Ad

புதன், 13 ஜூலை, 2022

சென்னை: மேயர் பிரியாவின் டி.பி வைத்த வாட்ஸ்அப் நம்பரிலிருந்து மெசேஜ் - மோசடி கும்பலைத் தேடும் போலீஸ்

அரசு அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி நன்கொடை, பண உதவிகளை கேட்டு மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதில் சிலர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் மோசடி கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தநிலையில் மாவட்ட கலெக்டர்கள் பெயரைப் பயன்படுத்தி பணம் பறித்த சம்பவங்களும் நடந்தன. ஆனாலும் மோசடி கும்பல் சிக்கவில்லை.

மேயர் போட்டோவை டிபியாக வைத்த வாட்ஸ்அப் நம்பர்

இந்தச் சூழலில்தான் சென்னை மேயர் பிரியாவின் புகைப்படத்தை டிபி யாக வைத்து மோசடி கும்பல் பணப்பறிப்பில் ஈடுபட முயன்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேயர் பிரியாவின் உதவியாளர் சிவசங்கர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், `மேயர் பிரியாவின் புகைப்படத்தை டிபியாக வைத்துக்கொண்டு மோசடி கும்பல் வாட்ஸ்அப் மூலமாக மண்டல அதிகாரிகளிடம் வழக்கம் போல பேச தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு அமேசான் கிப்ட் கார்டு அனுப்பி அதில் பணம் அனுப்பும்படி கூறிவருகின்றனர். இந்தத் தகவலை மண்டல அதிகாரிகள் மேயர் பிரியாவிடம் தெரிவித்தபிறகே இப்படியொரு சம்பவம் தெரியவந்தது.

அதனால் சம்பந்தப்பட்ட மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரை பெரியமேடு போலீஸார், சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து எந்த நம்பரிலிருந்து பிரியாவின் டி.பி.யை வைத்து மெசேஜ்கள் அனுப்பப்பட்டது என்பதை சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை மேயர்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மேயர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. புகாரோடு கொடுக்கப்பட்ட ஆதாரத்தில் மேயர் பிரியா, மாநகராட்சி கட்டடம் போட்டோஸ் டி.பியாக வைக்கப்பட்ட வாட்ஸ்அப் நம்பரிலிருந்து மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மோசடி கும்பல் யாரிடம் எல்லாம் பணத்தை மோசடி செய்தார்கள் என்ற தகவல் தெரியவில்லை. மேலும் பணத்தை அனுப்பியதாகவும் யாரும் புகாரளிக்கவில்லை. விரைவில் மோசடி கும்பல் மீது நடவடிக்கை பாயும்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-mayor-pa-complaint-against-fraud-team

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக