Ad

செவ்வாய், 31 ஜனவரி, 2023

`வெண்ணை புட்டு’ முதல் `சுலப ஜாமுன்’ வரை ! - இனிப்பானவர்களுக்கு சில ஸ்வீட் ரெசிபிகள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

இதோ பிப்ரவரி மாதம் பிறந்து விட்டது. பிப்ரவரி மாதம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது காதலர்கள் தினம் .காதல் அழகானது. காதலர்கள் தினம் கொண்டாட காதலன் காதலியாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நம் மனதிற்கு பிடித்த , அப்பா, அம்மா , மாமா, அத்தை, கணவர் ,பிள்ளைகள், உடன்பிறந்தோர், நண்பர்கள், ஆசிரிய பெருந்தகைகள்... இப்படி மனதிற்கு மிகவும் பிடித்தவர்களுக்கு நம் கைகளாலேயே செய்த இனிப்பை கொடுத்து ஹாப்பி வேலண்டைன்ஸ் டே சொல்லலாமா! இனிப்பு என்றவுடன் எதையும் யோசிக்காமல் டக்கென்று என் நினைவுக்கு வந்தது.

நான் திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு வந்த முதல்நாள்... என் கைகளால் நான் செய்து அனைவருக்கும் பரிமாறி, எக்கச்சக்கமான பாராட்டுகளைப் பெற்று தந்த "டபுள் கா மீட்டா"..தான்.

அடி கனமான வாணலியில் நெய்யை காய வைத்து, ஐந்து பிரட் ஸ்லைஸ்களை அதனுள் போட்டு பொரித்து எடுத்தேன். அரை கப் சர்க்கரையில் அரை கப் தண்ணீரை சேர்த்து பாகு வைத்தேன். ஜீராவில் சிறிதளவு சில துளிகள் வெனிலா எசன்ஸ் சேர்த்தேன். பொரித்த பிரட் துண்டுகளை (முக்கோணமாக கட் செய்த) சூடான ஜீராவில் போட்டு லேசாக புரட்டி எடுத்து ஒரு அழகிய ட்ரேயில் அடுக்கி, அதன்மேல் துருவிய பாதாம் ,துருவிய பிஸ்தா, தூவி சிறிதளவு பிரஷ் க்ரீமையும் சேர்த்து பரிமாற... வந்த முதல் நாளே அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டுவிட்டேன்.

இது அனைவருக்கும் மிகவும் பிடித்து போக அடிக்கடி செய்ய ஆரம்பித்தேன்

அதேபோல் அப்போது வந்த(முதல்) வரலட்சுமி நோன்பு அன்று எங்கள் ஊர் ஸ்பெஷலான" வெண்ணை புட்டு"(வெல்லத்தில் செய்தது) செய்ய அதுவும் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான இனிப்பாக மாறியது.

Representational Image

வெண்ணை புட்டு

கால் கிலோ புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். 100 கிராம் கடலைப்பருப்பை நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும். அரை மூடி தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கால் கிலோ வெல்லத்தை பாகாக காய்ச்சவேண்டும். வெல்லப்பாகில் கால் லிட்டர் பாலை ஊற்றி கொதித்து வந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மாவை அதில் கொட்டி நன்கு கிளற வேண்டும்.

மாவு சற்றே வெந்தவுடன் அதில் வேக வைத்த கடலைப்பருப்பு, மற்றும் சிட்டிகை உப்பு சேர்க்கவும். முழுவதுமாக வெந்தவுடன் அதில் துருவிய தேங்காய், சிட்டிகை ஏலக்காய் பொடி தூவி இறக்கவும். ஒரு பெரிய அகலமான தட்டு எடுத்து அதில் 100 கிராம் வெண்ணெயைத் தடவி கலவையைக் கொட்டி ஆறிய பின் பரிமாற வாயில் போட்டால் கரையும் இந்த வெண்ணெய் புட்டு.

நான் செய்யும் இன்னொரு வித்தியாசமான இனிப்பு 'பூசணி விதை கீர்'.

ஒரு கப் பூசணி விதையை ( தோல் நீக்கியது) நான்கு மணி நேரம் ஊற விட்டு பிறகு சொரசொரப்பான தரையில் மெதுவாக தேய்த்து அதன் தோலை நீக்கி நன்கு கழுவி விட்டு  அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் வெள்ளரி விதையையும் சேர்த்து (லேசாக நீர் தெளித்து)நைசாக அரைத்துக் கொள்வேன்..

அரைத்த விழுதை இரண்டு கப் பால், ஒரு கப் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி,10 நிமிடம் கழித்து இறக்க ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடும் பதத்தில் கீர் தயாராகிவிடும். ( சற்று கெட்டியாக இருக்கும் இந்த கீர்.) என்ன கீர் என்று சொல்ல முடியாத அளவுக்கு சுவையில் பிரமாதமாக இருக்கும்.  எங்கள் வீட்டு விருந்துகளில் தவறாமல் இடம்பெறும் கீர் இது!

பாசந்தி

இதோ வித்தியாசமான சுவையில் ஒரு பாசந்தி..

வெள்ளை முள்ளங்கி, கேரட் ,தலா இரண்டுஎடுத்து மிகவும் பொடியாக நறுக்கி, வேகவைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். 50 கிராம் பாதாம் பருப்பை வெந்நீரில் ஊற வைத்து, தோலை நீக்கி அதனுடன் 10 முந்திரி பருப்பையும் சேர்த்து, சிறிதளவு பால் விட்டு அரைக்கவும்.

இதை 50 கிராம் பால்கோவாவுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். அடி கனமான வாணலியில் ஒரு டம்ளர் பால் விட்டு, நன்கு கொதித்ததும் வேக வைத்து மசித்த காய்கறி மற்றும் 200 கிராம் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடம் வேக விடவும்.(இனிப்பு அதிகம் தேவைப்படுவோர் சற்று சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்) பின்பு அரைத்த விழுதை அதில் சேர்த்து நன்கு கிளறவும்.

அவ்வப்போது நெய் விட்டு கிளறவும். கெட்டி பதத்துக்கு வந்ததும் இறக்கி , தேவையான அளவு சாரை பருப்பை தூவி அப்படியே சூடாகவோ அல்லது பிரிட்ஜில் வைத்து ஜில்லென்றோ பரிமாறவும். சுவையில் அசத்தும் இந்த பாஸந்தி.

ஜாமுன்

சுலப ஜாமுன்

ஒரு கப் பனீர் துருவலுடன், இனிப்பில்லாத கோவா அரைக்கப் ,ஒரு டீஸ்பூன் மைதா ,சிட்டிகை சமையல் சோடா தேவையான அளவு நெய் சேர்த்து நன்கு பிசைந்து அதை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருட்டிய உருண்டைகளை மிதமான தீயில் நாலு ,ஐந்தாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பாத்திரத்தில் ஒன்றரை கப் சர்க்கரையுடன் நீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் .பாகுபதம் வந்தவுடன் இறக்கி அதில் (விருப்பம் எனில்) வெண்ணிலா எசன்ஸ் அல்லது பாதாம் எசன்ஸ் சில துளிகள் சேர்க்கலாம். அல்லது ஏலக்காய் தூள்சிட்டிகை சேர்த்து பொரித்த ஜாமுன்களை அதில் போட்டு ஊற விட்டு பரிமாறவும்....

காதலர் தின மாதமான இந்த மாதத்தில் இதுபோல் வித்தியாசமான சுவையான இனிப்பு ரெசிபிகளை நீங்களே உங்கள் கைகளால் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள். நீங்களும் மகிழ்ச்சியுடன் இருங்கள்.

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-of-few-sweet-recipes

Doctor Vikatan: சிறுநீரகக் கற்களைக் கரைக்குமா நெருஞ்சில் முள் பொடி?

Doctor Vikatan: சிறுநீரக கற்கள் உள்ளவர்கள், நெருஞ்சில் முள் பொடி சாப்பிட்டால் கல் கரையும் என்கிறார்களே... உண்மையா? அதை எப்படி, எவ்வளவு சாப்பிட வேண்டும்? வாழைத்தண்டு சாறு குடித்தால் சிறுநீரக கல் கரையுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி | சென்னை

சிறுநீரகக் கற்களைக் கரைப்பதில் நெருஞ்சில் முள் கஷாயம் நிச்சயம் உதவும். ஆனால் அது மட்டுமே தீர்வாகும் என நினைக்க வேண்டாம். சிறுநீரகங்களில் கற்கள் இருந்தால், சித்த மருத்துவரை சந்தித்து, கற்களின் அளவு, அது எந்த மாதிரியான கல் என்பதையெல்லாம் பார்த்து அதற்கேற்ப மருத்துவர் பரிந்துரையின் பேரில் சிகிச்சை எடுக்க வேண்டும்.

கல்லின் அளவு மற்றும் தன்மைக்கேற்ப கூடுதலாக சில சிகிச்சைகள் தேவைப்படும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.

நெருஞ்சில் முள் சாதாரணமாக நிலங்களில் காணப்படுவதுதான். வெறும் கால்களில் நடக்கும்போது இந்த முள் குத்திய அனுபவம் பலருக்கும் இருக்கும். சிறுநீரகக் கற்களின் அளவு பெரிதாக இருக்கும்போது முதலில் அவற்றை உடைக்க வேண்டும். பிறகு வெளியே தள்ள வேண்டும். நெருஞ்சில் முள் கஷாயத்துக்கு சிறுநீரைப் பெருக்கும் ஆற்றல் உண்டு.

சிறுநீரகக் கற்கள் இருந்தால் சிறுநீர்த் தொற்றும் வரும். அந்தத் தொற்று வராமல் தவிர்க்கவும் நெருஞ்சில் முள் உதவும். சிறுநீரகக் கற்களால் ஏற்படும் தொற்று, தொற்று இருப்பவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் இருப்பது என இரண்டுக்கும் இது உதவும். சிறுநீரகச் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தக் கூடியதும்கூட.

சிறு நெருஞ்சி

நெருஞ்சில் முள் பொடியை 10 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். அதை 200 மில்லி தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். எப்போதுமே கஷாயங்களை சிறுதீயில்தான் கொதிக்க வைக்க வேண்டும். அது 50 மில்லியாக வற்றியதும் வடிகட்டிக் குடிக்கலாம். நெருஞ்சிலுடன் ஓமம் மற்றம் சீரகம் தலா 5 கிராம் சேர்த்துக்கொள்ளலாம். விரும்பினால் தனியாவும் 5 கிராம் சேர்த்துக்கொள்ளலாம். இதை வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. வெறும் வயிற்றில் கஷாயம் குடிப்பது ஏற்றுக்கொள்ளாது என்பவர்கள், சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்துக் குடிக்கலாம்.

இதையே உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம். பச்சரிசியைக் கொதிக்கவைத்து, அதில் சீரகம், சின்ன வெங்காயம், நெருஞ்சில் முள் போன்றவற்றை துணியில் மூட்டையாகக் கட்டி கஞ்சியோடு சேர்த்துக் கொதிக்க வைப்பார்கள். கொதித்ததும் அந்த மூட்டையை அகற்றிவிடுவார்கள். பிறகு அந்தக் கஞ்சியைக் குடிக்கலாம்.

சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீரகத் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்க வேண்டும். வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை உண்டு. ஆனால் நெருஞ்சில் முள் அளவுக்கு அது பலன் தராது. வாழைத்தண்டு சாற்றை அடிக்கடி குடிக்கக்கூடாது. நம் உடலில் சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் ஓரளவுக்கு இருக்க வேண்டும்.

சிறுநீரகக் கற்கள்

இவை குறைந்தாலும் பிரச்னை, கூடினாலும் பிரச்னை. அடிக்கடி வாழைத்தண்டு சாறு குடிக்கும்போது இந்தச் சத்துகளின் அளவில் மாற்றங்கள் ஏற்படலாம். அதன் விளைவாக தசைவலி வரலாம். அதனால் மருத்துவ ஆலோசனையோடு வாரத்துக்கு 2 நாள்கள் மட்டும் இதைக் குடிக்கலாம். வாழைத்துண்டு சாற்றுக்கு பதில், வாழைக்கிழங்கைத் தோண்டி எடுத்து அதன் தண்ணீரை அடிக்கடி குடிப்பது பலன் தரும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-kidney-stones-issues

கொலை முயற்சி வழக்கில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு - வழக்கின் பின்னணி என்ன?!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், ஆறுமுகநேரி நகர தி.மு.க செயலாளராக இருந்தார். இவரை கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி காலை 11.15 மணியளவில் ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் வைத்து, சிலர் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றனர். இது தொடர்பாக ஆறுமுகநேரி காவல் நிலையப் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  தற்போதைய மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும்,  அப்போதைய திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும்  இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில்தான் தன்னைக் கொலை செய்ய முயன்றதாக சுரேஷ் வாக்குமூலம் அளித்தார்.

அனிதா ராதாகிருஷ்ணன்

அதன் அடிப்படையில், இந்த வழக்கில்  அனிதா ராதாகிருஷ்ணன் 7-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசி என்ற சசிகுமார், மணிகண்டன், ஆல்நாத் ஆகிய மூவரும் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பே உயிரிழந்து விட்டனர். எனவே, பாலா என்ற பாலகிருஷ்ணன், கோபி, குமார் என்ற உதயகுமார், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீது தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இதே போல் கடந்த 21.05.2011 அன்று இரவு 10.15 மணியளவில் சுரேஷின் கட்சி அலுவலகத்தை பெட்ரோல் குண்டு வீசி எரித்துச் சேதப்படுத்தியதாக, அதே நாளில் இரவு 11.30 மணியளவில் சுரேஷுக்குச் சொந்தமான டாஸ்மாக் அருகில் இயங்கி வந்த  பாரில் வெடிகுண்டு வீசியதாகவும் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், பாலா என்ற பாலகிருஷ்ணன், கோபி, குமார் என்ற உதயகுமார், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த இரு வழக்குகளும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த மூன்று வழக்குகளிலுமே, ”அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்தில் கிடையாது. சதி செய்ததாகவே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்குகளில் அத்துடன் அனைவரது மீதான குற்றச்சாட்டுகளும் நிருபிக்கப்படவில்லை” எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குருமூர்த்தி உத்தரவிட்டார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது அமைச்சராகவும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.கவின் செயலாளராகவும் உள்ளார். இதேபோல், 2 வழக்குகளில் முதல் எதிரியாக சேர்க்கப்பட்ட கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து அ.தி.மு.க வேட்பாளராகப்  போட்டியிட்டவர். அவர் தற்போது அதிமுகவில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/minister-anita-radhakrishnan-released-from-attempted-murder-case

ஒன் பை டூ: “பிபிசி ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடைவிதித்தது சரியா?”

கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், சி.பி.எம்

``அரசுக்கு எதிரான கருத்துகளை, நாட்டுக்கு எதிரான கருத்து என்று பேசுவது, அதைத் தடை செய்வது என  ஜனநாயகத்துக்கு எதிரான வேலைகளைத் தொடர்ந்து செய்துவருகிறது  மோடி அரசு. அவசரகால நிலையை நடைமுறைக்குக் கொண்டுவந்து, பிபிசி ஆவணப்படத்தைத் தடை செய்திருப்பது அதன் தொடர்ச்சிதான். ‘எல்லையைப் பாதுகாக்கக் கூட துப்பில்லாத அரசு’ என்று சொன்னால்,  ‘அய்யோ நம் ராணுவ வீரர்களை அவமானப்படுத்திவிட்டார்கள்’ என்று பிரச்னையை திசை திருப்புபவர்கள்தான் பா.ஜ.க-வினர். அதே பாணியில், சிறுபான்மையினரை திட்டமிட்டுக் கொன்று குவித்த இவர்களது குஜராத் குரூரத்தை அம்பலப்படுத்திய ஆவணப்படத்தை, ‘இது இந்தியாவுக்கு எதிரான படம்’ என்கிறார்கள். ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படம் வந்தபோது, அதைப் பொதுமக்கள் பார்க்க வேண்டும் என்று விடுமுறை அளித்தார்கள், வரிவிலக்கு தந்தார்கள். வீதிதோறும் அந்தப் படத்தைக் காட்சிப்படுத்தினார்கள். இவர்களுக்குப் பயனளிக்கிற பிரசாரப் படம் என்றால் ஆதரவு தருவார்கள்... இவர்களின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் ஆவணப்படம் என்றால் தடைவிதிக்கிறார்கள். உண்மையில், இந்தத் தடையின் காரணமாக இன்று உலக அளவில் பிபிசி ஆவணப்படம் பேசுபொருளாகியிருக்கிறது. எதிர்ப்புகளே இல்லாத நிலையை உருவாக்கவும், எதிர்ப்பவர்களை அடியோடு அழிக்கவும் நினைக்கும் பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி, `India: The Modi Question’ எனும் ஆவணப்படத்திலிருந்து தொடங்குகிறது.

கனகராஜ், கரு.நாகராஜன்

’’கரு.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

``பிபிசி-யின் உள்நோக்கம்கொண்ட ஆவணப்படத்தைத் தடைசெய்தது முழுக்க முழுக்க சரிதான். பொருளாதார வளர்ச்சியில் இந்தியா பிரிட்டனை மிஞ்சும் அளவுக்கு வளர்ந்துகொண்டிருக்கிறது. ஜி20 மாநாட்டுக்குத் தலைமையேற்கும் நிலையை அடைந்திருக்கிறது. இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத அந்நிய சக்திகள் திட்டமிட்டு உருவாக்கியதுதான் இந்த ஆவணப்படம். பிபிசி அவர்கள் நாட்டில் நடக்கும் தவறுகளைக் குறித்து ஆவணப்படம் வெளியிடட்டும். யார் வேண்டாம் என்று சொல்வது... இந்த ஆவணப்படத்தைப் பிரதமருக்கு எதிரானதாக மட்டும் பார்க்கக் கூடாது. இது இந்தியாவுக்கு எதிரானது. இங்குள்ள கம்யூனிஸ்ட்டுகள் இந்தப் படத்துக்குத் தடைவிதிக்கக் கூடாது என்பதிலிருந்தே புரிந்துகொள்ள வேண்டாமா... காஷ்மீரில் பிரிவு 370 ரத்துசெய்யப்படுவதற்கு முன்பு அங்கு 58,000 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒரு போரில்கூட இத்தனை ஆயிரம் பேர் கொல்லப்படுவார்களா என்பது சந்தேகம்தான். காங்கிரஸ் மறைத்துவைத்திருந்த விவகாரத்தை ஒரு கலைஞன், `காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று படமாக எடுத்தார். அதை இந்த நாடே வரவேற்றுப் பார்த்தது. அதையும் இதையும் ஒப்பிட்டுப் பேசுவதே தவறு. 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு நம் பாரதப் பிரதமருக்கு எதிராகச் சில தீயசக்திகளும், தீவிரவாத சக்திகளும் கைகோத்துக்கொண்டு இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தவே இந்த ஆவணப்படத்தை பகிரங்கமாக ஆதரிக்கிறார்கள்.’’



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-banned-bbc-documentary-in-india

01. 02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February - 01 | புதன்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/01022023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

திங்கள், 30 ஜனவரி, 2023

``குடிப்பதை விட்டுவிட்டேன்... ஆனால், அந்தப் பழக்கத்தை மட்டும் விடமுடியவில்லை’’ வருத்தப்பட்ட தீபக்!

நம் நாட்டில் வங்கித்துறை தொடர்பானவர்களுக்கு தீபக் பரேக் பற்றி தெரியாமல் இருக்க முடியாது. ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் (HDFC) தலைவரான அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது தனிப்பட்ட அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது...

ஹெச்.டி.எஃப்.சி வங்கி - சித்திரிப்பு படம்

``என் வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ்வதற்கான விதிகள் பலவற்றையும் மீறியுள்ளேன். கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவும் மது பானம் குடித்து அனுபவித்திருக்கிறேன். ஆனால், 2021-ம் டிசம்பரில் எனக்கு கோவிட்-19 வந்து, அதனுடன் போராடியபோது நான் மதுவின் மீது இருந்த ஆர்வத்தை இழந்தேன். இப்போது என் நண்பர்கள் மது குடிக்கும்போதுகூட, நான் எலுமிச்சை பானத்தை மட்டுமே குடிக்கிறேன்’’ என்று சொல்லி இருக்கிறார் தீபக் பரேக்.

78 வயதான் தீபக் பரேக் மதுப் பழக்கத்தை கைவிட்டாலும், அவர் கைவிட நினைத்து, இன்று வரை அதைச் செய்ய முடியாத பழக்கம் ஒன்று உள்ளதாகவும் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். அது என்ன பழக்கம்.

Sudoku

``ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு முன், சுடோகு விளையாடுவதை மட்டும் என்னால் கைவிடவே முடியவில்லை. ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு சில நிமிடங்கள் `சுடோகு’ விளையாடுவதன் மூலம் என் மூளை கூர்மையாக வைத்திருக்க முடிகிறது. என் மனம் ரிலாக்ஸ்டாக மாறுவதற்கு இந்த சுடோகு கணக்குப் போடுவது உதவியாக இருக்கிறது” என்று சொல்லி இருக்கிறார் தீபக் பரேக்.

78 வயதான தீபக் பரேக் தற்போது ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி இடையேயான மெகா இணைப்பு சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். ``இந்த இணைப்பு சுமுகமாக நடந்து முடிந்தால், நான் கால் நீட்டி சுகமாக ஓய்வெடுப்பேன்’’ என்று சொல்லி இருக்கிறார்!

ஹெச்.டி.எஃப்.சி வங்கியை தீபக் பரேக் வெற்றிகரமாக நடத்தியதற்குக் காரணம், இந்த சுடோகுதானா?



source https://www.vikatan.com/business/finance/i-gave-up-drinking-but-i-couldnt-just-give-up-that-habit-said-deepak

சிவசேனா: முடிந்தது விசாரணை; வில் அம்பு சின்னம் யாருக்கு? - முடிவுக்காக காத்திருக்கும் உத்தவ், ஷிண்டே

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா இரண்டாக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. இரு அணிகளும் தங்களது பிரிவுதான் உண்மையான சிவசேனா என்று கூறி வருகின்றன. இது தொடர்பாக இரு அணிகளும் தேர்தல் கமிஷனையும் அணுகி இருக்கிறது. அவர்களின் மனுக்களை ஆய்வு செய்த தேர்தல் கமிஷன், அம்மனுக்கள் மீது இறுதி முடிவு எடுக்கப்படும் வரை தற்காலிகமாக இரு அணிகளுக்கும் தனிப்பெயர் மற்றும் சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதோடு இரு தரப்பினரும் தங்களிடம் இருக்கும் ஆதரவாளர்கள் பற்றிய விபரங்களை தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டது.

அதன் அடிப்படையில் ஏற்கனவே இரு தரப்பினரும் தங்களது தரப்பில் இருக்கும் ஆதரவாளர்கள் பட்டியல் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தனர். அதோடு இரு தரப்பினரின் வழக்கறிஞர்களும் தேர்தல் கமிஷன் முன்பு ஆஜராகி தங்களது தரப்பு வாதத்தை எடுத்து வைத்திருந்தனர். இதையடுத்து இறுதியாக வேறு எதாவது ஆவணங்கள் இருந்தால் ஜனவரி 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டிருந்தது.

அதன் அடிப்படையில் நேற்று மாலையில் உத்தவ் தாக்கரே தரப்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் அனில் பரப் தலைமையிலான தலைவர்கள் தேர்தல் கமிஷனுக்கு சென்று ஆவணங்களை தாக்கல் செய்தனர். ஏக்நாத் ஷிண்டே தரப்பில் அக்கட்சியின் எம்.பி.ராகுல் ஷெவாலே தலைமையில் வந்து மாலை 5 மணிக்கு பிறகு தாக்கல் செய்தனர். இது உத்தவ் தாக்கரேயின் அனில் பரப் கூறுகையில், ``சிவசேனாவின் கட்டமைப்பு இன்னும் உத்தவ் தாக்கரேயிடம் தான் இருக்கிறது. சில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தான் வேறு அணிக்கு சென்று இருக்கின்றனர். எங்களிடம் பெரும்பாலான நிர்வாகிகள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

3 லட்சம் நிர்வாகிகளின் கடிதம், 20 லட்சம் தொண்டர்களின் கடிதங்களையும் தாக்கல் செய்திருக்கிறோம். சிவசேனாவின் சட்டத்தில் தலைமை தலைவர் என்ற ஒரு பதவியே கிடையாது. எனவே ஷிண்டேயின் தலைமை தலைவர் என்ற பதவி செல்லுபடியாகாது” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏக்நாத் ஷிண்டேயின் ராகுல் ஷெவாலே எம்.பி. அளித்த பேட்டியில், ``தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் தான் கட்சி அங்கீகரிக்கப்படுகிறது. எங்களது அணியில், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இருப்பதால் எங்களது அணியைத்தான் உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்கவேண்டும். இது குறித்து தேர்தல் கமிஷனில் தெரிவித்திருக்கிறோம். தாக்கரே சிவசேனாவின் சட்டத்தில் மாற்றம் செய்திருக்கிறார். இது குறித்து தேர்தல் கமிஷனில் தெளிவாக தெரிவித்திருக்கிறோம். 4 தலைவர்கள், 6 துணைத்தலைவர்கள், 13 எம்.பி.க்கள், 40 எம்.எல்.ஏ.க்கள், 49 ஜில்லா பிரமுக், 87 விபாக் பிரமுக் ஆகியோரின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

சிவசேனா

ஆனால் உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தகவலில், சிவசேனாவின் சட்டப்படி மும்பையில் உள்ள விபாக் பிரமுகர்கள் 12 பேர் மட்டுமே தேசிய செயற்குழு உறுப்பினர்கள் ஆவர். ஆனால் ஷிண்டே தரப்பினர் அவர்களாகவே வேறு மாவட்டங்களில் 87 பேரை விபாக் பிரமுக்காக நியமித்து அவர்களை தங்களது ஆதரவாளர்கள் என்று கூறுகின்றனர். மொத்தமுள்ள 281 நிர்வாக குழு உறுப்பினர்களில் 170 பேர் தங்களை ஆதரிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர். இறுதியாக உத்தவ் தாக்கரே தரப்பில் 124 பக்க ஆவணங்கள் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் தங்களது தரப்பு விளக்கத்தை கொடுத்துவிட்டு தேர்தல் கமிஷன் முடிவுக்காக காத்திருக்கின்றனர். தேர்தல் கமிஷன் ஓரிரு நாள்களில் தங்களது முடிவை அறிவிக்கும் என்று தெரிகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலுக்கு இச்சின்னம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.



source https://www.vikatan.com/news/politics/who-gets-shiv-senas-bow-and-arrow-symbol-trial-over-uddhav-shinde-awaiting-verdict

திருநர்களின் மனநலத்தை மேம்படுத்த உதவும் ஹார்மோன் தெரபி: புதிய ஆய்வு சொல்வது என்ன?

பாலினத்தை உறுதிப்படுத்தும் ஹார்மோன் தெரபியை, திருநர்கள் இரண்டு ஆண்டுகள் மேற்கொள்வதன் மூலம் அவர்களின் மன அழுத்தம், கவலை குறைந்து, வாழ்க்கையை அமைதியுடன், மன நிறைவுடன் வாழ வழிவகுப்பதாக புதிய ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வறிக்கையானது, நியூ இங்கிலாந்து ஜேர்னல் ஆஃப் மெடிசின் ( New England Journal of Medicine) என்னும் இதழில் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த ஆய்வுக்காக 12 முதல் 20 வயதுக்குட்பட்ட 315 இளவயது திருநர்களுக்கு பாலினத்தை உறுதிப்படுத்தும் ஹார்மோன் தெரபி அளித்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் சராசரியானோர் 16 வயதுடைய திருநர்கள் ஆவர்.

திருநர்

இந்த ஆய்வில் ஈடுபட்டவர்கள் சிகாகோ, பாஸ்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளுடன் தொடர்புடைய மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர் குழு. இந்த ஆய்வுக்கு யூனிஸ் கென்னடி ஸ்ரீவர் தேசிய குழந்தைகள் நலம் மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனமானது மானியம் வழங்கி ஆதரவளித்துள்ளது.

திருநர்கள் தங்கள் வெளிப்புறத் தோற்றம் எவ்வாறு தங்கள் பாலினதின் அடையாளத்தோடு ஒத்துப்போகிறது என்பதை உணர்ந்து கொள்ளும் வகையில் ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் மனஅழுத்தம், கவலை, நேர்மறையான உணர்ச்சிகள் , வாழ்க்கையின் மீது எந்தளவுக்கு திருப்தியோடு இருக்கின்றனர் என்பதை அளவீடு செய்திருக்கின்றனர். ஹார்மோன் தெரபி மூலம், சராசரியாக நேர்மறையான உணர்ச்சிகள், வாழ்க்கையின் மீதான திருப்தி அதிகரித்துள்ளதாகவும், அதோடு மனஅழுத்தம் மற்றும் கவலை குறைந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் , ``இந்த ஹார்மோன் தெரபி திருநர் மற்றும் non-binary எனப்படும் பாலின அடையாளத்தை ஆண், பெண் என உறுதிசெய்து முடியாத சூழலில் இருப்போருக்கு பயனுள்ளதாக இருக்கும். பிறக்கும்போது இருக்கும் பாலினத்திலிருந்து, பூப்படையும்போது ஏற்படும் உடல் மற்றும் மனநல மாற்றங்களின் வேறுபாடுகளை உணரவும் இது வழிவகுக்கும்.

மேலும் இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 24 பேர் மட்டுமே பூப்படைவதற்கு முன்பு ஹார்மோன் மாற்று சிகிசிச்சைகள் செய்துள்ளனர். அவர்களுக்கு மற்றவர்களை விட நேர்மறையான உணர்ச்சிகள், வாழ்க்கையின் மீதான திருப்தி ஆகியவை அதிகரித்துள்ளது. அதோடு மனஅழுத்தம் மற்றும் கவலை குறைந்துள்ளது" என்றனர்.

பாலினம்

இந்த வேறுபாடுகள் குறித்து அவர்கள் தங்களது ஆய்வறிக்கையில், ``ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுடன் தொடர்புடைய அளவில் மார்பகங்களின் மாற்றம் மற்றும் ஒருசில உடலளவிலான மாற்றங்கள் நிகழ 2 முதல் 5 வருடங்கள் ஆகலாம். அடுத்ததாக டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் உந்துதலால் ஏற்படும் கடினமான குரல் ஆகியவை திருநங்கைகளுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் செலுத்தப்படும்போது மாறுபடலாம். மனஅழுத்தம் , கவலை ஆகியவை திருநம்பிகளை விட திருநங்கைகளுக்கு தான் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு காரணம் சமுதாயத்தில் அவர்களை குறைந்த விழுக்காடு மக்களே ஏற்றுக்கொள்வது தான்" என்று தெரிவித்துள்ளனர்.



source https://www.vikatan.com/social-affairs/women/hormone-therapy-to-improve-mental-health-of-transgender

``ரெண்டு சிசேரியன், 108 கிலோ எடை இருந்தேன்!’’ - பாடிபில்டராக சாதிக்கும் மதுரை பெண் வெரோனிகா

`` `வாழ்க்கையில எந்த நொடி ஆச்சர்யங்கள சுமந்து வச்சுருக்கும்னு யாருக்கும் தெரியாது. அதுவரைக்கும் நாம காத்திருக்கிறோமாங்கிறது தான் ரொம்ப முக்கியம்’ - பத்து வருஷத்துக்கு முன்ன யாராச்சும் என்கிட்ட இப்படி சொல்லி இருந்தா, அதை நம்பிருப்பேனானு தெரியல. ஆனா எனக்கான ஆச்சர்யங்கள் எல்லாமே என்னோட 38 வயசுக்கு அப்புறம்தான் நடந்துச்சு, அதுக்கு நானே சாட்சி..." - நம்பிக்கையும் உற்சாகமும் நிறைந்து பேச தொடங்குகிறார் வெரோனிகா. மதுரையைச் சேர்ந்த பெண் பாடிபில்டர். 2022-ம் ஆண்டு ஆசிய அளவில் நடந்த பாடிபில்டர் போட்டியில் ஆறாம் இடத்தை பிடித்தவர்.

பாடிபில்டர் வெரோனிகா

யார் இந்த வெரோனிகா?!

’’நான், இந்த தலைமுறைக்கான ஆள் இல்ல. சுடிதார் போட்டாலே ஏற இறங்க பார்க்குற தலைமுறையில, பாவாடை சட்டை மட்டுமே போட்டு வாழ்ந்த சராசரி மதுரை பொண்ணு. பள்ளிக்கூடம், பள்ளிக்கூடம் விட்டா வீடுன்னு, அப்பா, அம்மா ரெண்டு தங்கச்சிகளோட ரொம்ப சாதாரண குடும்பம். படிக்கிற காலத்துல கூட ஸ்போர்ட்ஸ்ல விருப்பமோ, தேடுதலோ இருந்தது இல்ல. வீட்டுல மூணு பேருமே பொண்ணுங்க அப்படீங்கிறதால மதுரைய தாண்டி எங்கேயும் கூட போனது இல்ல.

இப்படிப்பட்ட சூழல்ல வளர்ந்த எனக்கு எல்லா பொண்ணுங்கள போலவே கல்யாணமும் நடந்தது. ரெண்டு குழந்தைகளையும் சிசேரியன் பண்ணிதான் எடுத்தாங்க. எல்லோருக்கும் இருக்குற பிரச்னை போலவே எனக்கும் உடல் எடை அதிகமாக ஆரம்பிச்சது. கொஞ்சம் கொஞ்சமா ஏறுன எடை 108 கிலோ வரைக்கும் போயிருச்சு. அதே நேரத்துல அப்பாவோட மரணம், குடும்ப வாழ்க்கையில சிக்கல்னு மனதளவுல இன்னமும் உடைஞ்சு போயிருந்தேன்.

மனசும் சரியில்லை, உடம்பும் சரியில்லைனா ஒரு விரக்தியும் வெறுப்பும் வாழ்க்கையில உண்டாகும் இல்லையா? அது எனக்கும் உண்டாச்சு. ஆனா இது மட்டுமே வாழ்க்கை இல்லையேன்னுதான் என்னோட 38வது வயசுல ஜிம்முல சேர முடிவு பண்ணுனேன். சுத்தி இருந்த சொந்தக்காரங்க எல்லாரும் கிண்டல் பண்ணினாங்க. ஆனா அது எதுவும் எனக்கு எதையும் கொண்டு வந்து சேர்க்கப் போறதும் இல்ல, என்கிட்ட இருந்து எதையும் எடுத்துட்டுப் போகப்போறதும் இல்லைங்கிற மனநிலையில தான் ஒர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சேன்.

எந்த எக்ஸ்ட்ரா மருந்துகளும் எடுத்துக்காம இயற்கையான உணவுப் பழக்கவழக்கத்திலேயே ஆறே மாசத்துல எடை குறைய ஆரம்பிச்சேன். அது எனக்கு ரொம்பவே தைரியத்தையும் நம்பிக்கையையும் குடுத்துச்சு. எடை குறைக்கத்தான் ஜிம்முக்கு போனேன். அதுவே ஒரு போதை மாதிரி ஆகி பாடிபில்டிங் பண்ணலாம்னு ஆசைய உண்டு பண்ணுச்சு. இப்படித்தான் ஆரம்பிச்சது என் பாடிபில்டர் பயணம்.’’

பாடிபில்டர் வெரோனிகா

ஆனாலும் நிறைய சவால்கள் இருந்துருக்கும் தானே?

’’நிச்சயமா. நான் சேலை கட்டி தலை நிறைய பூ வெச்சுக்கிற பொண்ணு. ஜிம்ல சேர்ந்த பிறகு இந்த சமூகத்தை எதிர்கொள்ள எனக்கு நிறைய தைரியம் தேவைப்பட்டுச்சு. முதல் ஸ்டேஜ் ஏறும்போது மொட்டையடிச்சுக்கிட்டேன். ஸ்லீவ்லெஸ்ல நிக்கிறதுக்கே எனக்கு அவ்வளவு கூச்சமா இருந்துச்சு. உடல் என்பது ஒரு போகப்பொருள் இல்லைன்னு எனக்குள்ள நான் உணர்ந்துக்கிறதுக்கே நிறைய அவகாசம் தேவைப்பட்டது. இது எல்லாத்தையும் மீறி நின்னதுக்கு காரணம் அவமானங்களும் கேலிகளும் தான். சொல்லப்போனா, ஒரு வகையில அந்த அவமானங்களும் கேலியும்தான் எனக்கு உந்துசக்தி.’’

மத்த விளையாட்டுகளைவிட பாடிபில்டிங்கை தேர்வு செய்ய பெண்கள் காட்டுற தயக்கம் குறைஞ்சிருக்கா?

’’பெண்கள் கல்யாணம் வரைக்கும் பெத்தவங்களுக்காகவும், கல்யாணத்துக்கு அப்புறம் குழந்தை மற்றும் கணவனுக்காகவும்னு வாழுறாங்க. தனக்குனு எதுவுமே இல்லாம, எதையுமே விரும்பாம தியாகம் பண்ணிடுறாங்க. இப்படியான சமூக சூழல்ல அவங்க இந்த பாடிபில்டிங்குக்கு வர்றது ரொம்ப சவாலான விஷயம். பாடிபில்டிங் விடுங்க, தன் உடல் ஆரோக்கியத்துக்காக நார்மல் உடற்பயிற்சிகள் செய்றதுக்காவது பெண்கள் முன்வரணும். கல்யாணத்துக்கு அப்புறம் உணவு, ஆரோக்கியம்னு எதுலயுமே பெருசா கவனம் எடுத்துக்க மாட்டேங்குறாங்க. அது மாறணும்.’’

பாடிபில்டர் வெரோனிகா

உங்களுக்கு கிடைச்ச குடும்ப ஆதரவு பத்தி?

’’சிங்கிள் மதரா, ரெண்டு குழந்தைகளை நான்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். குடும்ப வன்முறையில் நான் அனுபவிச்ச வலிகள் எல்லாமே அவங்களுக்கு தெரியும். என்கிட்ட அவங்க சொன்னது, ’அம்மா உங்களுக்கு சந்தோஷம் தர்ற விஷயம் எதுனாலும் நீங்க பண்ணுங்க, நாங்க கூட இருப்போம்’ என்பதுதான். என் பையனும் பொண்ணும் இந்த பாடிபில்டிங்ல இருக்கணும்னு ஆசைப்படுறேன். ஆனா அவங்க கனவு என்னனு பொறுத்திருந்து பார்ப்போம்.’’

போட்டிகளுக்குத் தயாராகுறதுக்கான பொருட்செலவு எல்லாம்..?

’’என்னோட தினசரி வாழ்க்கைங்கிறது காலையில 5 மணிக்குத் தொடங்கிரும். பசங்கள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, ஜிம்முக்கு டிரையினர் வேலைக்குப் போயிருவேன். சாயங்காலம் பெர்சனல் டிரைனராவும் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன். இதுல கிடைக்கிற வருமானத்தை வச்சுதான் போட்டிகளுக்கு என்னை தயார்படுத்திக்கிறேன். ஸ்பான்சர் வேண்டி போயி நின்னா, பொண்ணுக்கு இதெல்லாம் தேவையா, என்னத்த பண்ணிரும்னு காதுபடவே பேசுவாங்க. என்னா ஆனாலும் சரி இத விட்டுடக் கூடாதுன்னு இயங்கிட்டு இருக்கேன்.’’

பாடிபில்டர் வெரோனிகா

அடுத்து?

’’என் உடல் தான் எனக்கான ஆயுதம். அதை உணர்ந்ததனாலதான் இவ்வளவு தூரம் வர முடிஞ்சது. ஆர்வம் இருக்குற பெண்கள்கிட்ட பாடிபில்டிங்கை கொண்டுபோய் சேர்க்கணும், அவங்களை இங்க அழைச்சுட்டு வரணும். அதை செய்வேன்னு நம்புறேன்.’’

வாழ்த்துகள் வெரோனிகா!



source https://www.vikatan.com/lifestyle/women/bodybuilder-veronica-shares-her-experience

31. 01.23 | Daily Horoscope | Today Rasi Palan | January - 31 | செவ்வாய்க்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/31012023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

திராவிட மாடல் ஸ்வாகா... அந்தர்பலடி அண்ணாமலை... 'கிழக்கு' கொதிப்பு! | JV Breaks



source https://www.vikatan.com/government-and-politics/politics/delhi-warned-annamalai-and-new-allegation-against-dmk-elangovan-explains

தனித்து களம் காணும் தேமுதிக... ஈரோடு கிழக்கு கணக்கு தான் என்ன?!

2021 சட்டமன்ற தேர்தலின் போது சீட் கொடுப்பதில் அதிமுக-வுடன் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் கூட்டணியிலிருந்து தே.மு.தி.க விலகியது. இதேபோல், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்து களம் கண்டது. தற்போதைய அரசியலில் தனித்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தே.மு.திக, வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியை மாற்றி அமைக்கும் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச்சூழலில், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4-ம் தேதி காலமானார். அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த கையோடு அங்குத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தல்

தி.மு.க தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு அத்தொகுதியை விட்டுக்கொடுத்துள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோல, அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை பிரச்னையால் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க உடன் கூட்டணியில் இருப்பதால் பா.ஜ.க-வும் இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்தச்சூழலில், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே சுதீஷ் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஈரோடு இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

மா.செ கூட்டம்

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ``ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க தனித்துப் போட்டியிடும். ஈரோடு கிழக்கில் மாவட்டச் செயலாளர் ஆனந்த் வேட்பாளராகப் போட்டியிட உள்ளார்" என்று அறிவித்திருக்கிறார். ஏற்கனவே, சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க படுதோல்வியை சந்தித்தது. இந்தநிலையில், இடைத்தேர்தலில் தனித்து களம் இறங்கியுள்ள தே.மு.தி.கவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம்,

ஆனந்த்

``மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தான் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். வெற்றியோ, தோல்வியோ தேர்தலில் நிற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் தே.மு.தி.க இருக்கிறது. 2011-ம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாங்கள் வெற்றிபெற்றோம். அதே நம்பிக்கையுடன் தான் இப்போதும் களம் காண்கிறோம். தே.மு.தி.க தொடங்கியது முதல் தற்போது வரை அனைத்து இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் எங்களுக்கு அமையும். ஓருரி நாள்களில் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி அறிவிக்கப்படும். பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் நேரடி பிரசாரத்திற்குச் செல்வார்கள். விஜயகாந்த் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அவர் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வாரா என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் சொல்வோம்" என்கின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-is-dmdk-strategy-stand-alone-in-erode-east-by-election

"என் நடத்தை குறித்து அவதூறாகப் பேசினார் அந்த ஆசிரியர்!" – தாடி பாலாஜியின் மனைவி நித்யா

கார் நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா மீது அவரது எதிர் வீட்டுக்காரர் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக நித்யா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பரபரப்பு விவகாரம் தொடர்பாக நித்யாவிடம் பேசினோம்.

"மணி என்கிற அந்த நபர் ஆசிரியரா இருந்து இப்ப பணி ஓய்வு பெற்ற பிறகு மளிகைக் கடை நடத்திட்டு வர்றார். அவருக்கும் எனக்கும் இடையில் ஒரு எதிர்வீட்டுக்காரருடன் இருக்கக் கூடிய சுமூகமான நட்பு நீண்ட நாள்களாகவே கிடையாது. ஏன்னா, எனக்கும் என் கணவர் பாலாஜிக்கும் இடையில் பிரச்னை நடந்த போது இவர்தான் முழுக்க முழுக்க பாலாஜிக்கு ஆதரவா செயல்பட்டு வந்தார்.

நித்யா

என் வீட்டுல நடக்கிற விஷயங்கள் குறித்துப் பாலாஜிக்குத் தகவல் சொல்றதே இவர்தான். பாலாஜி என்னை அடிச்ச போது அதை வேடிக்கை பார்த்தவர். அந்த நாள்கள்ல நான் அவருடைய ஆதரவைக் கூடக் கேட்டிருக்கேன். ஆனா அவர் உதவலை. அதனாலேயே எங்களுக்கிடையில் சரியான பேச்சுவார்த்தை இல்லை. அதனாலதான் சின்னச் சின்ன பிரச்னையைக் கூட பூதாகரமாக்கிச் சண்டைக்கு வருவார்.

கடந்த பொங்கல் பண்டிகை அன்னைக்குக் கூட குடும்பத்துடன் என்கூட சண்டைக்கு வந்தார். கெட்ட கெட்ட வார்த்தைகள்ல என் நடத்தை குறித்தெல்லாம் அவதூறாகப் பேசினார். நானும் வயசுல பெரியவரா இருக்காரேன்னு மரியாதையாத்தான் பேசிட்டிருந்தேன். ஆனா எவ்வளவு நாள்தான் பொறுத்துட்டிருக்க முடியும்? அதனால சமயத்துல நானுமே அவர் பேசியதுக்கு மறு பேச்சு பேசினேன்.

இப்ப கார் நிறுத்தற பிரச்னையில நான்தான் அவர் காரை சேதப்படுத்தினேன்னு சொல்றது பொய். வீடியோ ஃபுட்டேஜ்ல நான் அந்த காரை கடந்து போறது மாதிரிதான் இருக்கு. அன்னைக்கு 'துணிவு' படம் பார்த்துட்டு ராத்திரியில நான் வீட்டுக்கு வந்தேன். அப்ப எடுத்த ஃபுட்டேஜ் அது. மத்தபடி நான் அவரது காரை சேதப்படுத்தலை. போலீஸ்ல தற்கொலை செய்து கொள்வேன்னு சொல்லி நாடகமாடி வழக்குப் பதிய வெச்சிருக்கார்.

தாடி பாலாஜியுடன் நித்யா

அதனாலதான் இந்தக் கேஸை நானும் எதிர்கொள்ளலாம்ன்னு முடிவு செய்துட்டேன். அதேநேரம் என்னை அவர் அவதூறா பேசினது குறித்து போலீஸ்ல புகார் தர இருக்கேன்’’ என்றவரிடம், "இந்தப் பிரச்னையில் பாலாஜியின் தூண்டுதல் இருக்குமென நினைக்கிறீர்களா?" என்றதற்கு, "அப்படி நான் நினைக்கலை. அதேநேரம், இருந்தாலும் அது குறித்தெல்லாம் எனக்குக் கவலை இல்லை" என்றார்.



source https://www.vikatan.com/news/television/actor-thadi-balajis-wife-nithya-talks-about-the-accusations-on-her

மோடியின் செல்லப்பிள்ளை; அதானி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்... ஹிண்டன்பர்க் சொல்வது உண்மையா?

அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், தொடர் பங்கு வெளியீடு (Follow on Public offer - FPO) மூலம் 20,000 கோடி ரூபாய் திரட்டுகிறது. அந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடு ஜனவரி 27-ம் தேதி அன்று ஆரம்பித்து ஜனவரி 31 அன்று முடிவடைகிறது. அந்த நிறுவனத்தின் பங்குக்கான குறைந்தபட்ச விலை ரூ. 3,112 எனவும் அதிகபட்ச விலையாக ₹ 3,276 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதானி

இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி, புதன் கிழமையன்று அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட பிரபல ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை அதானி நிறுவனத்தை மட்டுமன்றி இந்தியப் பங்கு சந்தையையே ஆட்டம் காணச் செய்யும் நிலையில் உள்ளது.

ஷார்ட் செல்லிங் என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகள் விலை குறையும் என்று கருதி தம்மிடம் இல்லாத பங்குகளை விற்பனை செய்வது ஆகும். அதற்கு ஏற்ப அந்த நிறுவன பங்குகளின் விலை குறைந்தால் மீண்டும் அந்தப் பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி லாபம் பார்க்க முடியும். இவ்வாறு பங்குகளை விற்று விலை குறையும்போது வாங்கி அதிக லாபம் பார்க்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஹிட்டன்பர்க் நிறுவனம் உள்ளது.

106 பக்க ஆய்வறிக்கை..!

புதன்கிழமை அந்த நிறுவனம் அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை தாம் ஷார்ட் செல்லிங் செய்துள்ளதாக குறிப்பிட்டு அதானி குழுமத்தைப் பற்றி பல்வேறு புகார்கள் அடங்கிய நீண்ட 106 பக்க ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை இரண்டு ஆண்டுகளாக தான் தயாரித்து வந்ததாகவும், இந்த ஆய்வறிக்கை தொடர்பாக அதானி குழுமத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்களிடம் பேசி தகவல்களை திரட்டிதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பர்க்

அந்த ஆய்வறிக்கையில் அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு தமது பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு விலை ஏற்றி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மொரீஷியஸ், ஐக்கிய அரபு நாடுகள் (அமீரகம்) மற்றும் கரீபியன் தீவுகள் போன்ற வருமான வரி சொர்க்கபுரியான நாடுகளிலிருந்து போலியாக கம்பெனிகளைத் தோற்றுவித்து அதன் பங்குகளை விலை ஏற்றியதாகப் பல்வேறு சான்றுகளை அந்த ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.

மேலும் அதானி குழுமத்தில் பெரும்பாலான பங்குகள் அந்த நிறுவனத்தின் குடும்பத்தைச் சார்ந்த நபர்களிடம் மட்டும் இருப்பது பற்றியும் பல்வேறு சான்றுகள் தரப்பட்டிருந்தன. அந்த நிறுவனத்தின் உண்மையான மதிப்பிலிருந்து தற்போதைய பங்குகளின் விலை 85% அதிகமாக இருப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும், அதானி நிறுவனம் வாங்கியுள்ள அதிகபட்ச கடன் பற்றியும் அது குறித்து கிரெடிட் சைட் நிறுவனம் முன்பு வெளியிட்ட ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டியும் பல்வேறு கேள்விகளை ஹிண்டன்பர்க் நிறுவனம் எழுப்பியுள்ளது. மொத்தமாக பல்வேறு விதமான 88 கேள்விகளை அதானி குழுமத்திடம் அந்த ஆய்வறிக்கை முன் வைக்கிறது.

அதானி

அதானி நிறுவனத்தின் பங்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 முதல் 20 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், அந்த ஆய்வறிக்கை அதானி குடும்பத்துக்கு அரசிடம் கிடைத்துள்ள சலுகைகள் பற்றியும், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி இந்தத் தவறுகளைக் கண்டும் காணாது இருப்பது பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த ஆய்வறிக்கை தான் ஒட்டு மொத்த பங்கு சந்தையிலும் முக்கிய பேசுபொருளாக தற்போது விளங்குகிறது. இந்த ஆய்வறிக்கை வெளியான புதன்கிழமை அன்று அதானி குழுமத்தின் பெரும்பாலான பங்குகள் 5% முதல் 8% வரை சரிவுடன் முடிந்தன.

இந்த ஆய்வறிக்கை பற்றி உடனடியாகக் கருத்து வெளியிட்ட அதானி நிறுவனம், தொடர் பங்கு வெளியீடு ஆரம்பிக்கும்போது வேண்டுமென்றே நிறுவனத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்குப் புறம்பான விஷயங்களைத் திரித்து ஷார்ட் செல்லிங் மூலம் லாபம் கிடைப்பதற்காக ஹிண்டன்பர்க் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், நம் நாட்டிலோ, அமெரிக்காவிலோ ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக இது தொடர்பாக வழக்கு தொடுப்பதற்கு முன்னெடுப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயங்களாகவே இருக்கின்றன. தனது லாபத்துக்காக ஹிண்டன்பர்க் நிறுவனம்  தற்போது இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது என்று மூத்த முதலீட்டாளர்களும் கூறி வருகின்றனர்.

சென்ற டிசம்பர் அன்று அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியிடம் நிறுவனம் பெற்றுள்ள அதிகப்படியான கடன் பற்றியும் பங்குகள் விலை அதிகரித்து வருவது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டபோது தமது நிறுவன கடன்களைப் பற்றி முதலீட்டாளர்களோ, கடன் கொடுக்கும் வங்கிகளோ எப்போதும் கேள்வி எழுப்புவதில்லை. அவர்கள் அனைவருக்கும் தமது நிறுவனத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு தமது நிறுவனம் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக வரும் காலத்தில் விளங்கும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். 

கௌதம் அதானி

அவர் கருத்துக்கு வலுசேர்க்கும் விதத்தில் புதன்கிழமை அன்று ஆங்கர் முதலீட்டாளர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்டிருந்த 6,000 கோடி ரூபாய் பங்குகளுக்கான விண்ணப்பத்துக்கு விற்பனைக்காக  9,000 கோடி ரூபாய் அளவுக்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன.  பிரபல வெளிநாட்டு முதலீட்டாளர்களான மலேசியாவைச் சேர்ந்த மே பாங்க், மார்கன் ஸ்டான்லி, நமது நாட்டின் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களான எல்.ஐ.சி இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி லைஃப், எஸ்.பி.ஐ லைஃப் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தப் பிரிவில் பங்குகளுக்கு விண்ணப்பித்திருந்தன. ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான பிரிவில் ஒன்றரை மடங்கு அதிக விண்ணப்பம் இந்த நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

என்றாலும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் வரலாற்றையும் நாம் புறம் தள்ளிவிட முடியாது. இதுவரை அந்த நிறுவனம் 30 நிறுவனங்களைப் பற்றிய ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த ஆய்வறிக்கை வெளியான நாளில் சராசரியாக அந்த 30 நிறுவனங்களும் 15% விலை குறைந்தது. அறிக்கை வெளியான ஆறு மாதங்களில் அந்த 30 நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 26% குறைந்து வர்த்தகமாகியது. அதனால், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் தாக்கம் வரும் காலத்தில் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஹிண்டன்பர்க்

ஆனால், இந்த ஆய்வறிக்கை காரணமாக அதானி நிறுவனங்களின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 48,000 கோடி ரூபாய் பங்கு விலை மாற்றம் காரணமாகக் குறைந்துள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் உலக அளவில் மூன்றாவது பணக்காரராக இருந்த கௌதம் அதானி புதன்கிழமை சரிவுக்குப் பிறகு நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். டெஸ்லா நிறுவனர் மீண்டும் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தொடங்கும் தொடர் பங்கு வெளியீட்டுக்கான முதலீட்டாளர்களின் ஆர்வம் எவ்வாறு இருக்கப் போகிறது என்ற முக்கிய கேள்வி எழுந்துள்ளது. அதானி குழுமம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க இருப்பதைப் பற்றி ஹிண்டன்பர்க் நிறுவனத்திடம் கேள்வி கேட்கப்பட்டபோது தாம் தன் நிலைப்பாட்டில் இருந்து மாறப்போவதில்லை என்றும் அதானி குழுமம் அமெரிக்காவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் சவால் விட்டுள்ளது.

இந்தப் பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சிகளும் தற்போது கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. அதானி நிறுவனங்களுக்கு அரசு பல்வேறு சலுகைகள் தருவதை பல்வேறு எதிர்க்கட்சிகளும் பல ஆண்டுகளாகவே புகார் கூறி வருகின்றன. 'மோடியின் செல்லப்பிள்ளை அதானி' என்று ஆரம்பித்து தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. தற்போது, அவர்களின் குரல்களுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக  ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

டிசம்பர் மாதத்துக்கான காலாண்டு முடிவுகள் தற்போது வெளிவர தொடங்கி இருக்கின்றது. இன்னும் சில வாரங்களில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பெரும்பாலான அதானி குழுமத்தில் காலாண்டு முடிவுகள் வெளிவர இருக்கின்றன. இதன் காரணமாகவும் அதானி நிறுவன பங்குகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாக வாய்ப்பிருக்கிறது.

பங்குச் சந்தைகள் தொடர்பான பல்வேறு விதமான மோசடிகள் கடந்த ஆண்டுகளில் நடந்துள்ளன. இது போன்ற மோசடிகள் நடைபெற்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் பங்குச் சந்தை கட்டமைப்பான செபி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு முதலீட்டாளர்கள் நலனை தொடர்ந்து காத்து வருகிறது. என்றாலும், இன்னும் பல்வேறு மோசடிகள் பங்குச் சந்தையில் தொடர்ந்தபடி தான் இருக்கிறது. அந்த மோசடியில் இருந்து காக்கும் நடவடிக்கைகளில் செபி மேலும் முனைப்பு காட்ட வேண்டும் என்பதே புதன்கிழமை கடுமையான நஷ்டத்தை சந்தித்த அதானி குழும முதலீட்டாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.



source https://www.vikatan.com/business/finance/is-it-true-what-american-company-hindenburg-says-against-adani-group-companies

கார்ட்டூன்

கார்ட்டூன்


source https://www.vikatan.com/government-and-politics/cartoon/cartoon-vikatan-plus-february-05-2023

30. 01.23 | Daily Horoscope | Today Rasi Palan | January - 30 | திங்கட்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/30012023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

நெல்லை: டேங்கர் லாரியும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து; இருவர் பலியான சோகம்!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள கழுநீர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வரதராஜன் (27). திசையன்விளை அருகே செயல்பட்டுவரும் தனியாருக்குச் சொந்தமான அழைப்பிதழ் அச்சடிக்கும் நிறுவனத்தில் எலெக்ட்ரீசியனாக வேலை செய்துவந்தார். அந்த நிறுவனத்தில் சென்னையைச் சேர்ந்த சாம்ராஜ் (35) என்பவரும் இயந்திரப் பணியாளராக வேலை செய்துவந்தார்.

நண்பர்களான சாம்ராஜ், வரதராஜன்

வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட பழக்கத்தில் நெருங்கிய நண்பரான இருவரும், நிறுவனத்திலுள்ள ஒரு அறையில் தங்கியிருந்து வேலை செய்திருக்கின்றனர். இருவரும் பொருள்கள் வாங்குவதற்காக அடிக்கடி பைக்கில் திசையன்விளை சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர். அதன்படி இருவரும் திசையன்விளையை அடுத்த குமாரபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர் திசையிலிருந்து பெட்ரோல் ஏற்றிவந்த டேங்கர் லாரி பைக்மீது நேருக்கு நேர் மோதியிருக்கிறது.

டேங்கர் லாரி மோதியதால் இருவரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். அதில், வரதராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த அடியுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த சாமராஜ், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.

விபத்து நடந்த இடத்தில் கிடக்கும் உடல்

இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. விபத்து காரணமாக நண்பர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சக ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இது குறித்து திசையன்விளை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.



source https://www.vikatan.com/news/accident/two-youths-died-on-the-spot-as-a-tanker-lorry-collided-with-the-bike

சனி, 28 ஜனவரி, 2023

`For Girls By Girls' Event: வாழ்க்கையில் கடந்து வந்த கடினமான பாதையைப் பகிர்ந்து கொண்ட மாணவிகள்!

பெண் குழந்தைகளுக்கான கல்வி, பெண்களுக்கான சம உரிமை சார்ந்து தொடர்ச்சி சமூகத்தில் குரல்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அதன் விளைவாக பல மாற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

ஆனால், இன்றும் பழைமைவாதத்தைப் பின்பற்றும் மக்கள் இருக்கினறனர். அதை உடைத்துதான் பெண்கள் பொதுதளத்தில் சாதித்து வருகின்றனர். அத்தகையை பெண்கள் தங்களின் வாழ்க்கை பயணத்தை, தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு CRYஅமைப்பு நடத்திய `For Girls By Girls' நிகழ்ச்சியின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பகிர்ந்துகொண்டனர். 

'For Girls By Girls' Event

இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக Human rights educaction of protection council மனித உரிமை களம் இயக்குநர் பரதன் அவர்கள் தொடங்கி வைத்தார். இளம் பெண்களை பள்ளி படிப்புடன் நிறுத்திவிட்டு அவர்களை கூலி தொழில்களுக்கும் அனுப்புவதும் திருமணம் செய்து கொடுப்பதும் திருநெல்வேலி, தென்காசி போன்ற பகுதிகளில் இன்றும் நடக்கின்றன. இசக்கியம்மாள், முத்துலட்சுமி, ப்ரீத்தி மற்றும் அபிநயா அந்தச் சூழலிலிருந்து விடுபட்டு, தாங்கள் எப்படி போராடி கல்லூரி படிப்பை அடைந்தனர் என்பது குறித்து பகிர்ந்து கொண்டனர். 

திருநெல்வேலி மாவட்டம் , தேவர்குளம் என்ற ஊரைச் சேர்ந்த முத்துலட்சுமி, 20 . மூன்று பெண் பிள்ளைகளுடன் பிறந்தவர். அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருமணம் செய்ய திட்டமிடப்பட்டது. CRY-Child Rights and You(NGO) உடன் இணைந்து செயல்படும் "மனித உரிமை களம்" தலையிட்டு அந்த திருமணம் தடுக்கப்பட்டது. தற்போது அவர் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர்கள் அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டியவர் திருநெல்வேலியை சேர்ந்த community organizer வர்கீஸ்ராணி.

'For Girls By Girls' Event

இதுமட்டுமில்லாமல் சென்னை SC STEDS"The Slum Children's Sports Talent Education Development Society " மற்றும் "மனித உரிமை களம் " இயக்குனர் பரதன் உதவியுடன் இன்று கால்பந்து போட்டிகளில் கலக்கி வரும் இளம்பெண்கள் யமுனா, ஜனனி மற்றும் கார்த்தீஸ்வரி தங்களின் கதைகளை பகிர்ந்து கொண்டனர். இந்த மூன்று பெண்களும் தற்போது கால்பந்து போட்டிகளில் சாதனையாளர்களாக திகழ்ந்து வருகின்றனர். உரிமை மறுக்கப்பட்ட பெண் குழந்தைகள் ஒரு போதும் தன் கனவை கைவிட வேண்டியதில்லை. இவர்களைப் போல இருக்கும் பல பெண்களுக்கு இந்த மாணவிகள் மிகப்பெரிய உந்துசக்தி என்பதாக இந்நிகழ்ச்சி அமைந்தது.



source https://www.vikatan.com/news/women/news-about-for-girls-by-girls-event-held-at-chennai

மதுரை மத்திய சிறைக்கு ஒரே நாளில் 4540 புத்தகங்கள்; ஆச்சர்யப்படுத்திய மக்கள்.!

மதுரை மத்திய சிறைவாசிகளுக்கு ஒரே நாளில் 4540 புத்தகங்களை வழங்கி மதுரை மக்கள் சாதனை புரிந்துள்ளனர்.

அது மட்டுமின்றி பொதுமக்கள் எப்போது வேண்டுமானலும் புத்தகங்களை வழங்க ஏதுவாக புத்தகங்கள் வழங்கும் மையத்தை சிறைத்துறை ஏற்படுத்தியிருக்கிறது.

புத்தகம் வழங்கும் விழா

சமீபத்தில் மக்களிடமிருந்து திரட்டப்பட்ட புத்தகங்களை மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன் சிறைத்துறை டி.ஐ.ஜி பழனியிடம் வழங்கினார். அதைத்தொடர்ந்து, சிறைக்கு வெளியில் புத்தக தானம் செய்யும் மையமும் திறந்து வைக்கப்பட்டது.

இதுகுறித்து நம்மிடையே பேசிய சிறைத்துறையினர், "தமிழகத்தில் புழல், புழல்-2, மதுரை, திருச்சி, கோவை, பாளையங்கோட்டை, சேலம், கடலூர் உள்ளிட்ட 9 இடங்களில் மத்திய சிறைகள் செயல்பட்டு வருகின்றன.

சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. சிறைவாசிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட 'சிறை அங்காடி'கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதுபோல் சிறைக்குள் ஸ்டேஷனரி பொருட்கள் தயாரிப்பு, நெசவு, விவசாய உற்பத்தி என பல பணிகளை சிறைவாசிகள் செய்து வருகிறார்கள்.

மதுரை மத்திய சிறை

இதனுடன் சிறைக்கைதிகள் மன அழுத்தம் நீங்க ஆலோசனைகளும், மனநல போதனை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் சிறைவாசிகள் மன அழுத்தம் நீங்கி நல்வழியில் மனதைச் செலுத்தக்கூடிய புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை சிறைத்துறை தொடங்கியுள்ளது.

சிறைக்கைதிகளின் நலன் சார்ந்து சிறைத்துறை டிஜிபி அம்ரேஸ் புஜாரி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் முக்கியமானது கைதிகளுக்கு புத்தக வாசிப்பை அதிகப்படுத்தி அவர்களிடம் மனமாற்றத்தைக் கொண்டு வர வேண்டுமென்பதுதான். அதற்காக உருவானதுதான் புத்தக தான திட்டம்.

சென்னையில் தலைமைச்செயலாளர் தான் எழுதிய புத்தகங்களை வழங்கியபோது

அனைத்து மத்திய சிறைகளிலும் உள்ள நூலகங்களில் உலக அறிஞர்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, நீதி நெறி நூல்கள், நன்னடத்தை வழிகாட்டி புத்தகங்கள் போன்றவற்றை அதிகளவில் வைத்திருந்தாலும், இதில் மக்கள் பங்களிப்பையும் கொண்டு வரவேண்டும். அவர்களுக்கும் சிறைக்கைதிகளை நல்வழிப்படுத்தும் எண்ணம் வரவேண்டும் என்ற நோக்கில் அவர்கள் தரும் நல்ல புத்தகங்களை பெறவும் சிறைத்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னையில் நடந்த புத்தகத் திருவிழாவில் சிறைத்துறை ஸ்டாலில் பங்கேற்று கவிஞர் வைரமுத்து இத்திட்டத்தை ஊக்கப்படுத்தினார். இந்த முயற்சிக்கு தமிழக அரசின் நூலகத்துறையும் ஆதரவு கொடுத்தது. அதன் மூலம் கைதிகளுக்காக புத்தகம் சேகரிக்கும் முயற்சியை சிறைத்துறை நிர்வாகம் தொடங்கியது. அங்கு நிறைய புத்தகங்கள் சேர்ந்தன.

சென்னை புத்தகத் திருவிழாவில்

ஒரு லட்சம் புத்தகங்களை பொதுமக்களிடமிருந்து நன்கொடையாக பெற வேண்டும் என சிறைத்துறை திட்டமிட்டதன் தொடர்ச்சியாக மதுரை மத்திய சிறை நிர்வாகம் கைதிகளுக்கு புத்தக தானம் பெறுவதற்கான முயற்சிகள் தொடர்ந்தது.

அதன் விளைவாக முதல்கட்டமாக 4540 புத்தகங்களை வழங்கி மதுரை மக்களும் பல்வேறு அமைப்புகளும் சேகரித்து வழங்கியுள்ளனர். இந்த பணி தொடரும்" என்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நல உதவி

"சிறைவாசிகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சிறைவாசிகளின் ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட சதவிகிதத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, அது அதிக தொகையாக சேரும்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அழைத்து நல நிதியாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மத்திய சிறையில் சில நாட்களுக்கு முன் 16 வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 25 பேருக்கு ரூ 7,25,000 நலநிதி வழங்கப்பட்டது" என்ற தகவலையும் தெரிவித்தார்கள். இதுபோன்ற நல்ல செயல்களின் வழியே சிறைச்சாலைகளில் கைதிகளின் புதிய வாழ்வுக்கு வகை செய்வது சமூகத்துக்கு நல்லது.



source https://www.vikatan.com/literature/books/news-about-madurai-central-jails-book-donation-scheme

ம.பி., ராஜஸ்தானில் விமானப்படை விமானங்கள் விபத்து - ஒரே நாளில் நடந்த இரு அதிர்ச்சி சம்பவங்கள்

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் விமான தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுகோய்-30, மிராஜ் 2000 எனும் இரண்டு பயிற்சி விமானங்களும் மொரேனா அருகே மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றன என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

இந்த விபத்து காலையில் நடந்ததாக மொரேனா ஆட்சியாளர் தெரிவித்திருக்கிறார். மேலும், சுகோய்-30-ல் இருந்த விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்குச் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருக்கின்றன. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதே போன்று, ராஜஸ்தான், பரத்பூரில் விமானப்படையின் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியிருக்கிறது. இது தொடர்பக பரத்பூர் மாவட்ட ஆட்சியர் அலோக் ரஞ்சன், "சார்ட்டர் ஜெட் விமானம், பரத்பூர் அருகே விபத்துக்குள்ளாகியிருக்கிறது. மீட்புப் பணிகளை மேற்கொண்டுவருகிறோம். அடுத்தகட்ட விசாரணைக்குப் பின்பே மேலதிகத் தகவல்கள் வெளிவரும்" எனத் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/news/accident/chartered-plane-crashes-in-rajasthans-bharatpur

ஜி-20 மாநாடு புதுச்சேரி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பை பலபடுத்தும் விதமாக மாநில எல்லையில் தீவிர சோதனைக்குப் பிறகே வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறது
விஐபிகள் தங்கும் சொகுசு விடுதிகளில் கமாண்டோ படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
விஐபிகள் தங்கும் சொகுசு விடுதிகளில் அசாம்பாவிதஙகள் நடைபெறாமல் இருக்க மணல் மூட்டைகள் அமைத்து அரண் அமைக்கும் பொதுபணித்துறை ஊழியர்கள்
நகரப் பகுதியில் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகளுக்கு வண்ணம் பூசப்படுகிறது
நகரப் பகுதியில் சாலை நடுவே உள்ள பூங்காக்களை தூய்மை படுத்தும் பணியில் பெண்கள்
பாதுகாப்பான பயணத்துக்காக சாலைகள் அவசர அவசரமாக அமைக்கப்படுகிறது
அரசு சுவர்களில் உள்ள சுவரொட்டிகளை முழுவதும் அகற்றிய பின் வெள்ளை வண்ணம் பூசப்படுகிறது
விஐபிகள் தங்கும் சொகுசு விடுதிகளில் பலத்தை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மணல் மூட்டைகள் அடுக்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கமாண்டோ
சாலையோரங்களில் உள்ள தேவையற்ற மரங்களை அகற்றும் ஊழியர்கள்
பயணத்துக்காக சாலைகள் அவசர அவசரமாக அமைக்கப்படுகிறது
நகரப் பகுதியில் ஆங்காங்கே துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்


source https://www.vikatan.com/government-and-politics/policy/g-20-conference-at-pondicherry