``அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் துறையை ஏன் தனியாருக்குக் கொடுக்கவேண்டும்" என்று திட்டவட்டமாக மறுக்கிறார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.
பெரம்பலூர் மாவட்டம், மேல உசேன் நகரம் கிராமத்தில் ரூ.1 கோடியே 28 லட்சம் மதிப்பிலான மறுசீரமைப்பு குடிநீர் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம், ``அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வருகிறதே?" என்று கேள்வி எழுப்பியதற்கு,
``அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாணவர்களுக்கு இலவச பயணத் திட்டம், பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் என பல்வேறு திட்டங்களைத் தமிழக முதல்வர் வழங்கி வருகிறார்கள். இந்தத் திட்டங்கள் அனைத்தும் தொடரும்.
சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் துறையை ஏன் தனியாருக்குக் கொடுக்கவேண்டும். தனியார் மயம் என்ற பேச்சுக்கு இடமில்லை... தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குப் புதிதாக 2,000 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. அதற்கான டெண்டர் விரைவில் கோரப்பட்டு,
அதில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் மூலம் புதிய பேருந்துகள் வாங்கப்படும். விரைவாக புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த வேண்டும் எனத் தமிழக முதல்வர் அறிவுரை வழங்கி உள்ளதால் அதற்கான நடைமுறை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையில் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு சில கோரிக்கைகள் மட்டும் தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்பட இருக்கிறது.” என்றார்
சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக உலவும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``சென்னையில் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். தனியார் பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது.
அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சென்னையில் இயக்கப்பட்ட பெரும்பாலான மினி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் எந்த வழித்தடங்களில் மினி பேருந்துகள் தேவை என்பதைக் கண்டறிந்து அவற்றை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/why-should-the-transport-sector-be-privatized-transport-minister-sivasankar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக