Ad

புதன், 8 மார்ச், 2023

காங்கிரஸின் தொடர் யாத்திரை; பாஜகவின் `மாநிலம் டு மாநிலம்’ பிளான் - சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

``காங்கிரஸின் பாரத் ஜோடோ..."

காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கியது. முதலில் கட்சியை பலப்படுத்துவதற்காகவே இந்த யாத்திரை என அறிவிக்கப்பட்டது. ஆனால் 2024-ம் ஆண்டு தேர்தல் வெற்றியை குறி வைத்து தான் ஜோடோ யாத்திரை மேற்கொள்ளப்பட்டது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.

தாயார் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி

அதன்படி இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் வழியாக 4,080 கி.மீ பயணித்தது. இறுதியாக கடந்த ஜனவரி 30-ம் தேதி ஸ்ரீநகரில் நிறைவடைந்தது.

"இந்தியாவை ஒன்றிணைக்க..."

இதில், ராகுல் காந்தி 12 பொதுக்கூட்டங்கள், 100-க்கும் மேற்பட்ட சிறிய கூட்டங்கள், 13 செய்தியாளர் சந்திப்புகள், 275- க்கும் மேற்பட்ட நடைப்பயிற்சி உரையாடல்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுடன் அமர்ந்து உரையாற்றியிருக்கிறார். இதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

ராகுல் காந்தி

இந்த யாத்திரை துவண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு புத்துணர்வை கொடுக்கும் வகையில் அமைந்தது. அப்போது பேசிய ராகுல்காந்தி, "நான் லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்தேன். அவர்களுடன் பேசினேன். உங்களுக்கு அதைப் புரியவைக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்தியாவை ஒன்றிணைப்பதே யாத்திரையின் நோக்கம்.

"கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி..."

இது நாடு முழுவதும் பரவி வரும் வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிரானது. எங்களுக்கு மிகப்பெரிய பதில் கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இப்படி ஓர் அன்பான பதில் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை" என்றார். இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 24, 25, 26 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் நடந்தது.

காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு

அதில், `தெற்கே குமரியிலிருந்து வடக்கே காஷ்மீர் வரையிலான நடைப்பயணத்தைத் தொடர்ந்து, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய இந்திய ஒற்றுமைப் பயணத்தை ராகுல் காந்தி தொடங்குவார்’ என்றும் அறிவிக்கப்பட்டது.

"பாஜக-வின் 100 பேரணிகள்..."

அதன்படி, அருணாச்சலப்பிரதேசத்தின் பாசிகாட்டிலிருந்து குஜராத்தின் போர்பந்தர் வரை ராகுல் காந்தி நடைப்பயணம் செல்லவிருக்கிறார். இதுதவிர தங்களது கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் நட்பை மேலும் வலுவடைய செய்தல் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது காங்கிரஸ். இந்நிலையில் பாஜகவும் 2024 தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

பாஜக

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக டெல்லி வட்டாரங்கள். ``ஆண்டு இறுதிக்குள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குறைந்தபட்சம் 100 பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் அந்த கட்சியின் தளத்தை விரிவுபடுத்த விரும்பும் மாநிலங்களில் மெகா பட்ஜெட் திட்டங்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களை இலக்காகக் கொண்ட பரப்புரை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

"மெகா பட்ஜெட் திட்டங்கள்..."

மேலும் தென் மாநிலங்கள், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் 160 தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்வதற்கும் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய திட்டங்கள் தொடர்பாக மோடி பேரணிகளில் உரையாற்றுவார். செப்டம்பர் மாதத்திற்குள் பிரசாரம் மேலும் தீவிரம் அடையும்.

மோடி, அமித் ஷா

பாஜக விரிவடைய முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மாநிலங்களில், மத்திய அரசு மெகா பட்ஜெட் திட்டங்களை அறிவிக்கும். முன்னதாக பாஜக பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான வாக்குகளை பெறுவதற்கு தீவிர முயற்சியை தொடங்கியிருக்கிறது.

"பட்டியல் தயாரிப்பு..."

மத்திய திட்டங்கள் குறித்து தீவிரமாக பிரசாரம் செய்யும் வகையில் மக்கள் தொகையில் 30 சதவீதம் அளவுக்கு பெண்கள் அதிகமாக இருக்கும் 10 மாநிலங்களில் இருக்கும் சுமார் 60 மக்களவைத் தொகுதிகள் மற்றும் சிறுபான்மையினர் அதிகமாக உள்ள யூனியன் பிரதேசத்தின் பட்டியலை தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

ஜேபி நட்டா

இங்கு இருக்கும் பாஜக பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்களின் வாக்குகளை குறி வைத்து வாக்கு சேகரிக்கப்படும். மேலும் லோக்சபா தேர்தல் வியூகத்தை இறுதி செய்ய, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா குழு ஒன்றை அமைத்திருக்கிறார்.

"நட்டா அமைத்த குழு..."

இதன்படி மூத்த தலைவர்களான சுனில் பன்சால், வினோத் தாவ்டே மற்றும் தருண் சுக் ஆகிய மூவர் கொண்ட குழு, பல்வேறு அவுட்ரீச் திட்டங்களைக் கண்காணித்து, மாற்றங்களைப் பரிந்துரைத்து, உயர்மட்டத் தலைமைக்கு கருத்துக்களை வழங்கும். மேலும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நட்டா மற்றும் பிற நட்சத்திர பிரச்சாரகர்களுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் பேரணிகளை அவர்கள் பரிந்துரைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம்

இந்தக் குழு ஒட்டுமொத்த கண்காணிப்புப் பொறுப்பில் இருக்கும் அதே வேளையில், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு தனிப்பட்ட மாநிலங்களின் பொறுப்பு வழங்கப்படும். இருப்பினும் ஒவ்வொரு மட்டத்திலும் ஒருங்கிணைப்பு குழு இருக்கும், ஏனெனில் இந்த பல அடுக்குகள் மைக்ரோ-மேனேஜ்மென்ட் செய்யப்படுவதை உறுதிசெய்யும்.

"தென் மாநிலங்களில் சிறப்பு கவனம்..."

அனைத்து நடவடிக்கைகளும் கவனிக்கப்படும். மேலும் தென் மாநிலங்கள் மற்றும் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இது கட்சி மேலும் வலுவடைவதற்கும், அதன் தேர்தல் மேலாதிக்கத்தை உறுதி செய்யவும் உதவும். மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலத்தில் பாஜக தனது அமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தெலங்கானாவில் அதன் வியூகம் வேறுபட்டது.

தமிழகம்

அங்கு மாநில அரசாங்கத்தை அம்பலப்படுத்துவதற்காக களத்தில் உள்ள மக்களுடன் இணைவதற்கான திட்டங்களைத் தவிர, பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த முக்கிய நபர்களை உள்வாங்குவதன் மூலம் அதன் தேர்தல் ஆதரவு தளத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கிறது.

"ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில்..."

அதே நேரத்தில் ஆளுகை அம்சங்களில் மத்திய அரசின் கவனம் அத்தகைய மாநிலங்களில் தீவிரமடையும். தமிழகம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றி பெறுவது என்பதில் கட்சித் தலைவர் உறுதியாக இருக்கிறார்.

ஆந்திரா

கிழக்கு மாநிலங்களான ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், லோக்சபா தேர்தலில் பாஜக அதன் வெற்றியை விரிவுபடுத்த வேண்டும். மேலும் வியூகங்கள் வித்தியாசமாக வகுக்க வேண்டும். பாஜக ஒரு தேர்தல் சக்தியாக வளர நினைக்கும் கேரளாவில், வித்தியாசமான வியூகம் நடைமுறையில் இருக்கும்.

"கேரளாவில் அதிக நிகழ்ச்சிகள்..."

இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தும் வகையில் பொது நிகழ்ச்சிகள் அதிகமாக நடத்தப்படும். அதில் மத்திய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். அதே நேரத்தில், கேரளாவில் இருக்கும் வாக்காளர்களிடத்தில் பிரதமர் மோடியின் கொள்கைகள் சென்று சேர்வதை கட்சி உறுதி செய்யும்.

மேலும் அந்த மாநிலத்தில் புதிய திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது. திரிபுராவில் கட்சி வெற்றி பெற்று, நாகாலாந்தில் பிராந்திய பங்காளியுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த வாரம் பாஜக தலைமையகத்தில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

கேரளா

"மோடியின் ஆரூடம்..."

இதில் பேசிய பிரதமர் மோடி. "வடகிழக்கில் பாஜக மீண்டும் மீண்டும் வெற்றி பெற்றிருப்பதால், அந்தக் கட்சி கிறிஸ்தவ விரோத கட்சி என்ற குற்றச்சாட்டை பொய்யாக்கிவிட்டது. இடதுசாரிகளும், காங்கிரஸும் கைகோர்த்ததை மக்கள் உணர்ந்த பிறகு, கேரளாவிலும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும்" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது" என்றனர். இவ்வாறு காங்கிரஸும்-பாஜகவும் 2024 தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டன. இதனால் நாடளுமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடித்திருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-is-congress-bjps-2024-election-plan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக