தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அ.தி.மு.க., தி.மு.க ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல பா.ஜ.க உடனான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளது எனக் கூறப்படுகிறது. ஆனால், தே.மு.தி.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தான் தொடர்ந்து இழுபறியில் உள்ளது.
தே.மு.தி.க உடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் சுதீஷை கடந்த வாரம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போதும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
Also Read: கூட்டணியிலிருந்து விலகிய கட்சிகள்; பா.ம.க கூட்டணி அறிவிப்பு! - தேர்தல் அறிவிப்பும் அதிரடிகளும்
இந்த நிலையில் அமைச்சர் தங்கமணி இல்லத்தில் தே.மு.தி.க நிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் கூட்டணி தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டது போல் தே.மு.தி.க-வுக்கும் 23 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் அல்லது இருபது தொகுதிகளுடன் ஒரு நாடாளுமன்ற தொகுதியை ஒதுக்க வேண்டும் எனவும் தே.மு.தி.க தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 10.5% வாக்குகள் உள்ள பா.ம.க-வுக்கும், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க-வுக்கும் 22 தொகுதிகளைத் தான் ஒதுக்குவதாக அ.தி.மு.க தலைமை முடிவு செய்துள்ளது.
பிரேமலதா சொல்வது போல தே.மு.தி.க-வுக்கு 10%-க்கும் வாக்குகள் உள்ளன என்பது 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற கணக்கு. அதன் பின் அ.தி.மு.க உடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக சட்டப்பேரவைக்குள் சென்ற போது கூட அதன் வாக்கு விகிதம் 7.9%. இந்த அளவுக்கு வாக்குகள் கிடைத்ததற்கு கூட அ.தி.மு.க உடனான கூட்டணிதான் காரணம். 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தே.மு.தி.க-வின் வாக்கு சதவிகிதம் 2.39-ஆகவும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் 2.19%-ஆகவும் குறைந்து கொண்டே வருகிறது என்றும் புள்ளிவிவரங்களை அடுக்கியுள்ளனர். மேலும், கட்சியின் வாக்கு விகிதம் இப்படி இறங்கு முகத்தில் இருக்கும் போது தே.மு.தி.க-வுக்கு 20 தொகுதிகளை எப்படி ஒதுக்குவது என்றவர்கள், தே.மு.தி.க-வுக்கு 9 அல்லது 10 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் எனத் திட்டவட்டமாக கூறிவிட்டார்களாம்...
அ.தி.மு.க-வினரின் பேச்சில் அதிருப்தி அடைந்த தே.மு.தி.க-வினர் கூட்டணியை உறுதி செய்து விஜயகாந்த் கையெழுத்திட்ட கடிதத்தை மட்டும் கொடுத்துவிட்டு வந்துள்ளனர். தொகுதி பங்கீடு தொடர்பான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. அதாவது கூட்டணியில் தொடர்கிறோம். ஆனால் தொகுதி பங்கீடில் இழுபறி நிலையே.
பேச்சுவார்த்தை தொடர்பாக தே.மு.தி.க வட்டாரத்தில் பேசியபோது “குறைந்தது இரட்டை இலக்கில் இடங்களை ஒதுக்கி தே.மு.தி.க-வை கௌரவப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. ஆனால், அ.தி.மு.க தரப்பில் இரட்டை இலக்கு என்ற இடத்திற்கே செல்லத் தயங்குகிறார்கள்” என்றனர் ஆதங்கத்துடன்...
source https://www.vikatan.com/news/politics/admk-is-reluctant-to-give-what-the-dmdk-is-asking-for-in-2021-assembly-election
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக