்) தன்மை மாறி, இறுகிவிடும். இதனால் மூட்டுகளில் வலி ஏற்படும். இதைத் தடுக்க, உடற்பயிற்சி செய்வது சிறந்தது. அடுத்தாக `C' மற்றும் `D' என்பவை கால்சியம் (Calcium) மற்றும் வைட்டமின்- டி ( Vitamin D)ஐ குறிக்கும். வைட்டமின்- டி இருந்தால்தான் உடலில் உள்ள கால்சியம் சத்து அதிகமாகும். குளிர்காலங்களில் சூரிய ஒளி குறைவதாலும் பெரும்பாலான வயதானவர்கள் வீடுகளிலேயே இருப்பதாலும், அவர்களுக்கு வைட்டமின்-டி கிடைப்பதில்லை, போதிய கால்சியம் கிடைப்பதில்லை. இதை அதிகரிப்பதற்கு சத்தான வைட்டமின் டி அதிகமுள்ள உணவுப்பொருள்களை சாப்பிட வேண்டும். பால் மற்றும் இறைச்சி போன்றவற்றில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது.
அடுத்து, `D' என்பது, Depression (மன அழுத்தம்) மற்றும் Dryness (சரும வறட்சி) என்பதைக் குறிக்கும். சூரிய ஒளி என்பது புத்துணர்வு கொடுக்கக்கூடியது. குளிர்காலத்தில் புத்துணர்வு குறையக்கூடும், மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதைத் தடுக்க, குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களது நேரத்தை வயதானவர்களுடன் செலவிட வேண்டும். குளிர்காலங்களில் சருமத்தில் வறட்சி ஏற்படும். அதாவது குளிர்ந்த காற்று நமது சருமத்தில்படும்போது, அதில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். இதனால் சருமத்தில் வறட்சி ஏற்படும். இதற்கு, வயதானவர்கள் இருக்கும் அறையில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி அவசியம்
`E' என்பது, வைட்டமின் ஈ- ஐ குறிக்கும், குளிர்காலத்தில் இது குறையும் என்பதால், வைட்டமின் ஈ அதிகமுள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். 'F' என்பது, Fat அதாவது கொழுப்பைக் குறிக்கிறது. பெரும்பாலும் வயதானவர்கள் குளிர்காலங்களில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வதில்லை. இதனால் அவர்கள் உடலில் உள்ள கொழுப்புச்சத்து அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதைத் தடுக்க, வீட்டிலிருந்தாவது உடற்பயிற்சி செய்வது சிறந்தது. `G' என்பதற்கு கேட்ஜெட்ஸ், குளிர்காலத்தில் உடலில் உள்ள ஈரப்பதத்தை அதிகரிப்பதற்கு அறைகளில் Humidity Fire என்னும் கேஜெட்டை பயன்படுத்தலாம், அதிக அலைவீச்சு உள்ள பொருள்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும்.
`H’ என்பதில் ஹைப்போதர்மியா மற்றும் மாரடைப்பு (Heart Attack) ஆகியவை அடங்கும். ஹைப்போதர்மியா என்பது உடல் வெப்பநிலை தொடர்புடையது. குளிர்காலத்தில் உடலில் உள்ள வெப்பம் குறைவதால் வயதானவர்களுக்கு இது ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும். உடலில் உள்ள கொழுப்புச்சத்து குறைவாக இருந்தால், உடல் வெப்பநிலை மிகவும் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால், வயதானவர்கள் இருக்கும் அறையின் வெப்பநிலை சீராக இருப்பது அவசியம். ஆய்வாளர்களின் கருத்துப்படி குளிர்காலங்களில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இவற்றில் இருந்து வயதானவர்களைப் பாதுகாப்பதற்கு முறையான உணவை வழங்க வேண்டும்.
இறுதியாக `I' என்பது ஊசி ( injection) குளிர்காலத்தில் ஏற்படும் தொற்றுநோய்களுக்கு, முன்னெச்சரிக்கையாகவே உரிய தடுப்பூசிகளைப் போட வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும், கொசு உற்பத்தி அதிகரிக்கும். எனவே மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவக்கூடும். நோய் அறிகுறிகளின் தாக்கம் இருந்தால் மருத்துவரை உடனே அணுகி ஆலோசன பெற வேண்டும்.
நரம்புப் பிரச்சனை
மழைக்காலங்களில் தண்ணீரில் கால் வைத்து வயதானவர்கள் வழுக்கி விழ நேரிடலாம். அந்த நேரத்தில் உடனடியாக அவர்களைத் தூக்கிவிட கூடாது; அவர்கள் சுயநினைவோடுதான் இருக்கிறார்களா என்பதைத் தெரிந்து, அவர்களின் முதுகெலும்புப் பகுதி சரியாக உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். இடுப்புப்பகுதியில் அடிபட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். கீழே விழுந்ததும் தண்ணீரோ அல்லது வேறு உணவோ கொடுக்கக்கூடாது. ஏனெனில், அந்த உணவானது உணவுக்குழாய்க்குச் செல்லாமல் மூச்சுக்குழாயில் சென்றுவிடும் ஆபத்து அதிகம். இதுவே, சர்க்கரைநோய் பாதிக்கப்பட்டவர்கள் என்றால், அவர்களின் சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டியது அவசியம்.
குளிர்காலத்தில் அதிக குளிரால் வயதானவர்களுக்கு நரம்பு பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம். பக்கவாத அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நேரம் கடத்தினால் பாதிப்பு அதிகமாகும். குளிர்கால நோய் பாதிப்புகளைத் தடுக்க, சரியான சீரான ஊட்டச்சத்து மிகுந்த உணவு உட்கொள்ள வேண்டும்.
குளிர்காலத்தில் தாகம் அதிகம் இருக்காது; எனினும் அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம். பொதுவாக குளிர்காலத்தில் செரிமான பிரச்னைகள் இருக்கும். உடற்பயிற்சி செய்வது செரிமானத்திற்கு அதிகம் உதவும். இதில் சர்க்கரைநோய், இதய பிரச்னைகள் உள்ளவர்கள், அவர்களுக்கு ஏற்கெனவே மருத்துவர்கள் கொடுத்த உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும்.
வயதானவர்களுக்கு ஏற்படும் உடல்நலக்குறைவு அல்லது நோய்களின் தீவிரம் அதிகரித்தால் தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது நன்று. மேலும் அவசர நிலைக்காக அருகில் உள்ள மருத்துவமனை தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள மருத்துவரின் எண்களைப் பதிவு செய்து வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
source https://www.vikatan.com/health/healthy/diseases-of-elderly-people-in-winter-prevention-methods
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக